அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.) பாக்கம் கோட்டூர் வலைத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது, இன்றைய நாகை மாவட்டச் செய்திகள்:நாகப்பட்டினம் மாவட்டத்தில் வக்ஃப் வாரியத்தில் பதிவு பெற்ற வக்ஃப் நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம்-30-07-21, தெரியுமா உங்களுக்கு? நாகை மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் பெயர் பெயர் திரு. லியாக்கத் அலி

புதன், 13 செப்டம்பர், 2017

“புவியும் ஓர் அமானிதமே” ஏன்? ஓர் பார்வை....



“புவியும் ஓர் அமானிதமே” ஏன்? ஓர் பார்வை....
“சமீபத்தில் சகோதரர் ஒருவருடன் கலந்துரையாடினேன், அந்த கலந்துரையாடலின்போது  அவர் இவ்வாறு குறிப்பிட்டார், இந்த உலகம் என்பது நமக்கானது அல்ல!, இது ஆண்டவனின் அமானிதமாகும்”,

 ஆகவே இதனை நாம் எவ்வாறு உடையவனிடத்தில் இருந்து பெற்றுக் கொண்டோமோ! அதுபோலவே திருப்பி ஒப்படைக்க வேண்டும்.
உடையவன் என்று நாம் குறிப்பிடுவது அந்த ஒப்பற்ற ஓரிறைவனைத்தான். ஆனால் இந்த உலகிடமிருந்து நாம் பெற்றுக்கொண்டதை, அந்த பூமியின் உடையவனிடம் நாம் ஒப்படைப்பது சாத்தியமில்லை,

அப்படியானால் அந்த ஒப்படைவை எங்ஙனம் சாத்தியப் படுத்துவது?.

 இதற்கான விடையையும் அவரே தொகுத்தார், இந்த உலகிடமிருந்து நாம் எந்த நல்லவைகளை எல்லாம் பெற்றுக் கொண்டு பயனடைந்தோமோ!, 

அதனை அப்படியே  திருப்பி ஒப்படைப்பது இறைவனிடம் அல்ல! மாறாக இனிவரும் அவன் படைத்த, படைக்கப் போகும் நமது தலைமுறைக்கே!
இதனை கேட்டபோது எனக்கு அதிலிருந்து பெற்ற அந்த சமூகநோக்கு சிந்தனையில் ஆழ்த்தியது,

ஆம்! எப்படி நாம் நமது சொத்துக்களை சேர்க்கின்றோமோ, பின்னர் அவ்வாறு சேமிக்கப்பட்டதை எல்லாம் எவ்வாறு நாம் நமது தலைமுறையிடம் முறைப்படி ஒப்படைக்கின்றோமோ! 

மேலும் நாம் சம்பாதிக்கும் ஒவ்வொரு சம்பாத்தியத்தையும் எவ்வாறு அது இறைவனால் நமக்கு கொடுக்கப்பட்டது என்றெண்ணி இறைக்கட்டளைக்கு கட்டுப்பட்டு தர்மம் (ஜக்காத் மற்றும் சதகா) செய்கிறோமோ!

அதுபோல்தானே இந்த பூமியில் இருந்து நாம் பெற்றுக் கொண்டதை எல்லாம் அனுபவித்து விட்டு நம்மிடம் எவ்வாறு இறைவன் கொடுத்தானோ? 

அவ்வாறே நமது தலைமுறையிடம் இந்த பூமியை ஒப்படைவு செய்ய வேண்டும் என்பதும்,

சரி, இப்போது இந்த பூமியை அப்படித்தானே நாம் வழக்கமாக நமது தலைமுறையினரிடம் விட்டுச் செல்கிறோம்,

 இப்போது இந்த விளக்கம் தேவைதானா? என்று எண்ணத் தோணும், எங்கே? நாம் அப்படித்தானா விட்டுச் செல்கிறோம்?,

இந்த பூமி தமக்கானது என்ற மமதையில் உழன்றுகொண்டு இருக்கின்றோம், எந்த அளவு அதன் மீது வன்முறை நிகழ்த்த முடியுமோ, அந்த அளவுக்கு அதன் மீது ஓர் பகீரத பிரயத்தனத்தை உபயோகித்து அதனை நாசமாக்குகிறோம்.

பூமியை எவ்வாறு பாதுகாப்பது என்றால் அது நிலம், நீர் மற்றும் காற்று மாசடையாமல் பார்த்துக் கொள்வது, இன்று அப்படியாகவா இருக்கிறது!

 ஏற்கனவே நீரின்றி வறண்டு கிடக்கும் இந்த பூமியில் மேலும் பாழ்படுத்தும் முகமாய் பிளாஸ்டிக் கழிவுகளை உரமிட்டு வைக்கிறோம், உரம் என்பது நன்றாக செழிக்கவைப்பது ஆனால் இந்த பிளாஸ்டிக் உரமோ! செழித்தோங்குவதை அழித்து நாசமாக்குவது. இதைத்தான் நாம் இந்த பூமிக்கு இலவச உரமாக இட்டு நம்மை அது காப்பதற்கு பிரதிபலனாய் அதற்கு நாம் படிப்படியாக மரண தண்டனை தந்து கொண்டிருக்கின்றோம். அதன் சுவாசத்தில் நஞ்சை செலுத்தி  நசுக்குகிறோம்.

இன்றோ! பரவலாக, கல்யாணம் முதல் பொதுக்கூட்டம் வரை அனைத்து மக்கள்திரள் நிகழ்வுகளிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பரவலாக்கப் பட்டிருக்கின்றன.

சமூகத்தின்பால் அக்கறை கொண்டு அனைத்து மக்கள் கூடும் இடங்களிலும் தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தீர்க்க பாடுபடும் அமைப்புகள்கூட இன்று சர்வ சாதாரணமாக தமது பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ளும் சகமக்களுக்கு பிளாஸ்டிக் பண்டங்களாலான குடிநீர் பைகளையும் குடுவைகளையும் வழங்கி குடிக்க வைக்கின்றன. 

சரி! வேறென்ன செய்ய இதற்கு மாற்றுவழி எப்படி ஏற்படுத்துவது இலட்சக்கணக்கில் மக்கள் கூடுகையில் அவர்களிடம் சொம்புகளைக் கொண்டு நீர் புகட்டக் கூறுகிறீரா! என்று குதர்க்கமாக எண்ண வேண்டாம், அதிலுள்ள  நியாயப்பாடும் ஏற்புடையதே!

அதே சமயம்! அதற்கான மாற்று ஏற்பாடுகளை சற்று சிந்திக்க தூண்டினால்  என்ன?

 தண்ணீர் வழங்க பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றான ஒரு பொருளைத் தேட வழி ஏற்படுத்த வேண்டும். அதற்கான மாற்றை உண்டாக்க தன்னிடம் உள்ள இளைஞர்களை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

இது எழுதுவதும் மற்றும் சொல்வதும் எளிதுதான்!, அதேவேளையில் இறங்கி செயல்பட உதவாது எனலாம்,

 நாம் இங்கு கூறுவது முயற்சி செய்ய வைக்கத்தான், முடிவென்பது எல்லாம் வல்லவனின் கைகளில்தான் உள்ளது

இன்று உலகம் முழுதும் வியாபித்து இருக்கும் பலதரப்பட்ட பொருட்களை கண்டறிந்த ஓர் சமூகத்தால் இதுகூடவா? முடியாது,

 முற்றிலும் கடினமான மருத்துவப் பொருட்களையும் (இப்னு.ஷினா) கணிதக் குறியீடுகளையும் (அல் ஜீப்ரா) இறையருளால் கொடுத்த சமூகம் அல்லவா! நம் சமூகம்,ஆகவே இதற்கான மாற்றையும் நிச்சயம் அவர்கள் கொண்டு வருவார்கள் என நம்பலாம்,

பொதுவாக நம் இயக்கங்கள் நடத்தும் மாநாடுகளில் மற்றும் பொதுக்கூட்டங்களில் இலட்சக் கணக்கில் கூடும் நம் மக்கள்திரளை ஊடகங்களும், பரந்துபட்ட மற்றைய சமூகமும் கண்டுகொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறோம் மற்றும் ஆதங்கப்படுகிறோம்.

 அதுபோல், பிறசமூகத்தவரிடமும் நம் இயக்கத்தவர்கள் நடத்துகின்ற  பொதுக்கூட்டங்களும், மாநாடுகளும் அதில் நடந்தேறும் ஒழுக்க விழுமியங்கள் சார்ந்து பரவலாக பாராட்டி பேசப்படுகிறது.

அவ்வாறு இருக்கும்போது சுற்றுச் சூழலை கருத்தில்கொண்டு நாம் பரவலாக ஏதேனும் ஒன்றை புதுமையாக கொணரும்போது அதுவும் பிற சமூகத்தால் கவரப்பட்டு ஒவ்வொரு சமூகமும் ஊக்கம்பெற வழிவகை செய்யும்.

மனிதநேயம் வளர்க்கப் பாடுபடுவதோடு இந்த மானுடம் செழிக்கவும்  பாடுபட வேண்டும் என மார்க்கம் பேசுகிறது,

அந்த வகைதனில் சமூகத்திற்கு தீங்கிழைக்கும் அல்லவைகளை களையப் பாடுபடுவதும் மானுடம் செழிக்கவும், சமூகம் தழைத்தோங்கவும் செய்யும் தார்மீகப் பணியும் மார்க்கப் பணியே ஆகும்.

இங்குள்ள யாவரும் விரும்பி பிளாஸ்டிக்கை உபயோகிப்பதில்லை மாறாக அதற்கு மாற்று இல்லை எனும்போதும் மேலும் எளிமைப் படுத்துதலின் அவசியம் கருதியுமே இன்று விரும்பியோ! அல்லது விரும்பாமலோ இந்த பாழாய்ப்போன பிளாஸ்டிக்கை உபயோகிக்கிறோம்.

ஆகவே இன்னமும் இந்த சமூகம் நம்பகமான நச்சுக்கலவாத ஒரு மாற்றை எதிர்நோக்கி காத்து கிடக்கிறது. மேலும் பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றாக தாள்களில் பயன்படுத்தப்படும் பொருட்கள் காணப்பட்டாலும் அவை ஒரு குறிப்பிட்ட கொள்ளளவுக்கு மட்டுமே பயன்தருவனவாக உள்ளது.

இவை மட்டுமல்ல! மேலும் ஒரு முக்கியமான பேசவேண்டிய கூறும் இதில் இருக்கின்றது.

அதுதான் மக்களின் மனநிலையில் ஏற்படவேண்டிய மாற்றம்!!, எளிமை என்றெனக் கருதி இன்று ஏராளமானோர் இந்த பிளாஸ்டிக் நச்சுகளின் பயன்பாட்டில் விட்டிலாய் வந்து விழுகின்றனர்.

இதற்காகத்தான் இந்த சமூகம் நோக்க இயக்கங்கள் நடத்தும் சடங்குகளில் இந்த மாற்றத்தை முறைப்படுத்த வேண்டுமென்பது. இவ்வாறு ஓரிடத்தில் ஒன்றுகூடும் மக்கள் திரளிடையே இந்த மாற்றவிதையை தூவிக் கொண்டிருந்தால் போதும் மாற்றம் மனதில் விதைந்துவிடும். 

(கவனிக்கவும் ‘தூவிக்கொண்டிருக்க வேண்டும்” என்பதை).
மேலும் பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றான ஒன்றை கண்டுணர்ந்து இதுபோன்ற மாநாடுகளிலும், பொதுக்கூட்டங்களிலும் சந்தைப் படுத்திவிட்டால் மக்கள் அதனைக் கண்டுணர்ந்து தமது நுகர்வை அதை நோக்கி திருப்பக்கூடும்.

சமூக நலனுக்காகவே கூடும் இது போன்ற கூடல்களில் கூடுதலாக ஓர் பொதுநலமும் கூடி ஒரு புது வடிவம் பெறும்.

கண்டுகொள்வார்களா? கண்ணான இயக்கங்கள்...

     




மண்ணும் மணக்கிற பூமி... இது உங்கள் மனசை அள்ளிச் செல்லும்.