அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.) பாக்கம் கோட்டூர் வலைத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது, இந்த வருடம் முஹர்ரம் மாதம் ஒன்பது மற்றும் பத்தாம் நாளுக்கான ஆஷூரா நோன்பு வருகின்ற 19/09/2018 மற்றும் 20/09/2018 ஆகிய தேதிகளில் தொடங்க இருக்கிறது.

வியாழன், 17 ஜனவரி, 2019


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.)

இன்ஷா அல்லாஹ்,

பாக்கம் கோட்டூர் மக்கள்நல மேம்பாட்டு சங்கம் சார்பில் பாக்கம் கோட்டூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தமது கல்வி மற்றும் கல்லூரி படிப்புகளை முடித்துவிட்டு மேற்கொண்டு தமது வாழக்கை பயணத்தினை மேற்கொள்ளவுள்ள மாணவ சமூகத்திற்கு வழிகாட்டியாக "கல்வி மற்றும் வேலைவாய்ப்பு கருத்தரங்கு நடைபெறவுள்ளது.

அதுசமயம் துறைசார் ஆளுமை நிறைந்த பிரபலங்கள் எதிர்வரும் எமது தலைமுறைக்கு வழிகாட்டும் விதமாக ஆரோக்கியமான பல ஆலோசனைகளையும், அறிவுரைகளும் வழங்கி அவர்களுக்கு திறன்சார் பயிற்சிக்கான முன்முயற்சிகளையும் மேற்கொள்ள இருக்கிறார்கள்.

ஆகவே! பெற்றோர்கள் தமது 18வயதிற்கு மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த  பிள்ளைகளை இந்த அறிய வாய்ப்பினை நுகர்ந்து பயனடைய செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

தற்காலத்தில் பெருகி வரும் வேலைவாய்ப்பின்மை, மற்றும் துறைசார்பு திறன்களில் ஏற்படும் தொய்வை களைந்து மாணவர்கள் எந்தெந்த துறைகளில் அதிதிறன் கொண்டிருக்கின்றார்களோ அந்த திறன்களை அவர்களுக்கு அடையாளம் காட்டி அவர்களின் தன்னம்பிக்கை மற்றும் திறனறிவை மேம்படுத்தி வெற்றிகொள்ளும் சமூகமாக அவர்களை மடைமாற்ற கிடைக்கும் ஓர் வாய்ப்பை நம் மாணவச் செல்வங்கள் பெற்றுக் கொள்ள வேண்டுகிறோம்.

மாணவர்கள் தன்னம்பிக்கையை மிளிரச் செய்து இனி எதிர்வரும் காலத்தில் ஆரோக்கிய சூழலியல் வாழ்வினை அவர்களுக்கு வழங்கி அதன்மூலம் ஒட்டுமொத்த சமூகமும் பயனடைய அனைத்து மாணவர்களும் ஊக்கமுடன் பின்வரும் வலைத்தொடர்பை கிளிக்கி தம்மை அந்நிகழ்ச்சிக்கான பங்கேற்பாளராக முன்பதிவு செய்து கொள்ள வேண்டுகிறோம்.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLScot-lf9hV_frJUfNcUYjmSZfhHtH6Ykqj8-ngT0VhAzd1EBg/viewform

இந்த வலைத்தொடர்பை COPY PASTE செய்து  உங்களது முன்பதிவை தொடங்கவும்.நிகழ்ச்சி நிரல் :
மண்ணும் மணக்கிற பூமி... இது உங்கள் மனசை அள்ளிச் செல்லும்.

புதன், 19 செப்டம்பர், 2018

அன்பிற்கினிய ஆலிமா’ பெருமக்களுக்கு:அன்பிற்கினிய ஆலிமா’ பெருமக்களுக்கு:

நாளைய சமூகத்தை நலமாய் சமைக்க இருக்கும் கோட்டூர் மதரஷத்துன் நிஸ்வான் ‘ஆலிமா’ பெருமக்களுக்கு வாழ்த்துக்களும் இறைவன் புறத்திலிருந்து அமைதியும் நலமும் உண்டாகட்டுமாக!

கடந்த மூன்று வருடங்களாக சில ‘ஆலிமா’ பெருமக்களை படைத்து சமூகத்திற்கும், சார்ந்த ஊருக்கும் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறது கோட்டூர் பெண்கள் மதரஸா, இதை வெறும் பெருமைக்காக சொல்லிக் கொண்டு கடந்து செல்லக் கூடிய ஓர் சாதாரண நிகழ்வாக நாம் ஒருபோதும் கடந்து விட முடியாது.

இதில் பல நல்லுள்ளங்களின் சமூக மேம்பாட்டிற்கான அர்ப்பணிப்பு உணர்வும், தொண்டுள்ளமும் சமூக அக்கறையும் பொதிந்துள்ளது. 

இன்னும் பல ஊர்களில் பள்ளிவாசல்களை செப்பனிடுவதற்கே பல சிரமங்களை எதிர்கொள்ளும் வேளையில் நமதூருக்கு கிடைத்த வரப்பிரசாதமாய் இறைவனின் புறத்திலிருந்து பெண்களுக்கான மதரஸா வரப்பெற்றுள்ளது. இது நிச்சயம் இறைவனின் அருட்கொடையே ஆகும்.
சமூக நலனோடும், குடும்பநலனுக்கு அப்பாலும் சிந்திக்கக் கூடிய சிந்தனை குன்றிப் போயுள்ள ஓர் காலகட்டத்தில் பொதுநலனுக்காக பாடுபட்ட புரவலர்களை கட்டியமைத்திருக்கிறது நமதூர். மாஷா அல்லாஹ்..

பொதுவான கண்ணோட்டத்தில் பலதரப்பட்ட சமுதாயங்களிலும் புரையோடி இருக்கும் பெண் நலம் பேணாமை குறித்த தர்க்கம் நம் சமுதாயத்திலும் கலந்திருக்கக் கூடிய சூழலில் ஓர் சமுதாய முன்னேற்றத்திற்கும், அதன் வளர்ச்சிக்கும் மேலும் சமூக மாற்றத்திற்கும் பெண்களே! அடித்தளமிடுகின்றனர்

என்ற தெளிவான சிந்தனையின் பொருட்டு அவர்களை சிந்தித்து இயங்கக் கூடிய தளத்தில் பொறுப்புணர்வு உடையவர்களாக உருவாக்கம் செய்ய வேண்டும் என்ற மகத்துவ மனோநிலையின் வெளிப்பாட்டால்தான் இன்றைய தினம் நமது கண்முன்னால் இந்த மதரஸா நிலை கொண்டுள்ளது.

இதனை கடந்த காலங்களிலும் சமீபத்திலும் இந்த மதரஸா’வில் கற்று பட்டங்கள் பெற்று இருக்கும் நம் ஆலிமா’ பெருமக்கள் உணர்ந்து சமூகப் பொறுப்பை சுமந்து இறைவனுக்காக அவனது தூதர் வழிநின்று மார்க்கத்தை இனிவரும் தலைமுறைக்கு எடுத்துச் சென்று வழிநடத்தும் கடமை உடையவர்களாக தம்மை நிலை நிறுத்திக் கொள்ளவேண்டும்.

தமது பெருவாரியான நேரங்களை அல்லாஹ்வுக்காக செலவு செய்து மார்க்க கல்வியை கற்றுத் தெளிவடைந்து அதன் பலனாக இன்று மார்க்க அறிஞர்களாக மிளிர்ந்து கொண்டுள்ளீர்கள்.

 இதனை நினைந்து திருப்தி கொண்டிருக்கும் நிலையில் இதைக் கொண்டு சமூக மதிப்படைய வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தோடு நில்லாமல் நீங்கள் பெற்றுள்ள இந்த மதிப்புமிக்க மார்க்க கல்வியை தங்கள் குடும்பத்தார்க்கும், சுற்றத்தார்க்கும் கற்றுத் தெளிவடைய செய்ய வேண்டும்.

அத்தோடு இந்த தெளிந்த தீனுல் இஸ்லாமின் தெளிவான கோட்பாடு களையும், வல்ல ரஹ்மானின் திருமறையை கற்றுணர்ந்தவர்களாகவும், மாநபியின் வாழ்க்கை தடத்தை பின்பற்றி பற்றி பிடித்து செல்லும் நன்மக்களாக அவர்களை மாற்றம் செய்ய வேண்டும் என்ற உளப்பாட்டோடு இனி நீங்கள் இயங்க கடமைப் பட்டுள்ளீர்கள் என்பதை மறக்க வேண்டாம்.

இன்றைய தினம் கற்றறிந்த மார்க்க அறிஞர்களே! சைத்தானிய விழுமியங்களுக்குள் சிக்கி சீரழியும் நிலையில் படித்தறியா பாமர மக்களின் நிலையுணர்ந்து அவர்களை இன்றைய நவீன நச்சுகலப்பில் சிக்கி சீரழியாமல் பாதுகாத்து இனி இந்த இஸ்லாமை தம் வாழ்வின் ஒவ்வொரு அசைவு களிலும் செயல்படுத்தும் சான்றோர் பெருமக்களை பெருமளவில் உற்பத்தி செய்து அவர்களை இஸ்லாத்தினை தாங்கிச் செல்லும் தூண்களாக செம்மைப் படுத்த நீங்கள் கடமைப் பட்டுள்ளீர்கள்.

இன்னும் நிதர்சனமாக கூறவேண்டுமெனில் பெண்களே! ஓர் சமூகத்தின் நலப்பாட்டிற்கு பெரிதும் துணை கொள்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். ஓர் மனிதனின் ஒழுக்கம் சார்ந்த வாழ்வியலை அவனது குடும்ப சூழலே! கட்டியமைக்கிறது.
 அந்த வகையில் தமது வாழ்வின் பெரும் பகுதியான பருவத்தை தமது தாய், சகோதரிகள், மனைவி போன்ற பெண் சமூகத்தோடுதான் ஒவ்வொரு மனிதனும் பயணிக்கிறான். ஆகவேதான்! பெண்களிடமிருந்து பெறப்படும் நலவுகள் யாவும் அவனை எளிதில் அணுகுகின்றன.
இதனடிப்படையில் பெண்கள் சமூகம்! போதிக்கக் கூடிய கற்றறிந்த சமூகமாக இருந்தால் தம்மைச் சார்ந்தோரையும் தமது சந்ததிகளையும் ஒழுக்க மேம்பாட்டில் சிறந்தவர்களாக உருவாக்க முடியும்.
ஆகவேதான்! மார்க்கத்திற்கு எதிரான முரண்களில் திளைத்து நிற்கும் சமூகத்தை மடைமாற்றி அவர்களை இந்த நெறிமிகு தீனுல் இஸ்லாமின் சீர்மிகு கோட்பாடுகளை பற்றிப் பிடிக்கும் நலமிகு சமூகமாக மாற்றிட பெண்களின் பங்கே! பெரும்பகுதியாகும்.
ஓர் பெண்! கற்றறிந்த ஓர் கருத்தியல் ஆளுமையாக வலம்வரும் வேளையில் அவளால் தமது குடும்பத்தாரும், சுற்றத்தாரும் தெளிந்தோராக, நன்னெறி களில் திளைத்தோராக வளம் பெறமுடியும்.
இந்த பாரிய நோக்கத்திற்காகவே! இன்றைய சூழலில் நம் சமுதாய பெண்கள் மார்க்கம் கற்று தரும் அறிவார்ந்த பெண் சமூகமாக ஓங்கி ஒலிக்க வேண்டும்.
இன்று அவர்களை மையப் படுத்தி முத்தலாக் போன்ற விடயங்களை கையில் எடுத்து நயவஞ்சகம் புரியும் பாசிஷவாதிகளை தம் அறிவெனும் ஆயுதம் கொண்டே வீழ்த்தி தமக்கான உரிமைகளை இஸ்லாம் எங்ஙனம் தந்து தம்மை பாதுகாக்கிறது என்பதை உங்களின் தெளிவான மொழிகளில் அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.

மேலும் இந்த மார்க்கம் இன்றைய சூழலில் பலவாறான அச்சுறுத்தலுக்கும் அவப் பெயருக்கும், சூழ்ச்சிகளுக்கும் ஆட்கொள்ளப்பட்டு பல்வேறு சிக்கல்களை சந்தித்துக் கொண்டுள்ளது,

ஆனால் இவற்றையெல்லாம் ஒப்பற்ற கொள்கைநெறி கொண்ட இஸ்லாமிய ஒளியில் உடைத்தெறிய வேண்டிய இளையோர் சமுதாயம் இன்று உணர்ச்சிப் பிழம்பால் சகலவித நிலைகளில் இன்று சமூக வலைத்தளங்களில் பதிலளித்துக் கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது.

இம்மார்க்கம் தம் தலைமீது குப்பைகளை வீசி அவமதிப்பு செய்த பெண்ணை தம் பொறுமையின்பால் மார்க்கத்தின் பக்கம் ஈர்த்த நபிகளாரைத் தந்தது. கோபத்தின் பிறப்பிடமாய் திகழ்ந்த தீரர் உமர்(ரலி) யை சாந்த சொரூபியாக மார்க்கத்தின் பால் பல வெற்றிகளை குவித்த மாவீரராக மடை மாற்றியது.

ஆகவே விளக்கம் எனும் வெளிச்சத்தைக் கொண்டு எதிரிகளின் புரட்டு  வாதங்களை தவிடு பொடியாக்கி தகர்த்து இஸ்லாத்தை ஒட்டுமொத்த உலகுக்கு எடுத்துச் சொல்வோம்.
மண்ணும் மணக்கிற பூமி... இது உங்கள் மனசை அள்ளிச் செல்லும்.

புதன், 13 செப்டம்பர், 2017

“புவியும் ஓர் அமானிதமே” ஏன்? ஓர் பார்வை....“புவியும் ஓர் அமானிதமே” ஏன்? ஓர் பார்வை....
“சமீபத்தில் சகோதரர் ஒருவருடன் கலந்துரையாடினேன், அந்த கலந்துரையாடலின்போது  அவர் இவ்வாறு குறிப்பிட்டார், இந்த உலகம் என்பது நமக்கானது அல்ல!, இது ஆண்டவனின் அமானிதமாகும்”,

 ஆகவே இதனை நாம் எவ்வாறு உடையவனிடத்தில் இருந்து பெற்றுக் கொண்டோமோ! அதுபோலவே திருப்பி ஒப்படைக்க வேண்டும்.
உடையவன் என்று நாம் குறிப்பிடுவது அந்த ஒப்பற்ற ஓரிறைவனைத்தான். ஆனால் இந்த உலகிடமிருந்து நாம் பெற்றுக்கொண்டதை, அந்த பூமியின் உடையவனிடம் நாம் ஒப்படைப்பது சாத்தியமில்லை,

அப்படியானால் அந்த ஒப்படைவை எங்ஙனம் சாத்தியப் படுத்துவது?.

 இதற்கான விடையையும் அவரே தொகுத்தார், இந்த உலகிடமிருந்து நாம் எந்த நல்லவைகளை எல்லாம் பெற்றுக் கொண்டு பயனடைந்தோமோ!, 

அதனை அப்படியே  திருப்பி ஒப்படைப்பது இறைவனிடம் அல்ல! மாறாக இனிவரும் அவன் படைத்த, படைக்கப் போகும் நமது தலைமுறைக்கே!
இதனை கேட்டபோது எனக்கு அதிலிருந்து பெற்ற அந்த சமூகநோக்கு சிந்தனையில் ஆழ்த்தியது,

ஆம்! எப்படி நாம் நமது சொத்துக்களை சேர்க்கின்றோமோ, பின்னர் அவ்வாறு சேமிக்கப்பட்டதை எல்லாம் எவ்வாறு நாம் நமது தலைமுறையிடம் முறைப்படி ஒப்படைக்கின்றோமோ! 

மேலும் நாம் சம்பாதிக்கும் ஒவ்வொரு சம்பாத்தியத்தையும் எவ்வாறு அது இறைவனால் நமக்கு கொடுக்கப்பட்டது என்றெண்ணி இறைக்கட்டளைக்கு கட்டுப்பட்டு தர்மம் (ஜக்காத் மற்றும் சதகா) செய்கிறோமோ!

அதுபோல்தானே இந்த பூமியில் இருந்து நாம் பெற்றுக் கொண்டதை எல்லாம் அனுபவித்து விட்டு நம்மிடம் எவ்வாறு இறைவன் கொடுத்தானோ? 

அவ்வாறே நமது தலைமுறையிடம் இந்த பூமியை ஒப்படைவு செய்ய வேண்டும் என்பதும்,

சரி, இப்போது இந்த பூமியை அப்படித்தானே நாம் வழக்கமாக நமது தலைமுறையினரிடம் விட்டுச் செல்கிறோம்,

 இப்போது இந்த விளக்கம் தேவைதானா? என்று எண்ணத் தோணும், எங்கே? நாம் அப்படித்தானா விட்டுச் செல்கிறோம்?,

இந்த பூமி தமக்கானது என்ற மமதையில் உழன்றுகொண்டு இருக்கின்றோம், எந்த அளவு அதன் மீது வன்முறை நிகழ்த்த முடியுமோ, அந்த அளவுக்கு அதன் மீது ஓர் பகீரத பிரயத்தனத்தை உபயோகித்து அதனை நாசமாக்குகிறோம்.

பூமியை எவ்வாறு பாதுகாப்பது என்றால் அது நிலம், நீர் மற்றும் காற்று மாசடையாமல் பார்த்துக் கொள்வது, இன்று அப்படியாகவா இருக்கிறது!

 ஏற்கனவே நீரின்றி வறண்டு கிடக்கும் இந்த பூமியில் மேலும் பாழ்படுத்தும் முகமாய் பிளாஸ்டிக் கழிவுகளை உரமிட்டு வைக்கிறோம், உரம் என்பது நன்றாக செழிக்கவைப்பது ஆனால் இந்த பிளாஸ்டிக் உரமோ! செழித்தோங்குவதை அழித்து நாசமாக்குவது. இதைத்தான் நாம் இந்த பூமிக்கு இலவச உரமாக இட்டு நம்மை அது காப்பதற்கு பிரதிபலனாய் அதற்கு நாம் படிப்படியாக மரண தண்டனை தந்து கொண்டிருக்கின்றோம். அதன் சுவாசத்தில் நஞ்சை செலுத்தி  நசுக்குகிறோம்.

இன்றோ! பரவலாக, கல்யாணம் முதல் பொதுக்கூட்டம் வரை அனைத்து மக்கள்திரள் நிகழ்வுகளிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பரவலாக்கப் பட்டிருக்கின்றன.

சமூகத்தின்பால் அக்கறை கொண்டு அனைத்து மக்கள் கூடும் இடங்களிலும் தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தீர்க்க பாடுபடும் அமைப்புகள்கூட இன்று சர்வ சாதாரணமாக தமது பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ளும் சகமக்களுக்கு பிளாஸ்டிக் பண்டங்களாலான குடிநீர் பைகளையும் குடுவைகளையும் வழங்கி குடிக்க வைக்கின்றன. 

சரி! வேறென்ன செய்ய இதற்கு மாற்றுவழி எப்படி ஏற்படுத்துவது இலட்சக்கணக்கில் மக்கள் கூடுகையில் அவர்களிடம் சொம்புகளைக் கொண்டு நீர் புகட்டக் கூறுகிறீரா! என்று குதர்க்கமாக எண்ண வேண்டாம், அதிலுள்ள  நியாயப்பாடும் ஏற்புடையதே!

அதே சமயம்! அதற்கான மாற்று ஏற்பாடுகளை சற்று சிந்திக்க தூண்டினால்  என்ன?

 தண்ணீர் வழங்க பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றான ஒரு பொருளைத் தேட வழி ஏற்படுத்த வேண்டும். அதற்கான மாற்றை உண்டாக்க தன்னிடம் உள்ள இளைஞர்களை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

இது எழுதுவதும் மற்றும் சொல்வதும் எளிதுதான்!, அதேவேளையில் இறங்கி செயல்பட உதவாது எனலாம்,

 நாம் இங்கு கூறுவது முயற்சி செய்ய வைக்கத்தான், முடிவென்பது எல்லாம் வல்லவனின் கைகளில்தான் உள்ளது

இன்று உலகம் முழுதும் வியாபித்து இருக்கும் பலதரப்பட்ட பொருட்களை கண்டறிந்த ஓர் சமூகத்தால் இதுகூடவா? முடியாது,

 முற்றிலும் கடினமான மருத்துவப் பொருட்களையும் (இப்னு.ஷினா) கணிதக் குறியீடுகளையும் (அல் ஜீப்ரா) இறையருளால் கொடுத்த சமூகம் அல்லவா! நம் சமூகம்,ஆகவே இதற்கான மாற்றையும் நிச்சயம் அவர்கள் கொண்டு வருவார்கள் என நம்பலாம்,

பொதுவாக நம் இயக்கங்கள் நடத்தும் மாநாடுகளில் மற்றும் பொதுக்கூட்டங்களில் இலட்சக் கணக்கில் கூடும் நம் மக்கள்திரளை ஊடகங்களும், பரந்துபட்ட மற்றைய சமூகமும் கண்டுகொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறோம் மற்றும் ஆதங்கப்படுகிறோம்.

 அதுபோல், பிறசமூகத்தவரிடமும் நம் இயக்கத்தவர்கள் நடத்துகின்ற  பொதுக்கூட்டங்களும், மாநாடுகளும் அதில் நடந்தேறும் ஒழுக்க விழுமியங்கள் சார்ந்து பரவலாக பாராட்டி பேசப்படுகிறது.

அவ்வாறு இருக்கும்போது சுற்றுச் சூழலை கருத்தில்கொண்டு நாம் பரவலாக ஏதேனும் ஒன்றை புதுமையாக கொணரும்போது அதுவும் பிற சமூகத்தால் கவரப்பட்டு ஒவ்வொரு சமூகமும் ஊக்கம்பெற வழிவகை செய்யும்.

மனிதநேயம் வளர்க்கப் பாடுபடுவதோடு இந்த மானுடம் செழிக்கவும்  பாடுபட வேண்டும் என மார்க்கம் பேசுகிறது,

அந்த வகைதனில் சமூகத்திற்கு தீங்கிழைக்கும் அல்லவைகளை களையப் பாடுபடுவதும் மானுடம் செழிக்கவும், சமூகம் தழைத்தோங்கவும் செய்யும் தார்மீகப் பணியும் மார்க்கப் பணியே ஆகும்.

இங்குள்ள யாவரும் விரும்பி பிளாஸ்டிக்கை உபயோகிப்பதில்லை மாறாக அதற்கு மாற்று இல்லை எனும்போதும் மேலும் எளிமைப் படுத்துதலின் அவசியம் கருதியுமே இன்று விரும்பியோ! அல்லது விரும்பாமலோ இந்த பாழாய்ப்போன பிளாஸ்டிக்கை உபயோகிக்கிறோம்.

ஆகவே இன்னமும் இந்த சமூகம் நம்பகமான நச்சுக்கலவாத ஒரு மாற்றை எதிர்நோக்கி காத்து கிடக்கிறது. மேலும் பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றாக தாள்களில் பயன்படுத்தப்படும் பொருட்கள் காணப்பட்டாலும் அவை ஒரு குறிப்பிட்ட கொள்ளளவுக்கு மட்டுமே பயன்தருவனவாக உள்ளது.

இவை மட்டுமல்ல! மேலும் ஒரு முக்கியமான பேசவேண்டிய கூறும் இதில் இருக்கின்றது.

அதுதான் மக்களின் மனநிலையில் ஏற்படவேண்டிய மாற்றம்!!, எளிமை என்றெனக் கருதி இன்று ஏராளமானோர் இந்த பிளாஸ்டிக் நச்சுகளின் பயன்பாட்டில் விட்டிலாய் வந்து விழுகின்றனர்.

இதற்காகத்தான் இந்த சமூகம் நோக்க இயக்கங்கள் நடத்தும் சடங்குகளில் இந்த மாற்றத்தை முறைப்படுத்த வேண்டுமென்பது. இவ்வாறு ஓரிடத்தில் ஒன்றுகூடும் மக்கள் திரளிடையே இந்த மாற்றவிதையை தூவிக் கொண்டிருந்தால் போதும் மாற்றம் மனதில் விதைந்துவிடும். 

(கவனிக்கவும் ‘தூவிக்கொண்டிருக்க வேண்டும்” என்பதை).
மேலும் பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றான ஒன்றை கண்டுணர்ந்து இதுபோன்ற மாநாடுகளிலும், பொதுக்கூட்டங்களிலும் சந்தைப் படுத்திவிட்டால் மக்கள் அதனைக் கண்டுணர்ந்து தமது நுகர்வை அதை நோக்கி திருப்பக்கூடும்.

சமூக நலனுக்காகவே கூடும் இது போன்ற கூடல்களில் கூடுதலாக ஓர் பொதுநலமும் கூடி ஒரு புது வடிவம் பெறும்.

கண்டுகொள்வார்களா? கண்ணான இயக்கங்கள்...

     
மண்ணும் மணக்கிற பூமி... இது உங்கள் மனசை அள்ளிச் செல்லும்.