அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.) பாக்கம் கோட்டூர் வலைத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது, இன்றைய நாகை மாவட்டச் செய்திகள்:நாகப்பட்டினம் மாவட்டத்தில் வக்ஃப் வாரியத்தில் பதிவு பெற்ற வக்ஃப் நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம்-30-07-21, தெரியுமா உங்களுக்கு? நாகை மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் பெயர் பெயர் திரு. லியாக்கத் அலி

புதன், 19 செப்டம்பர், 2018

அன்பிற்கினிய ஆலிமா’ பெருமக்களுக்கு:



அன்பிற்கினிய ஆலிமா’ பெருமக்களுக்கு:

நாளைய சமூகத்தை நலமாய் சமைக்க இருக்கும் கோட்டூர் மதரஷத்துன் நிஸ்வான் ‘ஆலிமா’ பெருமக்களுக்கு வாழ்த்துக்களும் இறைவன் புறத்திலிருந்து அமைதியும் நலமும் உண்டாகட்டுமாக!

கடந்த மூன்று வருடங்களாக சில ‘ஆலிமா’ பெருமக்களை படைத்து சமூகத்திற்கும், சார்ந்த ஊருக்கும் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறது கோட்டூர் பெண்கள் மதரஸா, இதை வெறும் பெருமைக்காக சொல்லிக் கொண்டு கடந்து செல்லக் கூடிய ஓர் சாதாரண நிகழ்வாக நாம் ஒருபோதும் கடந்து விட முடியாது.

இதில் பல நல்லுள்ளங்களின் சமூக மேம்பாட்டிற்கான அர்ப்பணிப்பு உணர்வும், தொண்டுள்ளமும் சமூக அக்கறையும் பொதிந்துள்ளது. 

இன்னும் பல ஊர்களில் பள்ளிவாசல்களை செப்பனிடுவதற்கே பல சிரமங்களை எதிர்கொள்ளும் வேளையில் நமதூருக்கு கிடைத்த வரப்பிரசாதமாய் இறைவனின் புறத்திலிருந்து பெண்களுக்கான மதரஸா வரப்பெற்றுள்ளது. இது நிச்சயம் இறைவனின் அருட்கொடையே ஆகும்.
சமூக நலனோடும், குடும்பநலனுக்கு அப்பாலும் சிந்திக்கக் கூடிய சிந்தனை குன்றிப் போயுள்ள ஓர் காலகட்டத்தில் பொதுநலனுக்காக பாடுபட்ட புரவலர்களை கட்டியமைத்திருக்கிறது நமதூர். மாஷா அல்லாஹ்..

பொதுவான கண்ணோட்டத்தில் பலதரப்பட்ட சமுதாயங்களிலும் புரையோடி இருக்கும் பெண் நலம் பேணாமை குறித்த தர்க்கம் நம் சமுதாயத்திலும் கலந்திருக்கக் கூடிய சூழலில் ஓர் சமுதாய முன்னேற்றத்திற்கும், அதன் வளர்ச்சிக்கும் மேலும் சமூக மாற்றத்திற்கும் பெண்களே! அடித்தளமிடுகின்றனர்

என்ற தெளிவான சிந்தனையின் பொருட்டு அவர்களை சிந்தித்து இயங்கக் கூடிய தளத்தில் பொறுப்புணர்வு உடையவர்களாக உருவாக்கம் செய்ய வேண்டும் என்ற மகத்துவ மனோநிலையின் வெளிப்பாட்டால்தான் இன்றைய தினம் நமது கண்முன்னால் இந்த மதரஸா நிலை கொண்டுள்ளது.

இதனை கடந்த காலங்களிலும் சமீபத்திலும் இந்த மதரஸா’வில் கற்று பட்டங்கள் பெற்று இருக்கும் நம் ஆலிமா’ பெருமக்கள் உணர்ந்து சமூகப் பொறுப்பை சுமந்து இறைவனுக்காக அவனது தூதர் வழிநின்று மார்க்கத்தை இனிவரும் தலைமுறைக்கு எடுத்துச் சென்று வழிநடத்தும் கடமை உடையவர்களாக தம்மை நிலை நிறுத்திக் கொள்ளவேண்டும்.

தமது பெருவாரியான நேரங்களை அல்லாஹ்வுக்காக செலவு செய்து மார்க்க கல்வியை கற்றுத் தெளிவடைந்து அதன் பலனாக இன்று மார்க்க அறிஞர்களாக மிளிர்ந்து கொண்டுள்ளீர்கள்.

 இதனை நினைந்து திருப்தி கொண்டிருக்கும் நிலையில் இதைக் கொண்டு சமூக மதிப்படைய வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தோடு நில்லாமல் நீங்கள் பெற்றுள்ள இந்த மதிப்புமிக்க மார்க்க கல்வியை தங்கள் குடும்பத்தார்க்கும், சுற்றத்தார்க்கும் கற்றுத் தெளிவடைய செய்ய வேண்டும்.

அத்தோடு இந்த தெளிந்த தீனுல் இஸ்லாமின் தெளிவான கோட்பாடு களையும், வல்ல ரஹ்மானின் திருமறையை கற்றுணர்ந்தவர்களாகவும், மாநபியின் வாழ்க்கை தடத்தை பின்பற்றி பற்றி பிடித்து செல்லும் நன்மக்களாக அவர்களை மாற்றம் செய்ய வேண்டும் என்ற உளப்பாட்டோடு இனி நீங்கள் இயங்க கடமைப் பட்டுள்ளீர்கள் என்பதை மறக்க வேண்டாம்.

இன்றைய தினம் கற்றறிந்த மார்க்க அறிஞர்களே! சைத்தானிய விழுமியங்களுக்குள் சிக்கி சீரழியும் நிலையில் படித்தறியா பாமர மக்களின் நிலையுணர்ந்து அவர்களை இன்றைய நவீன நச்சுகலப்பில் சிக்கி சீரழியாமல் பாதுகாத்து இனி இந்த இஸ்லாமை தம் வாழ்வின் ஒவ்வொரு அசைவு களிலும் செயல்படுத்தும் சான்றோர் பெருமக்களை பெருமளவில் உற்பத்தி செய்து அவர்களை இஸ்லாத்தினை தாங்கிச் செல்லும் தூண்களாக செம்மைப் படுத்த நீங்கள் கடமைப் பட்டுள்ளீர்கள்.

இன்னும் நிதர்சனமாக கூறவேண்டுமெனில் பெண்களே! ஓர் சமூகத்தின் நலப்பாட்டிற்கு பெரிதும் துணை கொள்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். ஓர் மனிதனின் ஒழுக்கம் சார்ந்த வாழ்வியலை அவனது குடும்ப சூழலே! கட்டியமைக்கிறது.
 அந்த வகையில் தமது வாழ்வின் பெரும் பகுதியான பருவத்தை தமது தாய், சகோதரிகள், மனைவி போன்ற பெண் சமூகத்தோடுதான் ஒவ்வொரு மனிதனும் பயணிக்கிறான். ஆகவேதான்! பெண்களிடமிருந்து பெறப்படும் நலவுகள் யாவும் அவனை எளிதில் அணுகுகின்றன.
இதனடிப்படையில் பெண்கள் சமூகம்! போதிக்கக் கூடிய கற்றறிந்த சமூகமாக இருந்தால் தம்மைச் சார்ந்தோரையும் தமது சந்ததிகளையும் ஒழுக்க மேம்பாட்டில் சிறந்தவர்களாக உருவாக்க முடியும்.
ஆகவேதான்! மார்க்கத்திற்கு எதிரான முரண்களில் திளைத்து நிற்கும் சமூகத்தை மடைமாற்றி அவர்களை இந்த நெறிமிகு தீனுல் இஸ்லாமின் சீர்மிகு கோட்பாடுகளை பற்றிப் பிடிக்கும் நலமிகு சமூகமாக மாற்றிட பெண்களின் பங்கே! பெரும்பகுதியாகும்.
ஓர் பெண்! கற்றறிந்த ஓர் கருத்தியல் ஆளுமையாக வலம்வரும் வேளையில் அவளால் தமது குடும்பத்தாரும், சுற்றத்தாரும் தெளிந்தோராக, நன்னெறி களில் திளைத்தோராக வளம் பெறமுடியும்.
இந்த பாரிய நோக்கத்திற்காகவே! இன்றைய சூழலில் நம் சமுதாய பெண்கள் மார்க்கம் கற்று தரும் அறிவார்ந்த பெண் சமூகமாக ஓங்கி ஒலிக்க வேண்டும்.
இன்று அவர்களை மையப் படுத்தி முத்தலாக் போன்ற விடயங்களை கையில் எடுத்து நயவஞ்சகம் புரியும் பாசிஷவாதிகளை தம் அறிவெனும் ஆயுதம் கொண்டே வீழ்த்தி தமக்கான உரிமைகளை இஸ்லாம் எங்ஙனம் தந்து தம்மை பாதுகாக்கிறது என்பதை உங்களின் தெளிவான மொழிகளில் அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.

மேலும் இந்த மார்க்கம் இன்றைய சூழலில் பலவாறான அச்சுறுத்தலுக்கும் அவப் பெயருக்கும், சூழ்ச்சிகளுக்கும் ஆட்கொள்ளப்பட்டு பல்வேறு சிக்கல்களை சந்தித்துக் கொண்டுள்ளது,

ஆனால் இவற்றையெல்லாம் ஒப்பற்ற கொள்கைநெறி கொண்ட இஸ்லாமிய ஒளியில் உடைத்தெறிய வேண்டிய இளையோர் சமுதாயம் இன்று உணர்ச்சிப் பிழம்பால் சகலவித நிலைகளில் இன்று சமூக வலைத்தளங்களில் பதிலளித்துக் கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது.

இம்மார்க்கம் தம் தலைமீது குப்பைகளை வீசி அவமதிப்பு செய்த பெண்ணை தம் பொறுமையின்பால் மார்க்கத்தின் பக்கம் ஈர்த்த நபிகளாரைத் தந்தது. கோபத்தின் பிறப்பிடமாய் திகழ்ந்த தீரர் உமர்(ரலி) யை சாந்த சொரூபியாக மார்க்கத்தின் பால் பல வெற்றிகளை குவித்த மாவீரராக மடை மாற்றியது.

ஆகவே விளக்கம் எனும் வெளிச்சத்தைக் கொண்டு எதிரிகளின் புரட்டு  வாதங்களை தவிடு பொடியாக்கி தகர்த்து இஸ்லாத்தை ஒட்டுமொத்த உலகுக்கு எடுத்துச் சொல்வோம்.












மண்ணும் மணக்கிற பூமி... இது உங்கள் மனசை அள்ளிச் செல்லும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்த தளம் பற்றிய தங்களின் மேலான கருத்துரைகள் வரவேற்கப்படுகின்றன.