அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.) பாக்கம் கோட்டூர் வலைத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது, இந்த வருடம் முஹர்ரம் மாதம் ஒன்பது மற்றும் பத்தாம் நாளுக்கான ஆஷூரா நோன்பு வருகின்ற 19/09/2018 மற்றும் 20/09/2018 ஆகிய தேதிகளில் தொடங்க இருக்கிறது.

புதன், 19 செப்டம்பர், 2018

அன்பிற்கினிய ஆலிமா’ பெருமக்களுக்கு:அன்பிற்கினிய ஆலிமா’ பெருமக்களுக்கு:

நாளைய சமூகத்தை நலமாய் சமைக்க இருக்கும் கோட்டூர் மதரஷத்துன் நிஸ்வான் ‘ஆலிமா’ பெருமக்களுக்கு வாழ்த்துக்களும் இறைவன் புறத்திலிருந்து அமைதியும் நலமும் உண்டாகட்டுமாக!

கடந்த மூன்று வருடங்களாக சில ‘ஆலிமா’ பெருமக்களை படைத்து சமூகத்திற்கும், சார்ந்த ஊருக்கும் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறது கோட்டூர் பெண்கள் மதரஸா, இதை வெறும் பெருமைக்காக சொல்லிக் கொண்டு கடந்து செல்லக் கூடிய ஓர் சாதாரண நிகழ்வாக நாம் ஒருபோதும் கடந்து விட முடியாது.

இதில் பல நல்லுள்ளங்களின் சமூக மேம்பாட்டிற்கான அர்ப்பணிப்பு உணர்வும், தொண்டுள்ளமும் சமூக அக்கறையும் பொதிந்துள்ளது. 

இன்னும் பல ஊர்களில் பள்ளிவாசல்களை செப்பனிடுவதற்கே பல சிரமங்களை எதிர்கொள்ளும் வேளையில் நமதூருக்கு கிடைத்த வரப்பிரசாதமாய் இறைவனின் புறத்திலிருந்து பெண்களுக்கான மதரஸா வரப்பெற்றுள்ளது. இது நிச்சயம் இறைவனின் அருட்கொடையே ஆகும்.
சமூக நலனோடும், குடும்பநலனுக்கு அப்பாலும் சிந்திக்கக் கூடிய சிந்தனை குன்றிப் போயுள்ள ஓர் காலகட்டத்தில் பொதுநலனுக்காக பாடுபட்ட புரவலர்களை கட்டியமைத்திருக்கிறது நமதூர். மாஷா அல்லாஹ்..

பொதுவான கண்ணோட்டத்தில் பலதரப்பட்ட சமுதாயங்களிலும் புரையோடி இருக்கும் பெண் நலம் பேணாமை குறித்த தர்க்கம் நம் சமுதாயத்திலும் கலந்திருக்கக் கூடிய சூழலில் ஓர் சமுதாய முன்னேற்றத்திற்கும், அதன் வளர்ச்சிக்கும் மேலும் சமூக மாற்றத்திற்கும் பெண்களே! அடித்தளமிடுகின்றனர்

என்ற தெளிவான சிந்தனையின் பொருட்டு அவர்களை சிந்தித்து இயங்கக் கூடிய தளத்தில் பொறுப்புணர்வு உடையவர்களாக உருவாக்கம் செய்ய வேண்டும் என்ற மகத்துவ மனோநிலையின் வெளிப்பாட்டால்தான் இன்றைய தினம் நமது கண்முன்னால் இந்த மதரஸா நிலை கொண்டுள்ளது.

இதனை கடந்த காலங்களிலும் சமீபத்திலும் இந்த மதரஸா’வில் கற்று பட்டங்கள் பெற்று இருக்கும் நம் ஆலிமா’ பெருமக்கள் உணர்ந்து சமூகப் பொறுப்பை சுமந்து இறைவனுக்காக அவனது தூதர் வழிநின்று மார்க்கத்தை இனிவரும் தலைமுறைக்கு எடுத்துச் சென்று வழிநடத்தும் கடமை உடையவர்களாக தம்மை நிலை நிறுத்திக் கொள்ளவேண்டும்.

தமது பெருவாரியான நேரங்களை அல்லாஹ்வுக்காக செலவு செய்து மார்க்க கல்வியை கற்றுத் தெளிவடைந்து அதன் பலனாக இன்று மார்க்க அறிஞர்களாக மிளிர்ந்து கொண்டுள்ளீர்கள்.

 இதனை நினைந்து திருப்தி கொண்டிருக்கும் நிலையில் இதைக் கொண்டு சமூக மதிப்படைய வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தோடு நில்லாமல் நீங்கள் பெற்றுள்ள இந்த மதிப்புமிக்க மார்க்க கல்வியை தங்கள் குடும்பத்தார்க்கும், சுற்றத்தார்க்கும் கற்றுத் தெளிவடைய செய்ய வேண்டும்.

அத்தோடு இந்த தெளிந்த தீனுல் இஸ்லாமின் தெளிவான கோட்பாடு களையும், வல்ல ரஹ்மானின் திருமறையை கற்றுணர்ந்தவர்களாகவும், மாநபியின் வாழ்க்கை தடத்தை பின்பற்றி பற்றி பிடித்து செல்லும் நன்மக்களாக அவர்களை மாற்றம் செய்ய வேண்டும் என்ற உளப்பாட்டோடு இனி நீங்கள் இயங்க கடமைப் பட்டுள்ளீர்கள் என்பதை மறக்க வேண்டாம்.

இன்றைய தினம் கற்றறிந்த மார்க்க அறிஞர்களே! சைத்தானிய விழுமியங்களுக்குள் சிக்கி சீரழியும் நிலையில் படித்தறியா பாமர மக்களின் நிலையுணர்ந்து அவர்களை இன்றைய நவீன நச்சுகலப்பில் சிக்கி சீரழியாமல் பாதுகாத்து இனி இந்த இஸ்லாமை தம் வாழ்வின் ஒவ்வொரு அசைவு களிலும் செயல்படுத்தும் சான்றோர் பெருமக்களை பெருமளவில் உற்பத்தி செய்து அவர்களை இஸ்லாத்தினை தாங்கிச் செல்லும் தூண்களாக செம்மைப் படுத்த நீங்கள் கடமைப் பட்டுள்ளீர்கள்.

இன்னும் நிதர்சனமாக கூறவேண்டுமெனில் பெண்களே! ஓர் சமூகத்தின் நலப்பாட்டிற்கு பெரிதும் துணை கொள்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். ஓர் மனிதனின் ஒழுக்கம் சார்ந்த வாழ்வியலை அவனது குடும்ப சூழலே! கட்டியமைக்கிறது.
 அந்த வகையில் தமது வாழ்வின் பெரும் பகுதியான பருவத்தை தமது தாய், சகோதரிகள், மனைவி போன்ற பெண் சமூகத்தோடுதான் ஒவ்வொரு மனிதனும் பயணிக்கிறான். ஆகவேதான்! பெண்களிடமிருந்து பெறப்படும் நலவுகள் யாவும் அவனை எளிதில் அணுகுகின்றன.
இதனடிப்படையில் பெண்கள் சமூகம்! போதிக்கக் கூடிய கற்றறிந்த சமூகமாக இருந்தால் தம்மைச் சார்ந்தோரையும் தமது சந்ததிகளையும் ஒழுக்க மேம்பாட்டில் சிறந்தவர்களாக உருவாக்க முடியும்.
ஆகவேதான்! மார்க்கத்திற்கு எதிரான முரண்களில் திளைத்து நிற்கும் சமூகத்தை மடைமாற்றி அவர்களை இந்த நெறிமிகு தீனுல் இஸ்லாமின் சீர்மிகு கோட்பாடுகளை பற்றிப் பிடிக்கும் நலமிகு சமூகமாக மாற்றிட பெண்களின் பங்கே! பெரும்பகுதியாகும்.
ஓர் பெண்! கற்றறிந்த ஓர் கருத்தியல் ஆளுமையாக வலம்வரும் வேளையில் அவளால் தமது குடும்பத்தாரும், சுற்றத்தாரும் தெளிந்தோராக, நன்னெறி களில் திளைத்தோராக வளம் பெறமுடியும்.
இந்த பாரிய நோக்கத்திற்காகவே! இன்றைய சூழலில் நம் சமுதாய பெண்கள் மார்க்கம் கற்று தரும் அறிவார்ந்த பெண் சமூகமாக ஓங்கி ஒலிக்க வேண்டும்.
இன்று அவர்களை மையப் படுத்தி முத்தலாக் போன்ற விடயங்களை கையில் எடுத்து நயவஞ்சகம் புரியும் பாசிஷவாதிகளை தம் அறிவெனும் ஆயுதம் கொண்டே வீழ்த்தி தமக்கான உரிமைகளை இஸ்லாம் எங்ஙனம் தந்து தம்மை பாதுகாக்கிறது என்பதை உங்களின் தெளிவான மொழிகளில் அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.

மேலும் இந்த மார்க்கம் இன்றைய சூழலில் பலவாறான அச்சுறுத்தலுக்கும் அவப் பெயருக்கும், சூழ்ச்சிகளுக்கும் ஆட்கொள்ளப்பட்டு பல்வேறு சிக்கல்களை சந்தித்துக் கொண்டுள்ளது,

ஆனால் இவற்றையெல்லாம் ஒப்பற்ற கொள்கைநெறி கொண்ட இஸ்லாமிய ஒளியில் உடைத்தெறிய வேண்டிய இளையோர் சமுதாயம் இன்று உணர்ச்சிப் பிழம்பால் சகலவித நிலைகளில் இன்று சமூக வலைத்தளங்களில் பதிலளித்துக் கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது.

இம்மார்க்கம் தம் தலைமீது குப்பைகளை வீசி அவமதிப்பு செய்த பெண்ணை தம் பொறுமையின்பால் மார்க்கத்தின் பக்கம் ஈர்த்த நபிகளாரைத் தந்தது. கோபத்தின் பிறப்பிடமாய் திகழ்ந்த தீரர் உமர்(ரலி) யை சாந்த சொரூபியாக மார்க்கத்தின் பால் பல வெற்றிகளை குவித்த மாவீரராக மடை மாற்றியது.

ஆகவே விளக்கம் எனும் வெளிச்சத்தைக் கொண்டு எதிரிகளின் புரட்டு  வாதங்களை தவிடு பொடியாக்கி தகர்த்து இஸ்லாத்தை ஒட்டுமொத்த உலகுக்கு எடுத்துச் சொல்வோம்.
மண்ணும் மணக்கிற பூமி... இது உங்கள் மனசை அள்ளிச் செல்லும்.

புதன், 13 செப்டம்பர், 2017

“புவியும் ஓர் அமானிதமே” ஏன்? ஓர் பார்வை....“புவியும் ஓர் அமானிதமே” ஏன்? ஓர் பார்வை....
“சமீபத்தில் சகோதரர் ஒருவருடன் கலந்துரையாடினேன், அந்த கலந்துரையாடலின்போது  அவர் இவ்வாறு குறிப்பிட்டார், இந்த உலகம் என்பது நமக்கானது அல்ல!, இது ஆண்டவனின் அமானிதமாகும்”,

 ஆகவே இதனை நாம் எவ்வாறு உடையவனிடத்தில் இருந்து பெற்றுக் கொண்டோமோ! அதுபோலவே திருப்பி ஒப்படைக்க வேண்டும்.
உடையவன் என்று நாம் குறிப்பிடுவது அந்த ஒப்பற்ற ஓரிறைவனைத்தான். ஆனால் இந்த உலகிடமிருந்து நாம் பெற்றுக்கொண்டதை, அந்த பூமியின் உடையவனிடம் நாம் ஒப்படைப்பது சாத்தியமில்லை,

அப்படியானால் அந்த ஒப்படைவை எங்ஙனம் சாத்தியப் படுத்துவது?.

 இதற்கான விடையையும் அவரே தொகுத்தார், இந்த உலகிடமிருந்து நாம் எந்த நல்லவைகளை எல்லாம் பெற்றுக் கொண்டு பயனடைந்தோமோ!, 

அதனை அப்படியே  திருப்பி ஒப்படைப்பது இறைவனிடம் அல்ல! மாறாக இனிவரும் அவன் படைத்த, படைக்கப் போகும் நமது தலைமுறைக்கே!
இதனை கேட்டபோது எனக்கு அதிலிருந்து பெற்ற அந்த சமூகநோக்கு சிந்தனையில் ஆழ்த்தியது,

ஆம்! எப்படி நாம் நமது சொத்துக்களை சேர்க்கின்றோமோ, பின்னர் அவ்வாறு சேமிக்கப்பட்டதை எல்லாம் எவ்வாறு நாம் நமது தலைமுறையிடம் முறைப்படி ஒப்படைக்கின்றோமோ! 

மேலும் நாம் சம்பாதிக்கும் ஒவ்வொரு சம்பாத்தியத்தையும் எவ்வாறு அது இறைவனால் நமக்கு கொடுக்கப்பட்டது என்றெண்ணி இறைக்கட்டளைக்கு கட்டுப்பட்டு தர்மம் (ஜக்காத் மற்றும் சதகா) செய்கிறோமோ!

அதுபோல்தானே இந்த பூமியில் இருந்து நாம் பெற்றுக் கொண்டதை எல்லாம் அனுபவித்து விட்டு நம்மிடம் எவ்வாறு இறைவன் கொடுத்தானோ? 

அவ்வாறே நமது தலைமுறையிடம் இந்த பூமியை ஒப்படைவு செய்ய வேண்டும் என்பதும்,

சரி, இப்போது இந்த பூமியை அப்படித்தானே நாம் வழக்கமாக நமது தலைமுறையினரிடம் விட்டுச் செல்கிறோம்,

 இப்போது இந்த விளக்கம் தேவைதானா? என்று எண்ணத் தோணும், எங்கே? நாம் அப்படித்தானா விட்டுச் செல்கிறோம்?,

இந்த பூமி தமக்கானது என்ற மமதையில் உழன்றுகொண்டு இருக்கின்றோம், எந்த அளவு அதன் மீது வன்முறை நிகழ்த்த முடியுமோ, அந்த அளவுக்கு அதன் மீது ஓர் பகீரத பிரயத்தனத்தை உபயோகித்து அதனை நாசமாக்குகிறோம்.

பூமியை எவ்வாறு பாதுகாப்பது என்றால் அது நிலம், நீர் மற்றும் காற்று மாசடையாமல் பார்த்துக் கொள்வது, இன்று அப்படியாகவா இருக்கிறது!

 ஏற்கனவே நீரின்றி வறண்டு கிடக்கும் இந்த பூமியில் மேலும் பாழ்படுத்தும் முகமாய் பிளாஸ்டிக் கழிவுகளை உரமிட்டு வைக்கிறோம், உரம் என்பது நன்றாக செழிக்கவைப்பது ஆனால் இந்த பிளாஸ்டிக் உரமோ! செழித்தோங்குவதை அழித்து நாசமாக்குவது. இதைத்தான் நாம் இந்த பூமிக்கு இலவச உரமாக இட்டு நம்மை அது காப்பதற்கு பிரதிபலனாய் அதற்கு நாம் படிப்படியாக மரண தண்டனை தந்து கொண்டிருக்கின்றோம். அதன் சுவாசத்தில் நஞ்சை செலுத்தி  நசுக்குகிறோம்.

இன்றோ! பரவலாக, கல்யாணம் முதல் பொதுக்கூட்டம் வரை அனைத்து மக்கள்திரள் நிகழ்வுகளிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பரவலாக்கப் பட்டிருக்கின்றன.

சமூகத்தின்பால் அக்கறை கொண்டு அனைத்து மக்கள் கூடும் இடங்களிலும் தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தீர்க்க பாடுபடும் அமைப்புகள்கூட இன்று சர்வ சாதாரணமாக தமது பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ளும் சகமக்களுக்கு பிளாஸ்டிக் பண்டங்களாலான குடிநீர் பைகளையும் குடுவைகளையும் வழங்கி குடிக்க வைக்கின்றன. 

சரி! வேறென்ன செய்ய இதற்கு மாற்றுவழி எப்படி ஏற்படுத்துவது இலட்சக்கணக்கில் மக்கள் கூடுகையில் அவர்களிடம் சொம்புகளைக் கொண்டு நீர் புகட்டக் கூறுகிறீரா! என்று குதர்க்கமாக எண்ண வேண்டாம், அதிலுள்ள  நியாயப்பாடும் ஏற்புடையதே!

அதே சமயம்! அதற்கான மாற்று ஏற்பாடுகளை சற்று சிந்திக்க தூண்டினால்  என்ன?

 தண்ணீர் வழங்க பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றான ஒரு பொருளைத் தேட வழி ஏற்படுத்த வேண்டும். அதற்கான மாற்றை உண்டாக்க தன்னிடம் உள்ள இளைஞர்களை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

இது எழுதுவதும் மற்றும் சொல்வதும் எளிதுதான்!, அதேவேளையில் இறங்கி செயல்பட உதவாது எனலாம்,

 நாம் இங்கு கூறுவது முயற்சி செய்ய வைக்கத்தான், முடிவென்பது எல்லாம் வல்லவனின் கைகளில்தான் உள்ளது

இன்று உலகம் முழுதும் வியாபித்து இருக்கும் பலதரப்பட்ட பொருட்களை கண்டறிந்த ஓர் சமூகத்தால் இதுகூடவா? முடியாது,

 முற்றிலும் கடினமான மருத்துவப் பொருட்களையும் (இப்னு.ஷினா) கணிதக் குறியீடுகளையும் (அல் ஜீப்ரா) இறையருளால் கொடுத்த சமூகம் அல்லவா! நம் சமூகம்,ஆகவே இதற்கான மாற்றையும் நிச்சயம் அவர்கள் கொண்டு வருவார்கள் என நம்பலாம்,

பொதுவாக நம் இயக்கங்கள் நடத்தும் மாநாடுகளில் மற்றும் பொதுக்கூட்டங்களில் இலட்சக் கணக்கில் கூடும் நம் மக்கள்திரளை ஊடகங்களும், பரந்துபட்ட மற்றைய சமூகமும் கண்டுகொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறோம் மற்றும் ஆதங்கப்படுகிறோம்.

 அதுபோல், பிறசமூகத்தவரிடமும் நம் இயக்கத்தவர்கள் நடத்துகின்ற  பொதுக்கூட்டங்களும், மாநாடுகளும் அதில் நடந்தேறும் ஒழுக்க விழுமியங்கள் சார்ந்து பரவலாக பாராட்டி பேசப்படுகிறது.

அவ்வாறு இருக்கும்போது சுற்றுச் சூழலை கருத்தில்கொண்டு நாம் பரவலாக ஏதேனும் ஒன்றை புதுமையாக கொணரும்போது அதுவும் பிற சமூகத்தால் கவரப்பட்டு ஒவ்வொரு சமூகமும் ஊக்கம்பெற வழிவகை செய்யும்.

மனிதநேயம் வளர்க்கப் பாடுபடுவதோடு இந்த மானுடம் செழிக்கவும்  பாடுபட வேண்டும் என மார்க்கம் பேசுகிறது,

அந்த வகைதனில் சமூகத்திற்கு தீங்கிழைக்கும் அல்லவைகளை களையப் பாடுபடுவதும் மானுடம் செழிக்கவும், சமூகம் தழைத்தோங்கவும் செய்யும் தார்மீகப் பணியும் மார்க்கப் பணியே ஆகும்.

இங்குள்ள யாவரும் விரும்பி பிளாஸ்டிக்கை உபயோகிப்பதில்லை மாறாக அதற்கு மாற்று இல்லை எனும்போதும் மேலும் எளிமைப் படுத்துதலின் அவசியம் கருதியுமே இன்று விரும்பியோ! அல்லது விரும்பாமலோ இந்த பாழாய்ப்போன பிளாஸ்டிக்கை உபயோகிக்கிறோம்.

ஆகவே இன்னமும் இந்த சமூகம் நம்பகமான நச்சுக்கலவாத ஒரு மாற்றை எதிர்நோக்கி காத்து கிடக்கிறது. மேலும் பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றாக தாள்களில் பயன்படுத்தப்படும் பொருட்கள் காணப்பட்டாலும் அவை ஒரு குறிப்பிட்ட கொள்ளளவுக்கு மட்டுமே பயன்தருவனவாக உள்ளது.

இவை மட்டுமல்ல! மேலும் ஒரு முக்கியமான பேசவேண்டிய கூறும் இதில் இருக்கின்றது.

அதுதான் மக்களின் மனநிலையில் ஏற்படவேண்டிய மாற்றம்!!, எளிமை என்றெனக் கருதி இன்று ஏராளமானோர் இந்த பிளாஸ்டிக் நச்சுகளின் பயன்பாட்டில் விட்டிலாய் வந்து விழுகின்றனர்.

இதற்காகத்தான் இந்த சமூகம் நோக்க இயக்கங்கள் நடத்தும் சடங்குகளில் இந்த மாற்றத்தை முறைப்படுத்த வேண்டுமென்பது. இவ்வாறு ஓரிடத்தில் ஒன்றுகூடும் மக்கள் திரளிடையே இந்த மாற்றவிதையை தூவிக் கொண்டிருந்தால் போதும் மாற்றம் மனதில் விதைந்துவிடும். 

(கவனிக்கவும் ‘தூவிக்கொண்டிருக்க வேண்டும்” என்பதை).
மேலும் பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றான ஒன்றை கண்டுணர்ந்து இதுபோன்ற மாநாடுகளிலும், பொதுக்கூட்டங்களிலும் சந்தைப் படுத்திவிட்டால் மக்கள் அதனைக் கண்டுணர்ந்து தமது நுகர்வை அதை நோக்கி திருப்பக்கூடும்.

சமூக நலனுக்காகவே கூடும் இது போன்ற கூடல்களில் கூடுதலாக ஓர் பொதுநலமும் கூடி ஒரு புது வடிவம் பெறும்.

கண்டுகொள்வார்களா? கண்ணான இயக்கங்கள்...

     
மண்ணும் மணக்கிற பூமி... இது உங்கள் மனசை அள்ளிச் செல்லும்.

வியாழன், 29 ஜூன், 2017

தியாக 'தீபம்' "ஜைத்தூனம்மா"

உணர்வுபூர்வமான சிறுகதை :


ஊரின் நடுவேயுள்ள வடக்குத் தெருவில், மேல் அண்டைப்பக்கம்  ஒரு வீட்டிற்கும், கீழ் அண்டைப்பக்கம் ஒரு வீட்டிற்கும் அருகில் அமைந்திருக்கிறது ஒரு வீடு,

பழைய ஓடுகள் வேய்ந்த அந்த வீடு முழுதும் மண்ணால் கட்டப்பட்டது, 

அந்த வீட்டின் சுவருகளில் ஆங்காங்கே மண் பூச்சுக்கள் விழுந்து பழைய தட்டையான செங்கற்கள் தொக்கிக் கொண்டிருப்பது தெரிந்தன...

சாளரத்தின் வழியே மழை நீர் இறங்கி இருபுறமும் உள்ள சுவற்றில் ஈரப்பதம் ஓர் வரையப்பட்ட ஓவியம்போல் புரவிக் கிடந்தது...

உத்திரங்கள் யாவும் கறையான்களின் பசியாற்றியதுபோக மிச்சமுள்ளது மட்டும் மேற்கூரையை தாங்கி நின்றது...

ஜன்னல்களின் கதவுகள் வயது மூப்பின் காரணமாய் தோல்சுருங்கி, மரக்குச்சியை வைத்து தட்டினாலே தெறித்துவிழும் பலகீனத்தில் சாத்தப்பட்டிருந்தது...

ஜன்னல் கம்பிகள் யாவும் பல ஆண்டுகளாய் ஆடை அணியாத பெருந்துறவி போன்று வர்ணம் பூசாமல் துருவேறிக் கிடந்தது...

வீட்டின் வாசலில் பழைய மரக்கதவு ஆங்காங்கே செதில்கள் தெறித்து விடப்பட்டிருந்தது, பல மரப்பலகைகளால் பின்னப்பட்ட கதவின் இடுக்குகளின் வழியே உட்கூட்டை காணும் விதம் மரப்பலகைகள் தெறித்திருந்தன...

கதவின் உள்ளே தாழ்ப்பாளாக நாதாங்கி எனும் ஓர் ஆணியில் அடிக்கப்பட்ட இரும்புபட்டை தொங்கவிடப்பட்டு அருகில் இருக்கும் வாசல்நிலையில்  ஓர் இரும்பு கவ்வையில் இரும்பு பட்டையை சாய்த்து தாழிடப் பட்டிருந்தது...


இது தவிர அவ்வீட்டினுள் சில பழங்கால பீங்கான்களும், ஒரு மரத்தாலான கப்பீரோ பெட்டியும், ஒருசில எவர்சில்வர் பாத்திரங்கள் பயன்படுத்தாது கிடந்தன...

இது தவிர படுப்பதற்கென்று ஒரு ஈச்சம்பாய் தலையணையாய் பழைய துப்பட்டியும் தலைமாட்டில் ஒரு பழைய டேப் ரெகார்டர், ஒரு முட்டவிளக்கு மற்றும் சில உபயோகமில்லாத பொருட்கள் இருந்தன....

வீட்டின் வாசலில் இரு திண்ணைகள் மனிதப் புட்டங்களை சுமந்து பலவாண்டு ஆனதின் அடையாளமாய் ஆங்காங்கே மண்பூச்சுக்களை துப்பி நின்றது. அதன் இண்டு இடுக்குகளில் சிறுபுற்கள் தடுமாறி முளைகட்டி நின்றது...

வீட்டின் வாசலில் ஓர் புங்கைமரம் அந்த வீட்டை ஓர் புனிதக் குறியீடாய் கருதி வளர்ந்து நின்றது....

மொத்தத்தில் அந்த வீடு, ஆள் அரவமற்ற ஓர் அகிம்சையின் அடையாளக் குறியீடாகி இருந்தது...


ஆனால்..

அந்த வீட்டின் உள்ளேதான் இன்னமும் ஓர் ஜீவன் ஒற்றை உயிரோடு உலாவிக் கொண்டுள்ளது.....

ஜைத்தூனம்மா.....

தொன்னூரைத் தொட்டு, வதங்கிய உடம்போடும், வாடிய முகமோடும் வாழும் அந்த ஜீவன்...

முதுமையின் அடையாளமாக, துவண்டுபோய் உள்ள தேகங்களில், சுருங்கிய தோல்கள் அவர் வாழ்வின் நீட்சி, சுருக்கமாகிப் போனதை அடையாளப் படுத்தின...

பல்வேறு சோகங்களையும், பிரிவுகளையும் கண்ட அவரின் பழுப்பு நிற கண்களில் இன்னமும் வாழ்வைக் காண வேண்டும் என்ற வைராக்கியம் மட்டும் கருவிழியில் தெரிந்தது...

பல ஆண்டுகள் பேசிய பேச்சின் தேய்மானமாக முன் வரிசைப் பற்கள் எப்போதோ மரணித்து விட்டது...

இப்போது ஒட்டுமொத்த வாயையும் தாங்கி நிற்கும் தூணாக மேலும், கீழும் எண்ணி நான்கே பற்கள் அவர் பேச்சை பிறர் விளங்கிக் கொள்ள உதவி செய்து வந்தது...

கூன் விழுந்த தேகம், துவைப்பதற்கு அவசியமற்று மடிந்துபோன ஜமீலா பத்தை கைலியும், பூக்கள் உதிர்ந்த மல்லிகைப்பொட்டு தாவணி தள்ளாத வயதிலும் அவரின் தலையை மறைக்க உதவியது...

அவ்வப்போது தலையிலிருந்து நழுவி விழும் தாவணியை மறக்காமல் எடுத்து போட்டுக் கொள்வார், பல்லாண்டுப் பழக்கம் இன்னும் மாறவில்லை.....

இப்படி பழைய தலைமுறை ஒன்றின் அடையாளமாக ‘ஜைத்தூனம்மா’ அந்த வீட்டில் உலாவிக் கொண்டிருந்தார்..

எந்நேரமும் மியாவ்’ மியாவ் என்ற சத்தத்தோடு அந்த வீட்டை வலம்வரும் பூனைதான் ‘ஜைத்தூனம்மா’வின் இப்போதைய ஒரே உறவு...

தனக்குப் பசிக்கிறதோ! இல்லையோ! மறக்காமல் தன் பூனைக்கு உணவு கொடுக்கும் புரவலர் நம் ‘ஜைத்தூனம்மா’ ...

சில ஆண்டுகளுக்கு முன்புவரை இரவு நேரங்களில் அவரிடமுள்ள அந்த பழைய டேப் ரெகார்டரில் பெரும்பாலும் அவர் ‘நூர்மசாலா’ என்னும் பக்கீர்‘பைத்து’களை கேட்டுக் கொண்டிருப்பார்..தூக்கம் வருவதற்காக...

இப்போது அந்த கேசட் நாடாக்கள் சிக்கிக் கொண்டு அறுந்துபோய் விட்டது. டேப் ரெகார்டரும் தூசு படிந்து பழுதாகி விட்டது..பேச்சு துணையாய் நின்ற ஒற்றை சாதனமும் போனது...
தினமும் காலையில் பஜ்ர் தொழுகைக்கெல்லாம் இந்த தள்ளாத வயதிலும் மறக்காமல் எழுந்து விடுவார். மோதினார் பாயின் பாங்கொலி’யோடு ‘ஜைத்தூனம்மா’ கதவு திறக்கும் சத்தமும் ஒன்றாய் எப்போதும் கேட்கும்...

எப்பேர்ப்பட்ட பனி’காலங்களிலும் இது தொன்றுதொட்டு வரும் பண்பாகவே! அவரோடு வந்தது...

தனது வீட்டின் கொல்லைப் புறத்தில் ஒரு பழங்கால அடி’பைப்பு’ துருவேறிக் கிடந்தாலும் இவரைப் போல் இன்னும் ஆரோக்கியமோடுதான் இருந்தது..

கடந்த ஆண்டுவரை அதுதான் ‘ஜைத்தூனம்மா’வுக்கு தண்ணீர் வழங்கிய தோழன்..

இப்போது கொல்லைப் புறத்தில் புற்கள் மண்டிக் கிடப்பதால், பூச்சி,பொட்டு இருக்கலாம் என எண்ணிக் கொண்டு அதைத் தவிர்த்தார்...
அவர் ஒளு’ செய்வதற்கென்றே ஏற்படுத்தப் பட்டதுபோல் வீட்டின் வெளியே வலது மூலையில் பஞ்சாயத்து சார்பாக வைக்கப் பட்டிருக்கும் ஒரு திருகு ‘பைப்’ அவருக்கு இப்போது வசதியாயிற்று... 

அதுதான் ஜைத்தூனம்மாவின் இப்போதைய தண்ணீர்த் தேவைகளை பூர்த்தி செய்கிறது..

காலை நேரம் பஜ்ரு தொழுது விட்டு வரும் ‘அம்ஜத்’ தான் ‘ஜைத்தூனம்மா’வின் சேவகன்...

அவனுக்காகவே காலை தொழுகை முடியும் நேரம் வரை தமது பழுப்புநிறக் கண்களை சுருக்கிக் கொண்டு போவோரையும், வருவோரையும் அது ‘அம்ஜத்’ தானா எனப் பார்த்து நிற்பார்...

கையில் ஒரு சிறிய ‘டிப்பன்’ வாளி’ இருக்கும்..அது அவரின் வயிற்றின் கொள்ளளவைக் கொண்ட “டீ’ யைத் தாங்குமளவு இருக்கும்.. 

நினைத்ததுபோலவே ‘கிணிங்’ என்ற பெல் சத்தத்தோடு சைக்கிளில் வந்து நிற்பான் ‘அம்ஜத்’..

“வந்துட்டியளா! சீதேவியலே, எங்கன உம்பல இன்னம் காணலியேன்னு பாத்தேனாக்கும்”....

மெல்லிய வரவேற்போடு திண்ணையில் இருந்து எழுந்து வருவார் ‘ஜைத்தூனம்மா’...

தனது வயிற்ரோடு ஒட்டியிருக்கும் கைலியின் வலதுபக்க இடுப்பிலிருந்து தனது சுருக்குப் பையின் முடிச்சை அவிழ்த்தவாறே...

அவர் தரையில் இறங்கும்முன் சைக்கிளை விட்டு தாவி இறங்கி அவர் கைகளைப் பற்றிக் கொள்வான் ‘அம்ஜத்’

பின்னர் சுருக்கிய கண்களோடு, சுருக்குப் பையினுள் துளாவி சில சில்லறைகளை எடுத்துக் கொடுப்பார்...ஜைத்தூனம்மா...

“ எம்மட அப்பாவு, இத்துல இருக்கிற சில்லரக்கி, டீயும் அப்பறம் கொஞ்சம் சீமன்னயும்-(மண்ணெண்ணெய்) வாங்கியாங்க”...

(எப்போதும் மக்ரிப் நேரம் ஆகிவிட்டால் வீட்டில் உள்ள பழங்கால முட்டவிளக்கு ஒன்றை திண்ணையில் ஏற்றி வைப்பது அவர் வழக்கம், மறக்காமல் பஜ்ரு தொழுகைக்கு வரும்போது அதை அனைத்து விடுவார், சிலசமயம் மண்ணெண்ணெய் ரேஷன் கடையில் வாங்கி வைத்துக் கொள்வார் அது தீர்ந்து விட்டிருந்தது.)

“நீங்க நல்லா நூறு வயசுக்கு இருப்பிய ராஜா, எம்பட புள்ளதான் இத்தன நாளக்கி இந்த ஒண்டிக் கட்டக்கி ஒதவிக் கொண்டு இக்கீது”...

புன்முறுவலோடு, புறப்படுவான் அம்ஜத். சிலநேரம் சில்லறை குறையும் தன்னிடமுள்ள சில சில்லறையைக் கொடுத்து அனைத்தையும் வாங்கிவிடுவான்.

ஆனால் ‘அம்ஜத்’ வந்ததும் மறக்காமல் கேட்பார் ‘ஜைத்தூனம்மா’...
“என்னட அப்பாவு சில்லற பத்துனிச்சுதா!”....

“சரியா இருந்துச்சி ஜைத்தூன்மா” சொல்லிவிடுவான் அம்ஜத்...

தேகம் சிறுத்த அவரின் எடையைத் தாங்குவதற்கென்றே இன்னமும் இருப்பதுபோல் இருக்கும் அவர் வீட்டுத் திண்ணையில் தெறிப்புகள் இல்லாத ஓர் சிறிய மூலையில் அமர்ந்து கொள்வார்...

அன்று காலையில் அவ்வழியே செல்லும் ஏதாவது ஒரு வீட்டுப் பெண்களிடம் ஒரு சிறிய பீங்கான் கோப்பையைக் கொடுத்து அதில் இன்று அவர்கள் வீட்டில் செய்யும் ‘ஆனம்’(குழம்பு) கொஞ்சம் மட்டும் கொடுத்து அனுப்பச் சொல்வார்...

பாவம் அவரின் ஒட்டிய வயிறு எவ்வளவு சாப்பிட்டு விடப் போகிறது...சிலர் சந்தோசமாக வாங்கிச் செல்வர், சிலர் முனங்கிக் கொண்டே..

“ஆமாம் இதுக்கு வேற வேல இல்ல, பொழுதுபோனா போதும் வாசல்ல நிண்டுக்கிட்டு ஏதாவது கொடையும்” என வாய்க்குள் சொல்லிச் செல்வர்..
அவர்கள் சற்று சத்தமாய்ச் சொன்னாலும் ‘ஜைத்தூனம்மா’வுக்கு  கேட்டுவிடும் நிலையில் அவரின் செவிகள் இல்லை எனத் தெரிந்தே வைத்து இருந்தனர்...

ஆனால் சோறு மட்டும் யாரிடமும் வாங்க மாட்டார், இப்பவும் யாரேனும் அறுவடை முடிந்து ‘ஆறு மரக்கால்’ என கொடுத்துச் செல்லும் நெல்லை சிறிது சேர்ந்தவுடன் ஒரு நடவாளிடம் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்வார்...

அந்த அரிசியை வைத்துக் கொண்டு அவருக்கென உள்ள சிறிய பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர்விட்டு உலை வைத்து விடுவார்...

யாரேனும் கொடுக்கும் ‘ஆன’த்தை வைத்து அன்றைய ஒரு நாளை ஓட்டிவிடுவார். சிலபொழுதில் சிலர் தேவைக்கு அதிகமாய் கொடுத்துவிட்டால் இரண்டு நாட்கள் வைத்துக் கொள்வார்...

இப்படியாக அவரின் காலம் ஓடிக் கொண்டிருந்தது..

இரவுகளில் அக்கம் பக்கத்து பெண்கள் அவரிடம் பழங்கதை கேட்க சில சமயம் கூடுவார்கள்...அவரும் பழங்கால மனிதர்களைப் பற்றிய கதைகளை தமது பொக்கைப்பல் தெரிய கூறும் அழகே! தனிதான்...

அவரின் வீடு கவனிப்பதற்கு ஆளின்றி, குப்பை கூலங்களாகி நிற்கும், இவரின் நிலையை அறிந்து பக்கத்து வீட்டு ‘பாத்திமா’ வாரத்துக்கு ஒருமுறை வந்து வீட்டை பெருக்கி கொடுத்து உதவி செய்வாள்...

ஜைத்தூனம்மாவுக்கு சொந்தம் என்று யாரும் இல்லையா?

ஜைத்தூனம்மா’வின் கணவர் எப்போதோ! மரணித்து விட்டார்...

ஒரு மகன் மட்டும் இருந்தார்... ஆனால் எங்கே இருக்கிறார் என்பதுதான் இதுவரை தெரியவில்லை... சுமார் முப்பது, நாற்பது வருடங்களுக்கு முன்பு பிழைப்புக்காக ஏதோ ஓரிடம் சென்றவர்,இதுவரை தன் தாயை வந்து பார்க்கவில்லை..

... அவரைப் பற்றிய விவரங்களும் யாருக்கும் தெரியவில்லை..

மகனை பிரிந்த சோகம் ஒரு புறம் இருந்தாலும், வாழவேண்டும் என்ற வைராக்கியம் மிகுந்த பழைய கால மனிதரல்லவா?,,

கணவனை இழந்தபின் எவ்வாறு வாழ்ந்தாரோ? அவ்வாறே ! இப்போதும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்....’ஜைத்தூனம்மா’..

இதுதவிர “ஜைத்தூனம்மா’வுக்கு நாலு’மா’ நிலம் உள்ளது..

அந்த நிலத்தைக் கேட்டு சில மிராசுகள் வருவார்கள் அவ்வப்போது அந்த நிலத்தைக் கேட்பார்கள்.. நிறைய பணம் தருவதாக சொல்வார்கள் ..

அவர்களிடம் ‘ஜைத்தூனம்மா’ “ எம்மட புள்ளைலா! இனிமேப்பட்டு இந்த கெளடு கட்டக்கி எதுக்கு இம்புட்டு பணம் தர்றிய, இத்த வச்சு நான் அப்டி எத்த வாங்கபோறேனாக்கும்..நீங்க போய்ட்டு வரியலா”.. என சொல்லி விடுவார்.

அவர்களும் வெளியில் வந்து முனங்கி செல்வர்...

“இந்த கெளம் அத்த வெச்சு என்ன இனிமே என்ன செய்யப் போவுது, பேசாம கொடுத்துட்டு போக வேண்டிய வயசுல, போயி சேருரதுக்காகவாவது சேத்து வெக்கலாமுள்ள” என வெளிப்படையாக சொல்லிச் செல்வார்கள்...

இது “ஜைத்தூனம்மா’வுக்கு சகஜமாகிப் போனது...

அன்றொருநாள்!...

ஒரு மழைநாள்...

காலை நான்கு மணிக்கு ஆரம்பமான மழை எட்டைத்’ தாண்டியும் விட்டபாடில்லை.. தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது...

எப்பவும் பஜ்ரு தொழுகைக்கே அணைத்து வைக்கப்படும் ‘ஜைத்தூனம்மா’ வீட்டு திண்ணையில் எரியும் முட்டவிளக்கு இன்னும் எரிந்து கொண்டுதான் இருந்தது...

ஜைத்தூனம்மா’ வளர்த்த பூனை இன்னமும் பசியால் கத்திக் கொண்டிருந்தது..

எப்பவும் காலை பஜ்ரு’தொழுகைக்கெல்லாம் வந்துவிடும் ‘அம்ஜத்’ இன்று மழையின் காரணமாக தாமதமாக மழை விட்டதும் எட்டரை மணிக்கு வந்தான்..

‘ஜைத்தூனம்மா’ வை வெளியில் காணாததால், பெல்லடித்து கூப்பிட்டான்...
“ஜைத்தூன்மா”...”ஜைத்தூன்மா”...ஜைத்தூன்மா”...

ஒரு சத்தமும் இல்லை, மாறாக பூனை மட்டும் சற்று வேகமாக கத்தியது...

குழப்பத்துடன் அந்த இடத்தை விட்டுச் சென்ற ‘அம்ஜத்’ சிறிது நேரம் கழித்து நடுத்தர வயதுடைய வாலிபர்களை அழைத்து வந்தான் ...

அவர்களும் வந்து கூப்பிட்டு பார்த்தனர்..உள்ளே இருந்து எந்த சலனமும் இல்லை.. அதற்குள் வாசலில் கூட்டம் குழுமி விட்டது...

“யாராச்சும் கதவ ஒடைச்சு பாருங்கப்பா” என ஒரு குரல்...
இரண்டு பேர் கதவின் அருகே சென்றனர்...

அதற்கு அவசியமே இல்லாது வெளியிலிருந்து கைகளைக் கொண்டு நாதாங்கியைத் தள்ளிவிட்டனர்.. திறந்துகொண்டது...

அங்கே உள்ளே!...

எல்லா இடங்களிலும் மழை தண்ணீர் ஒழுகி ஈரமாக இருந்தது..அறையின் பக்கவாட்டில் ஒரு பகுதியில் மட்டும் ஒழுகவில்லை..

அந்த இடத்தில் தொழுகின்ற பாயின் மீது தமது விலாக்களை குறுக்கியவாறே ஒரு கையை தமது விலாவிலும், மறுகையால் தமது அருகே குர்ஆன் வைக்கப் பட்டிருந்த ரேகாளியைப் பிடித்தவாறே படுத்திருந்தார்...’ஜைத்தூனம்மா’

முன்னே! சென்ற வாலிப பிள்ளைகள், ‘ஜைத்தூனம்மா’வின் தாடையை இருபக்கமும் அசைத்து பார்த்து அழைத்தனர்..

“ஜைத்தூன்மா”...”ஜைத்தூன்மா”... ஒரு அசைவும் இன்றி இருந்தார்..
கண்கள் இலேசாக திறந்து..ரேகாளியில் உள்ள குர்ஆனைப் பார்த்தபடி இருந்தது...

அதற்கிடையில் இருவர் சென்று நாட்டு வைத்தியரை அழைத்து வந்து விட்டனர், அவர் ‘ஜைத்தூனம்மா’வின் நாடியைப் பார்த்து விட்டு...
“உசுரு போயாச்சு விடிகாலை நாலரை மணிக்கு போயிருக்குனு நெனக்கிறேன்” என்றார்...

இந்த விஷயம் ஊர் முழுக்க பரவ எல்லாத் தெருக்களிலிருந்தும், துப்பட்டி போர்த்திய வெள்ளை ராணுவமாக பெண்கள் கூட்டம் வர ஆரம்பித்துவிட்டது..

அதே நேரம் பள்ளியில் மோதினார், ‘ஜைத்தூனம்மா’வின் மரணச் செய்தியை குழாய்’ ரேடியோவில் அறிவித்துக் கொண்டிருந்தார்...

ஆம்! ஊருக்கே! ஒரு பழைய தலைமுறையின் அடையாளமாக இருந்த “ஜைத்தூனம்மா’ இறைவனடி சேர்ந்தார்,..

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.....

இதுவரை ஒற்றை ஆளாக நின்று வாழ்வோடும், மரணத்தோடும் போராடியவர், இறுதியில் இறைகட்டளைக்கு அடிபணிந்தார்...

இதற்கிடையில் நாட்டாமை ‘பாரக்’ வந்துவிடவே,அவர் சொன்னார்,’ “

 “ஜைத்தூன்மாக்குத் தான் யாருமே இல்லயே நம்ம ஊருதான் நின்னு கடமய செய்னும் இருந்தாலும் எங்கன குள்ளேயும் அவங்க புள்ளயோட நெலவரம் பத்தி ஏதாவது கெடைக்குதான்னு பாருங்களேன்.”.. என்றார்.
“ஊஹூம்” வீட்டுக்குள் அப்படி ஒன்றும் கிடைக்கவில்லை, வெறுங்கையோடு திரும்பினர்..

“சரி, இனி ஆக வேண்டியதை பார்ப்போம்”.. என உத்தரவிட்டார்...

“ஜைத்தூனம்மாவின் நல்லடக்கத்துக்காக வெளிநாட்டில் உள்ளவர்கள் தமது வீடுகளுக்கு போன் போட்டு கொஞ்சம் காசு பணம் கொடுத்து கொடுக்கச் சொல்லினர்...

அவரின் ஒரு பிள்ளை விட வேண்டிய கண்ணீரை... ஊர் பிள்ளைகள் அனைவரும் இட்டு வழியனுப்பி வைத்தனர்...

நல்லடக்கம் முடிந்து.., அனைவரும் போய்விட நாட்டாமை ‘பாரக்’கும், ஊர் பெரியவர்களும்,’ஜைத்தூனம்மா’வின் வீட்டு வாசலில் சிறிது அமர்ந்து அவரைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்...

அப்போது சைக்கிளில் வேகமாக வந்த பட்டார்மணியார் ‘பாலு’ இவர்கள் அருகே வந்து சைக்கிளை நிறுத்தி அவசரமாக இறங்கினார்,,

“பாரக்’கண்ணே! வெளியூருக்கு மவ வீட்டுக்கு போயிருந்தேன்! இப்பதான் பஸ்சுல வந்து எறங்குனேன், விசயத்த சொன்னாங்க, ஒரு நல்ல மகராசிய பாக்க முடியலயே கடவுளே! கண்ணீருடன் நின்றார்...

அவரிடம் நடந்த விவரங்களை நாட்டாமை ‘பாரக்’ விவரித்தார்...

எல்லாவற்றையும் அமைதியாக கேட்டுவிட்டு ..தனது சைக்கிளின் ஹேன்பரில் மாட்டியிருந்த ஒரு பிளாஸ்டிக் காது வைத்த பையை எடுத்து அவசரமாக திறந்து,..

அதன் உள்ளே இருந்து ‘ஜைத்தூன்’ என்று பெயர் எழுதியிருந்த ஒரு கவரை எடுத்து நாட்டாமை ‘பாரக்’கிடம் நீட்டினார்...

“என்ன இது பாலு”...என்றார்..நாட்டாமை ‘பாரக்’
அவசரமாக அதைப் பிரித்து கவரை தனது மடியில் கிடத்திவிட்டு பார்த்தார்...

அது ‘ஜைத்தூனம்மா’ எழுதிக் கொடுத்திருந்த சொத்து பத்திரம்.....
பட்டார்மணியார் ‘பாலு’ தொடர்ந்தார்...

“ஒரு வாரம் முன்னதான், என்னட வூட்டுக்கு ‘ஜைத்தூன்மா’ வந்தாக, ரொம்ப தட்டுத் தடுமாறி வந்தவுகள பாத்து பதறிப் போயிட்டேன்.”
அவுகள உக்கார சொல்லி என்ன விஷயமா வந்துருக்கீக கூப்புட்டா நானே வந்துருப்பேன்ல” அப்டின்னேன்..லேசா சிரிச்சுக்கிட்டே..”

“பரவால்ல புள்ள என்னட காரியமால வந்தேனாக்கும்னு சொன்னாக”
என்னன்னு விசாரிச்சப்போதான் அவுகளோட இந்த வூட்டையும், நாலு’மா நெலத்தையும் ஊருக்கு எழுதி வைக்கோனும்னாக”...

“ஒடனே நான் ஏன்மா ஊருக்கு எழுதி வைக்கோணும் நாள உங்கள்ட புள்ள வந்தாக்கானேன்...”

அதுக்கு ஒத்த வார்த்த சொன்னாக என்னட மனசு அழுதிடுச்சிங்க...

“என்னட புருசனும், புள்ளயும் போனதுக்கு பின்னயும், அல்லா கொடுத்த இந்த உசுரு ஓடுதுன்னாக்க.. அந்த எஜமானோட ஒதவிய கொண்டு, இந்த ஊர்ல உள்ள புள்ளைளுக கொடுத்த ஆகாரமும், ஆதரவும்தான..”

அதான் புள்ள!, எனக்கு ஜீவனங் கொடுத்த இந்த ஊருக்கு உபகாரமா எனக்குன்னு இருக்கறத கொடுக்கணும் புள்ள!,”

“இத்தக் கேட்டு செல மெராசுல்லாம் கூட வந்தாக, நெறைய பணமும் தாறேன்னாக அதுலாம் இனிமேப்பட்டு எனக்கு எதுக்கு புள்ள, இந்த ஊரு மக்கதான என்னட ஒறவுக...”

“எனக்கு கொஞ்சமா நீக ஒரு ஒதவி செய்ரியலா?, இத எழுதி தாங்கோளேன்..” அப்டின்னாக ..”

அத்தோட இந்த நாலுமா நெலத்துல வெளையிற நெல்ல என்னமாரி ஆதரவில்லாத ஏழமாருக்கு குடுத்து ஒதவ சொல்ரீகளா புள்ள..” அப்டின்னும் கேட்டுக்கிட்டாக...

அங்கு அமைதி நிலவுகிறது...எல்லோர் கண்களும் ஈரமாகிறது...
மேலும் சொன்னார்...

அந்த மகராசி கேட்ட ஒத்த வார்த்தைக்காக இதுக்கான ரெஜிஸ்டர் செலவ நானே ஏத்துக்கிட்டு எனக்கும் கொஞ்சம் புண்ணியம் தேடி எழுதிக் கொடுத்துட்டேன்... இது என்னிட்டயே இருக்கட்டும் நேரம் வரும்போது வாங்கிக்கிறேன்னாக இப்போ போய் சேந்துட்டாக..” இப்போ அதுக்கான நேரமா நான் நெனக்கிறேன்..

அதான் ஜமாத்துல ஒப்படைக்கலாம்னு எடுத்தாந்தேன்..”

பட்டார்மணியாரின் பேச்சை கேட்க,கேட்க தன்னிடம் வரும் அழுகையை அடக்க எண்ணி ‘நாட்டாமை’‘பாரக்’ தலையை கீழே கொண்டு போனார்...

அவரின் கண்ணிலிருந்து உதிர்த்த ஒற்றை கண்ணீர்த்துளி,,.

அவரின் மடியில் கிடந்த லெட்டர் கவரில் எழுதப்பட்டிருந்த “ஜைத்தூன்” என்னும் பெயரில் விழுந்து நனைத்தது...

அதே நேரம்...

கபருஸ்தானில் “ஜைத்தூனம்மா’வின் கபரின்மீது போர்த்தப் பட்டிருந்த பூவாளப்பூவின் பூக்கள் வாடிக் கொண்டிருந்தன...

ஆனால்....

ஒரு பூவாய் உள்ளே உறங்கிக் கொண்டிருந்தார்..

ஊருக்கு ‘உயில்’ எழுதிய மயிலாய் .....

“ஜைத்தூனம்மா’...

எண்ணமும், எழுத்தும்...
பாகை. இறையடியான் ...
...........................................................................................


மண்ணும் மணக்கிற பூமி... இது உங்கள் மனசை அள்ளிச் செல்லும்.