அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.) பாக்கம் கோட்டூர் வலைத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது, இன்றைய நாகை மாவட்டச் செய்திகள்:நாகப்பட்டினம் மாவட்டத்தில் வக்ஃப் வாரியத்தில் பதிவு பெற்ற வக்ஃப் நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம்-30-07-21, தெரியுமா உங்களுக்கு? நாகை மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் பெயர் பெயர் திரு. லியாக்கத் அலி

வியாழன், 7 ஜனவரி, 2021




 அன்பிற்கினியீர்,

அஸ்ஸலாமு அலைக்கும், கடந்த சில வாரங்களுக்கு முன்பிலிருந்து நமது மண்ணில் வாழ்ந்த மற்றும் வாழும் மகத்தான மனிதர்களைப் பற்றி தற்போது வாழும் தலைமுறைக்கும் இனிவரும் தலைமுறைக்கும் ஆவணப் படுத்த வேண்டும் எனும் தீரா வேட்கையின் பொருட்டு அவர்களை அடையாளப் படுத்தும் விதமாக பாகை மன்னர்கள் எனும் தலைப்பில் தொடர் ஆவண கட்டுரைகள் எழுதும் முயற்சியில் இறங்கினேன்.

அதன் தொடர்ச்சியாக அந்த கட்டுரை எடுத்தியம்பும் முதற் நாயகராக கடந்த வாரம் மறைந்த மர்ஹூம். K.M. கமாலுதீன் அவர்களைப் பற்றி எழுதலாம் என தீர்மானித்து முதற் கட்டுரையை எழுதி முடித்து பிரசுரிக்க இருந்த நேரத்தில் அன்னாரது மறைவு செய்தி வந்தடைந்தது.

மறையும் கணத்தில் அவர் பற்றிய கட்டுரை அவரது விழிகளில் படாமல் போனதில் பெருத்த ஏமாற்றமானாலும் இனி காலம் தாழ்த்தாமல் பாகை மன்னர்களை இப்பாரு’க்கு விரைவாக அறிமுகம் செய்தல் வேண்டும் எனும் உளப்பாட்டோடு இந்த கட்டுரைகளை தங்கள்முன் ஆவணப் படுத்துகிறேன். எழுதுவதற்கு ஏராளம் இருப்பினும் இந்த கட்டுரைகள் ஓதுவது எம்மண்ணின் மகத்தான ஆளுமைகளின் பண்பு நலன்களை பாகை தலைமுறைகளுக்கு பரப்புரை செய்யும் வண்ணமே!...

இனி மர்ஹூம். K.M.கமாலுதீன் அவர்களைப் பற்றி பின்வரும் கட்டுரையில் நாம் காண்போம்.

பாகை மன்னர் 1 

மர்ஹூம். K.M.கமாலுதீன் 

தாம் வாழும் காலத்தில் ஒவ்வொரு மனிதருக்கும் தாம் தடம் பதிக்க ஆழமான ஓர் தளம் வேண்டும் என நினைப்பதுவும் ஓர் இயல்பே! அந்த வகையில் ஓர் சிலர் தம் சிறுபருவம் தொட்டு தலைமைப் பண்பு நலனோடு வார்க்கப்படுவர்.

சிலரை வாழும் காலமும், சார்ந்த சமூகமும் வார்த்தெடுக்கும் அப்படி இரண்டும் ஒருசேர அமையப் பெறுவது ஒரு சிலருக்கு இயல்பில் அமையும் அப்படி அமையப் பெற்ற ஒரு சிலரில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றிருக்கும் ஒருவரைத் தான் நாம் இப்போது படித்துக் கொண்டிருக்கிறோம்.


சுதந்திர இந்தியாவின் ஆரம்ப கால வரலாற்றில் மக்கள் மனதில் ஆழப் பதிந்த அமைப்பு ரீதியிலான இரு விஷயங்கள் காந்தியமும், காங்கிரஸ் கட்சியும்தான்

திராவிடம் தடம் பதிக்கும் முன் இவ்விரண்டில் அங்கம் வகிப்பது ஓர் உயரிய மதிப்பீட்டைக் கொண்டதாக கருதப்பட்டது. அடிப்படையில் ஓர் தொண்டனாகவேனும் இருப்பது சார்ந்திருக்கும் இந்தியத்துக்கே பணி செய்ய கிடைத்த கருதுகோளாக அப்போது பார்க்கப்பட்டது.

எந்த ஒரு கட்சியிலும் குறிப்பிட்ட நிலையை பெறுவது என்பது எளிதில் கிடைப்பதன்று. அதற்கு சார்ந்திருக்கும் சமூக பிரபல்யம் மிக இன்றியமையாதது. அந்த சமூக பிரபல்யத்தைப் பெற்றோரே பின்னாளில் அந்த அமைப்புகளிலோ அல்லது கட்சிகளிலோ குறிப்பிடத்தக்க செல்வாக்கை தக்க வைக்கின்றனர்.

அப்படி ஓர் குறிப்பிட்ட காலம்வரை அவ்வமைப்புகளில் தமது செல்வாக்கை தக்கவைத்து அதன் பயனீடாக கிடைத்த நற்பலன்களை எல்லாம் தாம் அங்கம் வகிக்கும் மண்ணுக்கும், மக்களுக்கும் பங்கிட்டுத் தந்த ஓர் உன்னத மனிதர்.

முன்னொரு காலத்தில் தாம் சார்ந்திருந்த காங்கிரஸ் கட்சியில் சார்ந்திருந்த எல்லைக்குள் குறிப்பிடத்தக்க செல்வாக்கைப் பெற்றிருந்தும் பின்னொரு காலத்திற்கும் அதைக் கடத்திச் செல்லாமல் காலம் தந்த வினையால் தம் கால்களில் பெரும் காயங்களைப் பெற்றதும் இனி துடிப்புடன் செயல்படுதலில் ஏற்படும் தொய்வை முன்கணித்து அதனிலிருந்து தாமாகவே விலகிக் கொண்டதில் தொடங்குகிறது அவரது அரசியல் அறம்.

தாம் அங்கம் கொண்டிருந்த ஆளும் கட்சியில் தமக்கு இருந்த செல்வாக்கைக் கொண்டு தமக்குத் தேவையானதை மட்டும் உற்பத்தி செய்து கொள்ளும் தன் இச்சையை தவிர்த்து அதை தாம் வாழும் தளத்திற்கும் அதைச் சார்ந்திருக்கும் சமூகத்திற்கும் தேவையானவற்றிற்கு உற்பத்தி செய்து கொடுத்தல் என்பது சான்றோர் செயல் அச்செயலுக்கு எடுத்துக்காட்டாய் விளங்கியவரும்கூட

தற்போது அரசியலாளர்களிடம் மிகுந்து காணப்படும் ஒப்பந்த அடிப்படையிலான பணிகள் அவர்கள் சுயலாபம் பார்ப்பதற்கான ஒரு அங்கமாகவே பலதளங்களிலும் வழிந்தோடுகிறது,

ஆனால் அவற்றை எல்லாம் மக்களுக்கு செய்யும் சேவையாக கருதி அதற்காக செலவிடப்படும் பொருளாதாரத்தையும் அரசுப் பொருளாதாரமாக கருதாமல் அந்த அரசில் அங்கம் வகிக்கும் குடிமகனாகிய தனது பொருளும்தான் எனக் கருதி அவற்றை தரமாகவும், சிக்கனமாகவும் பொறுப்பை உணர்ந்து முடித்து அதில் கிடைத்த எஞ்சிய தொகையையும் அரசிடமே திருப்பிக் கொடுத்த நிகழ்வையெல்லாம் செவியுறும்போது மிகப் பெரிய ஏக்கப் பெருமூச்சு மட்டுமே நம்மிடம் மிச்சம் இருக்கிறது.

ஆனால் அந்த செயற்கரிய செயலையும் செய்தவர் நம் மண்ணின் இம்மைந்தர் எனும்போது உள்ளுக்குள் உணர்ச்சிகள் பிரவாகம் எடுக்கின்றன.

இவ்வாறாக தாம் ஒப்பந்ததாரராக முன்னின்று செய்த காரியங்களில் இன்று நம் மண்ணில் கற்றோர் பலரை உற்பத்தி செய்யும் கூடமாக விளங்கும் நமதூர் பள்ளிக்கூடமும் ஒன்றாகும் இன்றும் அதன் தரம் அவரது பணியின் மேன்மையை பறை சாற்றிக் கொண்டுள்ளது.

இந்தப் பள்ளிக் கட்டிடத்தைத் தான் அப்போது கல்வி அமைச்சராக வீற்றிருந்த மறைந்த க. அன்பழகனை அழைத்து திறந்து வைக்கச் செய்து இருந்தார்கள் என்பதுவும் இங்கு குறிப்பிடத் தக்கது.

தாம் மற்றும் தம்மின் குடும்பம் எனும் ஓர் குறுகிய அடைப்புக்குள் தம்மை குறுக்கிக் கொள்ளாமல், தம் சுற்றுப் புறமும், தம் மண்ணும் மகிழ் கொள்ள வேண்டும் எனும் தன் முனைப்போடு கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் ஏதேனும் ஒன்றை மண்ணுக்குச் செய்யும் தொண்டாக கருதி செயல்படுத்திட முனைந்தவரும்கூட எனலாம்.

அவ்வகையில் நம்மண்ணுக்கு முதன்முதலாக கிடைக்கவிருந்த  மின்னிணைப்பு பணியில் தம்மை முழுமூச்சாக இருத்திக் கொண்டு அதற்காக அரசு இயந்திரம் சுட்டிக் காட்டிய அத்துணை வழிகளையும் திறக்க முழு செயல்திறனோடு செயற்பட்டமை அவர்தம் மக்கள் பணியில் ஒரு மைல்கல் எனலாம்.

உதாரணமாக நமது இல்லத்திற்கு மட்டுமே மின்னிணைப்பு பெறுதல் என்பது மீப்பெறு சவாலான ஓர் காரியமாக கருதப் படும் வேளையில் ஒரு ஊருக்கே மின்னினைப்பை பெற்றுத் தர முன்னிற்பதென்றால் அதில் எத்துனை கடினங்கள் நிறைந்திருக்கும். ஆனால் அச்சவால்களையும் துச்சமென முன்னின்று நடாத்தி இன்றைய நம் தொழிற் வளர்ச்சிக்கும் சமூக முன்னேற்றத்திற்கும் முக்கிய காரணியாக கருதப் படக்கூடிய மின்வசதியை பெற்றுத் தர பாடுபட்ட இன்னாரை நினைவு கூர்ந்து வரும் தலைமுறைக்கு எடுத்துக் கூறுவது அவசியமாகிறது.

ஒருமுறை அவர்களை நான் அவரது இல்லத்தில் சந்தித்தபோது தமக்குள் பொதிந்து கிடந்த இதுபோன்ற நம் பாகை மண்ணின் வரலாற்று எச்சங்கள் பலவற்றை உதட்டோரத்தில் சிறு புன்னகையோடு கொட்டினார்கள்.

அவர்களோடு களித்திட்ட அந்த வேளை முழுதும் ஓர் வரலாற்று வகுப்பில் சுமார் ஒன்றரை மணிநேரங்களை செலவிட்டதுபோல் அத்துணை உபயோகம்.

அவ்வேளைகளில் எனது செவிகள் செவியுற்ற பல முக்கியத்தரவுகளில் மிக ஆச்சரியமான ஒன்று என்னவென்றால்..

நான் இங்கு மேற்கோளிட்ட பல விஷயங்களை உதிர்க்கும்போதும் அச்செயலோடு தொடர்புடைய அதிகார மட்டத்திலான மற்றும் அதற்கு அடித்தளம் அமைத்திட்ட பலரது பெயர்களை இத்துனை காலத்திற்குப் பின்னும் நினைவில் இருத்தி இருந்ததுதான்.

அவர்தம் பேச்சுக்களில் தெறித்து விழுந்த அந்த சொற்றாளுமை, பேச்சின் உயர்தரம் ஆகியவை மெச்சத் தகுந்த கல்வித் தரத்தை பழம்பெரும் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி அவருக்கு வழங்கி இருப்பதை உணர முடிந்தது.

இத்திறன்களாலும் தமது ஆங்கிலப் புலமையினாலும் அக்காலங்களில் ஆங்கிலம் சம்பந்தப்பட்ட அரசு தஸ்தாவேஜுக்கள், தந்தி போன்றவற்றை விளங்கிட வேண்டி நாடிவரும் பாமரருக்கு விளங்கக் கூறி வழிகாட்டியுள்ளார்கள்.

தமது கற்றலின் பயனால் தமக்குக் கிட்டிய அரசு பணியான வருவாய்த் துறையின் பட்டா மனியராக சிலகாலம் பணியாற்றிய போதும் அவரது தொண்டுள்ளம் தொடுத்த அறவெளிப்பாட்டால் நிலவரி கட்டமுடியாத வரியோருக்காக இரங்கி தம் சொந்தப் பணத்தில் அவர்களுக்காக வரிகட்டிய நிகழ்வுகள் நெகிழ்ச்சிக்குரியவை.

தாம் வாழ்ந்த காலங்களில் ஆன்மீக களங்களில் தம்மை முற்படுத்திக் கொள்பவராகவே இருந்தார் ஜும்ஆ’வுடைய தினங்களில் பள்ளிக்குள் முற்படுத்தி செல்வதிலும் ரமளானுடைய நாட்களில் மூன்று குர்ஆன்’களை முடித்து விடுவதிலும் அவருடைய ஆன்மீக எண்ணங்களும் வளமிக்கதாகவே இருந்துள்ளது என்பதை இங்கு நினைவு கொள்ளத் தக்கது 

அவர்களுடனான சந்திப்பில் அவர்களது ஒவ்வொரு செயல்திறனையும் விளக்கியபோது அந்த கண்களில் தெரிந்த நம்பிக்கையொளி, நன்னயம் இப்படி ஒவ்வொன்றையும் அவரிடமிருந்து உள்வாங்கும்போது அவருக்குள் தெரிந்த தம் மண் மீதான காதலை எளிதாக மதிப்பிட முடிந்தது.

அவரிடம் தற்போது செயல்பாடுகளில் இருக்கும் அரசியலாளர்களுக்கும், சமூக செயற்பாட்டாளர்களுக்கும் சிறந்த பயிற்றுமுறை இருந்தது.

ஒரு அரசியலாளர் அல்லது மானுடப் பண்பாளர் தாம் உள்ளடங்கிய சமூகத்திற்கும் பயனுடையவராக ஆகும்போதுதான் வருங்கால தலைமுறையிடம் வரலாறாக வாழ்கின்றனர். அவ்வரலாறு பல தலைமுறைகளுக்கு தொன்றுதொட்டு எடுத்துச் செல்லப் பட்டுக் கொண்டே இருக்கிறது.

அவரிடம் இன்னும் பலமணி நேரங்களுக்குத் தேவையான பேச்சுக்கள் மிச்சமிருக்கையில் காலம் எனக்களித்த குறுகிய அந்த வாய்ப்பில் எந்த அளவீடுகளில் கடந்தகால தரவுகளை அவர்களிடமிருந்து பெறமுடியுமோ! அந்த குறைந்த அளவிலான விகிதாச்சாரத்தில் மட்டுமே பெற்றுக் கொண்டு விடை பெற்றேன்.

இவ்வாறு ஆற்றல் மிகு ஆளுமைகளையும் தன்னகத்தே கொண்டெழு ழுந்துள்ளது நம் பாகை மண் எனும்போது உள்ளுக்குள் சிலிர்க்கத்தான் செய்கிறது.

இன்னும் காலம் வாய்ப்பளித்திருந்தால் அந்த ஆளுமைக்குள் பொதிந்து கிடந்த இன்னும் பற்பல நம் மண்ணின் பரிமாணங்களை வரலாற்று படிமங்களாக மீட்டுக் கொணர முடியும் என நினைந்துக் கொண்டிருந்தேன்.

ஆனால் காலம் அதற்கு வாய்ப்பளிக்காமல் அந்த வரலாற்றுப் பேழையின் வாசிக்காத பக்கங்களை நம் இமைகள் இனி காணவே மாட்டாமல் மூடிக் கொண்டது.

சத்தமே இல்லாமல் சங்கதியை நிறுத்திக் கொண்டது அவரது சகாப்த வாழ்வு, இறுதி மூச்சுக் காற்றோடு முற்றுப் பெற்று விட்டது ஓர் ஆளுமையின் அடையாளக் குறியீடு.

 மீண்டும் மற்றுமொரு ஆளுமையிடமிருந்து தொடர்வோம்....

ஆக்கம்:

பாகை நிலத்துப் பாமரன் 

பாகை இறையடியான்.

  மண்ணும் மணக்கிற பூமி... இது உங்கள் மனசை அள்ளிச் செல்லும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்த தளம் பற்றிய தங்களின் மேலான கருத்துரைகள் வரவேற்கப்படுகின்றன.