அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.) பாக்கம் கோட்டூர் வலைத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது, இன்றைய நாகை மாவட்டச் செய்திகள்:நாகப்பட்டினம் மாவட்டத்தில் வக்ஃப் வாரியத்தில் பதிவு பெற்ற வக்ஃப் நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம்-30-07-21, தெரியுமா உங்களுக்கு? நாகை மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் பெயர் பெயர் திரு. லியாக்கத் அலி

வியாழன், 26 நவம்பர், 2015

"இளமையின் இன்ப நினைவுகள்"

بسم الله الرحمن الرحيم
*************************************************************************************************************************

நமதூர் மூத்த சகோதரர் H.M. Najim (Hasan) ஹசன் முஹம்மது அவர்கள் முகநூலில் தொடர்ந்து  எழுதிவரும்"இளமையின் இன்ப நினைவுகள்" 


தொடர்  அல்லாஹ் அருளால் .... H.M. Najim (Hasan) ஹசன் முஹம்மது  அவர்கள் அனுமதியுடன்.. இங்கு இடம்பெறுகிறது...

===================================================================================================== 
சகோதரர். ஹசன் முஹம்மது நாஜிம் அவர்கள் .


============================================================================================ 

நமதூர் பற்றிய பசுமையான பழைய நினைவுகள்.. இங்கே.. அள்ளித் தருபவர்: சகோதரர்  HM Najim அவர்கள்..

தொகுப்பு: (முகநூலில் பதிவாகி பாக்கம் கோட்டூர் முகநூல் பக்கத்தில் தொடர்ந்து பகிரப் பட்டுவந்ததின் தொகுப்பு- முதல் தொகுதி)



பாக்கம்-கோட்டூர் நடுத்தரமான கிராமம். ""புத்தார்"" என்ற ஆறு ஓடுகிறது. அக்கரையில், பாக்கம், இக்கரையில் கோட்டூர். இரண்டும் சேர்ந்து "பாக்கம்- கோட்டூர் ஆனது. கோட்டூர் என்று பல இடங்களில் இருக்கிறது. ஆகையினால், ஏனங்குடி கோட்டூர் அல்லது வடகரை கோட்டூர் என்று குறியிட்டு சொல்வார்கள். இது ஒரு உட்கிராமம். 

அப்பொழுது ஓட்டு வீடுகள், கூரை வீடுகள் தான். ஒரு மளிகை கடை, ஒரு டீ கடை, ஒரு இறைச்சி கடை, ஒரு முடி வெட்டும் கடை, ஒரு ஸ்வீட் கடை, ஒரு கொல்லம் பட்டரை, ஒரு சில்லரை சாமான் கடை, ஒரு வாடகை சைகிள் கம்பெனி. ஒரு நாட்டு வைத்தியர், ஒரு ஆங்கில டாக்டர்.

மளிகை கடையை "தோப்பு கடை" என்போம். பகுருதீன் அப்பா தான் முதலாளி. ரொம்ப தமாஷாக பேசுவார்கள். ஹனீபா என்பவர் டீ கடைக்கு உரிமையாளர். அதனால் அவர் டீ கடை ஹனீபாவாகி விட்டார். ஹனீபா என்பவர் இறைச்சி வியாபாரம் செய்தார். இடது கையால் இறைச்சி வெட்டுவார். வல்லாங் கை ஹனீபாவாகி விட்டார். முடி வெட்டும் கடையில் வெள்ளிக்கிழமை தான் கூட்டம். கிராப் வெட்டுவதற்கு ஒரு ஆள். மொட்டை அடிப்பதற்கு ஒரு ஆள். மொட்டை அடிப்பவரை, "பீக்கங்காய் சொரண்டி" என்று சொல்வோம். அந்த மாதிரி மொட்டை அடிப்பார்.

சங்கரன் என்பவர் ஸ்வீட் கடைக்கு உரியவர். மதியத்திற்கு பிறகு தான் வியாபாரம். அல்வா, பூந்தி, காரவகைகள் எல்லாம்,ருசியாக இருக்கும். நிஜாமுதீன் கடையில், ஒட்டுக்கடையைப் போல் பல வகையான சாமான்கள் இருக்கும். கொல்லம் பட்டரையில் இரும்பு சம்பந்தப் பட்ட சாமான்களை செய்து கொடுப்பார். அடுத்து தட்டான் என்ற சில்லரை நகை வேலை செய்பவர்கள். 

நாட்டு வைத்தியர் நாராயணன், ஆங்கில டாக்டர் சீனிவாசன். எந்த நேரத்தில் கூப்பிட்டாலும் வந்து விடுவார்கள். நாராயணன் மகன் சிவசுப்ரமணியன், சீனிவாசன் மகன் பன்னீர்செல்வம் தந்தையின் தொழிலை செய்கிறார்கள். நானும், இவர்களும், வாத்தியார்"காதர், பசீர், செட்டியார் பசீர், சேக்கப்பா வீட்டு தாஜ் இன்னும் நிறைய பேர் ஏனங்குடி ஹைஸ்கூல் சென்று படித்தோம். பசை வீட்டு அப்துல் ரஹ்மான், ""அருளாளன்"" வாடகை சைகிள் கம்பெனியை முதலில் ஆரம்பித்தார். லியாகத் அலி கடைக்கு எதிரே தான் முன்பு சைகிள் கம்பெனி இருந்தது. 



அப்பொழுது உள்ள நாணயம் "அனா" என்பதாகும். அதாவது 1/4, 1/2, 3/4, 1, 2, 8 அனா என்று புழக்கத்தில் இருந்தது. 1, 5, 10, 50, 100 என்று கரன்சி,நோட்டுகள். ஒரு ரூபாய்க்கு 16 அனா. தராசு நிறுவையில் சேர், வீசை, மனுங்கு என்று "படிக்கல்" இருக்கும். நெல் அளவையில், படி, மரக்கால். 4படி 1 மரக்கால். 24 மரக்கால் 1 மூட்டை. பால், தயிர் அளவையில் படி, மரக்கால் முறைதான். தே. எண்ணை, ந.எண்ணை, ம.எண்ணை அளவு, "சேர்"கணக்கில். 1/4, 1/2, 1 "சேர்" என்று குவலை இருக்கும். எல்லாவற்றுக்கும் அரசு முத்திரை இருக்க"வேண்டும். இல்லை என்றால் அபராதம்,விதிப்பார்கள். லஞ்சம்,என்பது,கிடையாது. ஒரு,மணி நேரத்திற்கு சைகிள்,வாடகை,,ஒரு,அனா,தான்.,
கோட்டூரில், நெல் அறவை மில் கிடையாது. வடகரையில்,இருந்தது. அப்போதெல்லாம் கரண்ட் இல்லாததால், ஆயில் இஞ்ஜின்,தான். நெல் அறைக்க வேண்டும் என்றால் வடகரை தான் போக"வேண்டும். குறிப்பிட்ட அளவு நெல் சேர்ந்த பிறகு தான் அறைக்க,ஆரம்பிப்பார்கள். 6மரக்கால் நெல்லை தலையில் சுமந்து அறைத்துக் கொண்டு வருவதற்குள் வேத்து விறுவிறுத்துவிடும். அது ஒரு இனிமையான அனுபவம். இன்றும் அந்த மில் இருக்கிறது. இப்போது அது "கரண்ட்" மில்.

நமதூர் மையத்துக் கொல்லையில் இரண்டு கபுரில் மட்டும் "கல்வெட்டு" இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். ஒன்று, மதிப்பிற்குரிய பாவா கனி சாஹிப் அவர்கள். மற்றொன்று மதிப்பிற்குரிய ஹஜ்ரத் முஹம்மது யூசுப் சாஹிப் அவர்கள். பாவா,கனி சாஹிபைப் பற்றி:- இவர்கள் தான் அப்போதைய நமதூர் பழைய பள்ளிவாசல் இமாம். கனீரென்ற குரல். அதோடு போஸ்ட் மாஸ்ட்டர். மெயின் ரோட்டில் பள்ளிவாசல் இருக்கும் இடம் "கொரடா" வீட்டுக்குச் சொந்தமானது. அதில் இரண்டு கடைகள். ஒரு கடையில் போஸ்ட் ஆபீஸ். மற்றொன்றில், லியாகத் அலி அத்தா, அப்துல் அஜீஸ் கடை. ஏனங்குடியிலிருந்து தபால் பையை, வடகரை முருகையன் என்பவர் சைகிளில் எடுத்து வருவார். விற்குடியில் இருந்து பியூன் வருவார். பையை திறந்து வடகரைக்கு உள்ள தபால் கட்டை முருகையனிடம் கொடுப்பார். கோட்டூரிலேயே முத்திரை குத்தி வடகரையில் பட்டுவாடா செய்வார். அப்போது வடகரையில் தபால் ஆபீஸ் இல்லை. கோட்டூரை சுற்றியுள்ள எல்லா கிராமங்களுக்கும் நமதூர் தபால் ஆபீஸ் தான் மெயின். வெளிநாடுகளிலிருந்து "போஸ்டல் ஆர்டர்" மூலம் தான் பணம் வரும். மாதம் ஒரு தடவை என் பெயருக்கு ரூ.30/= வரும். பியூனுடைய எழுத்து யாருக்கும் புரியாது. அதனால், " உன் எழுத்து உனக்கும் ஆண்டவனுக்கும் தான் புரியும். என்ன எழுதி இருக்கே? படிச்சு சொல்லு"ன்னு போஸ்ட் மாஸ்டர் திட்டுவார்கள். 

தபால் பை சென்னையிலிருந்து நாகை வரும். நாகையிலிருந்து பஸ் மூலம் ஏனங்குடி வரும். பிறகு அங்கிருந்து எல்லா கிராமங்களிலிருந்து வந்து பைகளை எடுத்துச் செல்வார்கள். அதிகாலையில், ராமன் & ராமன் மெயில் பஸ்ஸில் தான் தபால் பைகள் வரும். நாகை - கும்பகோணம் ரூட்டில் உள்ள ஊர்களுக்கும் இந்த பஸ்ஸில் தான் தபால் பைகள் போகும்.

பாக்கம்-கோட்டூர். அப்பொழுது, பிரதான சாலைகள் மட்டும் தார் ரோடு. மற்வை எல்லாம் மண் ரோடு தான். போக்கு வரத்து வசதியும் இல்லை. வெளியூர் செல்ல வேண்டும் என்றால் மாட்டு வண்டிதான். பஸ்ஸில் போக வேண்டும் என்றால் ஆண்டிபந்தல் அல்லது ஏனங்குடி, சத்தரம் போக வேண்டும். ராமன் & ராமன் பஸ் மட்டும் தான் சேவையில் இருந்து. நன்னிலம் போவதற்கு 5 அனா. ரயில் சேவையும் இருந்தது. நிலக்கரி இன்ஜின் தான்.

விசலூர் தான் ஸ்டேஷன். விசலூர், சத்தரம், ஆண்டி பந்தல் போவதற்கு மாட்டு வண்டிதான். முடிந்தவர்கள் நடந்து செல்வார்கள். ரயில் சேவை 1 மணி நேரத்திற்கு ஒரு தடவை. 9.30, 10.30, 11.30, 12.30 இதுபோல் மாயுரம் போகும். 8.00, 9.00, 10.00, 11.00 என்று திருவாரூர் போகும். 


பெரும்பாலும் எல்லோர் வீட்டிலும் வண்டியும், மாடும் இருக்கும். வாடகைக்கு வருபவர்கள் நடுத்தெரு ஹனீபா (முத்தலிப் அத்தா). அவர் வண்டிகார ஹனீபா. நாகப்பட்டினத்தார் வீட்டு அஜீஸ். தேவை பட்டால் தோப்புக்கடை காரங்க வண்டியையும் வரச்சொல்வார்கள். சேவுப்பிள்ளை வண்டி ஓட்டுவார். 1/2 இஞ்சிக்கு தார் குச்சியால் மாட்டை குத்துவார். வலி பொறுக்காமல் கத்தும். வாயில் நுரை தள்ளும். பெண்கள் அவரை ஏசுவார்கள். 
தோப்புக்கடை வீட்டில் இரண்டு வண்டி இருக்கும். கூண்டு வண்டி, பொட்டி வண்டி. கூண்டு வண்டியில் 10 பேர் வரை உட்காரலாம். பொட்டி வண்டியில் 4 - 5 பேர் தான் உட்கார முடியும். உட்காருவதற்கு வைக்கோலை பரப்பி அதற்கு மேல் ஜமக்காளம். இதுதான் அன்றைய வாகனம். அந்த நாளில் எல்லோருக்கும் சொந்த விவசாயம். அதனால் வண்டியும், மாடும் அவசியமாக இருந்தது.


பாக்கம்-கோட்டூரில் என் இளமை காலம்::= 

இரு போகம் விவசாயம் செய்வார்கள். இப்பொழுது ஒரு போகத்திற்கே திண்டாட்டமாக இருக்கிறது. இன்ன தேதிக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படும் என்று பேப்பரில் செய்தி வரும். விவசாய வேலைகள் மும்முரமாக நடக்கும். நிலங்களை சீர்செய்து, பன்படுத்தி தயார் நிலையில் இருக்கும். தண்ணீர் வந்ததும்,,அடுத்தடுத்த வேலைகள் சுறுசுறுப்பாக நடக்கும். வயல் கரையை சரி செய்வது, கொத்தி விடுவது, ஏர்உழுவது, மட்டப்படுத்துவது போன்ற வேலைகள் நடைபெறும்.


ஒவ்வொரு மிராசு வீட்டுக்கும் பண்ணை,ஆள், நடவாள் என்று இருப்பார்கள். பண்ணை ஆள் வெளி வேலைகளை கவனித்துக் கொள்வார். நடவாள் வீட்டு வேலைகளை கவனித்துக் கொள்ளும். ஒரு நல்ல நாள் பார்த்து விதை தெளிப்பார்கள். இந்த நிலத்தை நாற்றாங்கால் என்பார்கள். அது நாற்றாக வளர்ந்தவுடன், பிடிங்கி வேறு வயலில் நடுவார்கள்.

அதன் பிறகு, வளர்ந்து, கதிர் விட்டு, அறுவடை,ஆகும் வரைக்கும் கவனமாக பாதுகாக்கப்படும்.

நாற்று நடும் பெண்கள், அலுப்புத்,தெரியாமல் இருப்பதற்கு, நாட்டுப்புற பாடல்கள் பாடுவார்கள். வயலில் களை எடுப்பார்கள்.

ஆடு, மாடுகள் வயலில்,மேயாமல் பாதுகாக்க 2 தலையாரிகள். அப்படி ஆடு, மாடுகள் மேய்ந்தால் தலையாரி பிடித்துக் கொண்டு போய் விடுவார். தண்டனையாக பணம் கொடுத்துவிட்டு ஓட்டிவர வேண்டும். பெரும்பாலும் எல்லோருடைய வீட்டிலும் ஆடுகளும், மாடுகளும் இருக்கும். இருபோகம் முடிந்தவுடன் பயறு அல்லது உளுந்து தெளிப்பார்கள். 
 பாக்கம்-கோட்டூரில் என் இளமை நினைவுகள்
ஆற்றில் தண்ணீர் வந்து விட்டால் ஒரே கொண்டாட்டம். வாய்க்கால், குளம் எல்லாம் தண்ணீர் நிரம்பி வழியும். விவசாயத்திற்கு தண்ணீர் பஞ்சம் இருக்காது. பள்ளிக்கேணி, தோப்புக்கேணி , செட்டிக்கேணி. மீன் பிடிப்பதற்கு, வெள்ளிக்கிழமை ஏலம் விடப்படும். ஏலம் எடுத்தவர்கள் மீன் பிடித்த பிறகு, குளத்திற்கு தண்ணீர் விடப்படும். ஆற்றில் தண்ணீர் வந்தவுடன் அவரவர் வீட்டுக் கொல்லையிலோ, வேறு இடத்தில் இருக்கும் கொல்லையிலோ காய்கறி தோட்டம் போடுவார்கள். கத்திரி, வெண்டி, மிளகாய், பீர்க்கங்காய், புடலங்காய், கொத்தவரங்காய், பரங்கிக்காய், அவரக்காய் என்று. பலன் கொடுக்கும் காலத்தில் மிகவும் பயனாக இருக்கும்.

மழை காலத்தில் இன்னும் கொண்டாட்டமாக இருக்கும். ஆறு, குளம், வாய்க்கால் எல்லாம் தண்ணீர் கரை புரண்டு ஓடும். ஆற்றிலும், வாய்க்காலிலும் மீன் நிறைய கிடைக்கும். கூசாலி, கப் வலை எடுத்துக் கொண்டு மீன் பிடிக்க கிளம்பி விடுவேன். பல வகையான மீன்கள் கிடைக்கும். மழை "ச்சோ" ன்னு பெய்யும். அந்த மழையிலும் நனைந்து கொண்டே மீன் பிடிப்பேன். அந்த ஆனந்தத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை. ஏனங்குடி ரோட்டுக்கு மேலே தண்ணீர் ஓடும். வாலை மீன், பெரிய கெண்டை மீன் பிடித்திருக்கிறேன்.

...த மீன் கிடைத்தால் அக்கம், பக்கம் வீட்டுக்கு கொடுப்போம். அந்த நாட்களில் பெரும்பாலான வீட்டில் மீன் கறி வாசம் மூக்கை துளைக்கும். புது மீன், அம்மியில் அரைத்த மசாலா, மண் சட்டி, கறி எப்படி இருக்கும் தெரியுமா? அந்த இன்பத்தை எப்படி சொல்வேன்! ஆணம் சுண்ட, சுண்ட இன்னும் ருசியாக இருக்கும். அந்த நாட்களை இப்பொழுது நினைத்துப் பார்க்கும் போது, என்னை அறியாமலே ஒரு இன்ப உணர்ச்சி, மன மகிழ்ச்சி, இளமை நிகழ்ச்சி! ஆற்றிலும் , குளத்திலும் கூட்டாளிகளோடு கும்மாலம் போட்டு குளித்த குதூகலத்திற்கு ஈடில்லை. ஆற்றிலும், குளத்திலும் குளிக்க இறங்கினால், கரை ஏற குறைந்தது ஒரு மணி நேரமாகும்.
பாக்கம்-கோட்டூர்:- "" இளமையின் நினைவுகள்".

மழை காலத்தில் பார்த்தால், ஆளாளுக்கு வலை, கூசாலி என்று எடுத்துக் கொண்டு பொழுது விடியும் முன்பே கிளம்பி விடுவார்கள் மீன் பிடிப்பதற்கு. போதுமான மீன் கிடைத்தவுடன் கிளம்பி விடுவார்கள். ஆற்றில் அதிகமாக சாரமூட்டு, சின்ன சின்ன கெண்டை மீன்கள் கிடைக்கும்.

மின்சாரம் இல்லாத காலம். ஒரு வீட்டில் முதன் முதலாக ரேடியோ பாடுகிறது. சிறுவர்களான எங்களுக்கு ஒரே ஆச்சரியம்; சந்தோஷம் வேறே. ரேடியோ பாடின வீட்டை கண்டு புடிச்சிட்டோம். கீழத்தெருவில் ஒரு வீடு. ஆம். அது தேங்காபாலு வீடு. சமது அப்பா அவர்கள் பேட்டரியில் பாடக்கூடிய ரேடியோவை வாங்கியுள்ளார்கள். அப்போது சிலோன் வானொலி வர்த்தக ஒலிபரப்பில் தமிழ் பாட்டை கேட்கலாம். காலை, மதியம், மாலை, இரவு நேரங்களில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் கேட்கலாம்.
முதன் முதலில் நமதூரில் சொந்த கார் வைத்திருந்தவர்கள் யார் தெரியுமா? அதுவும் சமது அப்பா அவர்கள் தான். திருவாரூரில் நாகை ரோட்டில் இரும்புக்கடை திறந்தார்கள். முக்கியமாக கடைக்கு சென்று வரத்தான் கார் வாங்கினார்கள்.


சமது அப்பா, தாஜ் அப்பா, இவர்களின் தந்தை அஹமது அப்பா எல்லோரும் பர்மா சபுராளிகள். அங்கே சொந்த தொழில். கப்பல் போக்கு வரத்து தான். பர்மா தேக்கு தான் உயர்வான தேக்கு என்று சொல்வார்கள். பர்மா தேக்கை கொண்டு வந்து தேங்காபாலு வீடுகட்டப்பட்டது என்று சொல்வார்கள். சமது அப்பாவின் தாயார் ஹவ்வா பாட்டி. தாஜ் அப்பா பர்மாவில் திருமணம் செய்தவர்கள். பர்மாவில் ராணுவ புரட்சி ஏற்பட்டதால் எல்லோரும், குடும்பத்தோடு ஊருக்கு வந்து விட்டார்கள்.


ஊரில் இலுப்பை,மரம்"தான் அதிகம். முதலில் இலுப்பை தோப்பு , பிறகு தோப்பு என்றாகிவிட்டது. அந்த தோப்பு திருக்கண்ணபுரம் கோவிலுக்கு சொந்தமானது. தோப்பில் இருக்கும் கடைகள் எல்லாம் கோவிலுக்கு சொந்தமான இடங்கள். பகுருதீன் அப்பா தான் முதலில் மளிகை கடை வைத்தார்கள். மண் சுவர், கீற்று கூரை. எல்லா மளிகை சாமான்களும் இருக்கும். சரக்கு எடுக்க திருவாரூர் போவார்கள். 


தோப்புக்கடை, பகுருதீன் அப்பா வீட்டில் 4 - 5 ஜோடி மாடுகள், ஒரு பொட்டி வண்டி, ஒரு கூண்டு வண்டி, ஒரு மொட்டை வண்டி, இருக்கும். பொட்டி வண்டி வெளியூர் செல்வதற்காக. மொட்டை வண்டி வயல் வேலைக்கு. கூண்டு வண்டி கடைக்கு சாமான் ஏற்றி வர. காலையில் கூண்டு வண்டியில் திருவாரூர் சென்று, தேவையான சரக்குகளை கொள்முதல் செய்து கொண்டு கடைக்கு வந்து சேர இரவு நேரமாகி விடும். எல்லாமே முழு மூட்டை தான்.
சுற்றிலுமுள்ள கிராமங்களுக்கு, (தென்னைமரக்குடி வரை) தோப்புக்கடைதான் "சூப்பர்மார்கட்". சாயங்காலம் ஆகி,விட்டால் ஒரே கூட்டம். எனக்கு உனக்கு என்று சாமான்கள் கேட்டு ஒரே, "கருவாட்டு கடை " சத்தம்தான். அப்பாவால சமாளிக்க முடியாது. வேலை ஆட்கள் இரண்டு பேர். சாமான்களை வாங்கிக் கொண்டு அவரவர் கிராமத்திற்கு போக வேண்டும். 


அறுவடை காலத்தில், கூலியாக கிடைக்கும் நெல்லை தோப்புகடையில் கொடுத்து விட்டு, தேவையான சாமான்கள் வாங்கியது போக, மீதி பணத்தை பெற்றுக் கொள்வார்கள். 


அப்பா ஏசினாலும் பேசினாலும் யாரும் கோபித்துக் கொள்ள மாட்டார்கள். ரொம்ப தமாஷ் பேர்வழி. வீட்டுக்குத் தேவையான மளிகை சாமான்களும், மாட்டுத்தீவணம் எள்ளு புண்ணாக்கு, பருத்திக் கொட்டை இருக்கும். இது அல்லாமல் சோறு வடித்த கஞ்ஞியில் தவிடையும் சேர்த்து கலக்கி மாட்டுக்கு தீவனமாக கொடுப்பார்கள். பசு மாடு, எருமை மாட்டுக்கும் இதே தீவனம் தான்.
மின்சாரம் இல்லாததால் எல்லோருடைய வீட்டிலும் மண்ணெண்ணெய் விளக்கு தான். மொத்த ம.எண்ணெய் விநியோகம் தோப்புகடைதான். தோப்பு கடைக்கு சாமான் வாங்க வருவதோடு, தேவை பட்டால் மீன், கருவாடு, காய்கறிகளும் வாங்கிக் கொண்டு போவார்கள். முத்தலிப் என்பவர் காலையில் சைகிளில் நாகூர் சென்று மீன் எடுத்துக் கொண்டு சாயங்காலம் வந்து வியாபாரம் செய்வார். சுற்று கிராமத்தவர்கள் மீன் வாங்கிக் கொண்டு போவார்கள். ஐஸ் வைக்காத மீன். புது மீன். மீன் வியாபாரம் செய்ததால் "மீன்கார முத்தலிப்" ஆகி விட்டார். 


பாக்கம்-கோட்டூர் இளமையின் இன்ப நினைவுகள்

மகனார் அப்துல் பாரி! நீங்கள் குறிப்பிட்டது உண்மை தான். பகுருதீன் அப்பா அவர்களின் மகன்கள் தான் துல்பக்கீர், ஷேக் அப்துல்லா. ஓரளவு தோப்புகடையை பற்றி எழுதி இருக்கிறேன். ஏதும் விட்டுப் போயிருந்தால் இடையில் சேர்த்துக் கொள்கிறேன். ஜனாப் ஹாஜி முஹம்மது அவர்கள், டீ கடை ஹனீபாவைப் பற்றி எழுதும்படி கேட்டுள்ளார்கள். 

கோட்டூருக்கு முதல் டீ கடை "ஹனீபா டீ,கடை." ஹனீபா அண்ணன் சாந்தமான குணம் உள்ளவர்கள். யாரிடமும் கோபமாக பேசி பார்த்ததில்லை. சுறுசுறுப்பானவர்கள். அமைதியானவர்கள். அதிகாலையிலேயே கடைக்கு வந்து அடுப்பு பற்ற வைத்து விடுவார்கள். மண் சுவர், கீற்று கூரை தான் கடை.. காலை பசியார இட்லி மட்டும் சுடுவார்கள். பொழுது விடிந்ததும் வாடிக்கையாளர்கள் வர,ஆரம்பித்து விடுவார்கள். டீ, இட்லி ரெடியாக இருக்கும். வியாபாரம் சுறுசுறுப்பாக நடக்கும். உதவிக்கு பிள்ளைகள் . சொந்தமாக 3 - 4 எருமை கறவை மாடுகள். பாலுக்கு பஞ்மில்லை. காலை வியாபாரம் முடிந்தவுடன் வீட்டிற்கு சென்று விடுவார்கள். பிள்ளைகள் கவனித்துக் கொள்வார்கள்.
வீட்டிற்கு சென்று, சாயங்கால வியாபாரத்திற்கு, வடை, பஜ்ஜி, சமோசாவுக்கு, மனைவியின் உதவியோடு மாவு தயாராகும். சிறிது ஓய்வு எடுத்தபின் சுமார் 4, 4 1/2 மணிக்கு மாவை எடுத்து வந்து பலகாரம் சுடுவார்கள். மாலை 5 மணிக்கு பிறகு வியாபாராம் சூடு பிடிக்கும். அதிகமான வாடிக்கையாளர்கள். ஹரிஜன்களும் வருவார்கள். தனி இடம், தனி டம்ளர் செட். 

நமதூரில் அடக்கமாகி இருக்கும், "மீம் மஸ்தான்" அவர்களும் டீ கடை ஹனீபாவின் வாடிக்கையாளர். 

பாக்கம்-கோட்டூர்  இளமையின் நினைவுகள்
டீ"கடை ஹனீபா கடைக்கு போனால், உள்ளூர், வெளியூர் செய்திகள், வெளிநாட்டு செய்திகள், அரசியல் நிலவரங்கள் எல்லாம் தெரிந்து கொள்ளலாம். டீ கடைக்கு வருபவர்கள் எல்லா செய்திகளையும் அலசுவார்கள். எந்த டீ கடைக்கு போனாலும் இந்த கதை,தான். 

நமதூரிலிருந்து சென்று ஹஜ் கடமையை நிறைவேற்றிய முதல் மனிதர் யார் தெரியுமா? அவர்கள் தான் சாலக்கார வீட்டு (ஹாஜி) முஹம்மது சுலைமான் ராவுத்தர். (என் பெரிய தந்தை). கோட்டூர் எல்லையிலிருந்து, அவர்களுக்கு மாலை அணிவித்துசங்கத்து பிள்ளைகள் பைத்து,ஓதி, தப்ஸ் அடித்து கால் நடையாகவே அழைத்து வந்து சிறப்புச் செய்தார்கள்.

அவர்கள் நல்ல வசதி உள்ளவர்களும் அல்ல. பெரிய தொழில் முதலாளியும் அல்ல.
மலேஷியா, அலோர் ஸ்டார், கோலா கெடா என்னும் ஊரில், கடற்கரையோரமாக, சிறு வியாபாராம் செய்து வந்தார்கள். அவர்களுக்கு ஊரில் ஒரு மனைவி; ஆமினா பீவி. கோலா கெடாவில் ஒரு மனைவி. அவர்களின் இறுதி காலத்தில் உடல்நிலை சரியில்லாமலும், சுய நினைவு இல்லாமலும் வபாத்தானார்கள். அதே நாளில் அவர்களின் மனைவி ஆமினா பீவி மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்து தலையில் அடிபட்டு சுய"நினைவு இல்லாமலேயே வபாத்தாகி விடுகிறார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்). ஹாஜியார் அவர்கள் வபாத்தாகி விட்டார்கள் என்று மலேஷியாவிலிருந்து தந்தி போகிறது. அவர்களின் மனைவி வபாத்தாகி விட்டார்கள் என்று ஊரிலிருந்து தந்தி வருகிறது. 

சுபஹானல்லாஹ்! மனைவியின் மவுத்து கணவனுக்குத் தெரியாது. கணவரின் மவுத்து மனைவிக்குத் தெரியாது. எப்படிப்பட்ட மவுத்து பாரத்தீர்களா? இது ஒரு ஆச்சரியமான மவுத்து; கேள்விபட்டிராத மவுத்து என்றே நான் கருதுகிறேன். 


பாக்கம்-கோட்டூர்:- " இளமையின் நினைவுகள்".

கோட்டூர் - ஆண்டிபந்தல், கோட்டூர் - ஏனங்குடி மண் ரோடு தான். மேடு பள்ளத்தில் மாட்டு வண்டி ஆடிக் கொண்டு தான் போகும். ஆடுகின்ற ஆட்டத்தில் முதுகு வலி,வந்து விடும். கோட்டூர் - திருவிடச்சேரி வண்டியில் போயிருக்கிறேன். மாப்பிள்ளைகுப்பத்திலிருந்து மண் ரோடு தான். 

கோட்டூருக்கு ஒழுங்கான ரோடு வேண்டும் என்று ஊர் பெரியோர்கள் கூடி முடிவு செய்தார்கள். அப்பொழுது உள்ள பெரியவர்கள், முஹம்மது இபுராஹிம் அப்பா, என் அப்பா முஹம்மது ஷரீப், N.K. ஷேக்தாவுது, நூர் முஹம்மது, வாஹிது அண்ணன் அத்தா, கொரடப்பா, நிரவி அபுபக்கர், இப்படி நிறைய பேர். மூசா மாமா அத்தா முஹம்மது இபுராஹிம் பக்கா காங்கிரஸ். அதோடு நல்ல திறமைசாலி, புத்திசாலி. ரோடு சம்பந்தமாக அதற்குரிய ஆபீசரை பாத்தபோது, திருமருகல் வரை ரோடு போட சாங்ஷன் ஆயிடுச்சு சொல்லியிருக்கிறார். உடனே ஆபீசரை அழைத்து வந்து ஆண்டிபந்தல் - திருமருகல் மண் ரோட்டை காட்டியிருக்கிறார்கள். ஆபீசரும் ரோடு போடுவதற்கு கையெழுத்து போட்டுவிட்டார். முதலில் சிகப்பு கப்பி போட்டார்கள். பிறகு ஓரிரு வருடங்கள் கழித்து கருங்கல்,கப்பி போடப்பட்டது. அதன் பிறகு தார் ரோடு. 

ரோடு போடுவதற்கு வடகரை ஜமாத்தார்கள் ஒத்துழைக்கவில்லை. காரணம் வடகரை வழியாகத்தானே கோட்டூருக்கு ரோடு போட வேண்டும் என்று எண்ணி ஒத்துழைப்பு தரவில்லை.


பாக்கம்-கோட்டூர் இளமையின் நினைவலைகள்

உங்கள் கருத்துக்களையும், எதிர்பாப்பையும், ஆர்வத்தையும் படிக்கும்போது என் கண்களின் ஓரத்தில் கசியும் கண்ணீரையே உங்கள் அனைவர்களுக்கும் என் நன்றியாக்கிக் கொள்கிறேன். பேஸ் புக்கில் தமிழில் தவறு இல்லாமல் பதிவு செய்வது அவ்வளவு சுலபம் அல்ல. சரி. அடுத்து மேட்டருக்கு வருவோம். கோட்டூர் ரோட்டுக்கு சிகப்பு கப்பி போட்டாச்சு. எல்லா ரோட்டுக்கும் முதலில் சிகப்பு கப்பி தான் போடு தான் போடுவார்கள். அது "செட்" ஆன பிறகு தான் கருங்கல் கப்பி. இதுவும் "செட்" ஆன பிறகு தான் தார் ரோடு. 

பஸ் வருவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டுமே? அதற்காக ஒரு குழு அமைத்தார்கள். அந்த குழுவில் யார், யார் இருந்தார்கள் என்று நினைவில்லை. விபரம் அறிய, K.M.கமாலுதீன், M.E.முஹம்மது உஸ்மான், M.E. அப்துல் ஜப்பார். அப்பொழுதுள்ள அரசு பஸ், "சோழன் போக்குவுரத்து கழகம்". நம் வட்டாரத்துக்கு கும்பகோணம் தான் தலைமை டிப்போ. நம் ஊர் குழு கும்பகோணம் டிப்போ தலைமை அதிகாரியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி, பஸ் வருவதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டார்கள்.

அடுத்து பஸ் வரும் தேதி முடிவு செய்யப்பட்டு, அந்த தேதியில், மாலை போட்டு அலங்காரத்துடன் பஸ் வந்தது. சேதம்பி மில்லுக்கு எதிரில் பஸ் ஸ்டாப். (அப்போது சேதம்பி மில் இல்லை). ஒரே மக்கள் கூட்டம். எல்லோருக்கும் சந்தோஷம் தாங்க முடியல. மாலை நேரம் ஆனதால், சுற்று கிராம மக்கள் கூட்டம். கோட்டூர் ஒரே கலகலப்பு. பஸ் டிரைவர், கண்டக்டர் இருவரையும் ஊர் மக்கள் கவுரவித்தார்கள்.


அடுத்து நேரத்தை கவனிப்போம். காலை 5.30க்கு கோட்டூர் To கும்பகோணம். பகல் 1.30க்கு வந்து, சிறிது ஓய்வுக்கு பின் சுமார் 2.00 மணிக்கு கும்பகோணம் புறப்படும். அடுத்து இரவு சுமார் 11 மணிக்கு வந்து, கோட்டூரில் "ஹால்ட்". மறுநாள் காலை 5.30க்கு புறப்படும். இதுதான் வழக்கமான சேவை. இந்த சேவை அவ்வளவு திருப்தியாக இல்லை என்பதால், மாற்றம் செய்தார்கள். மன்னார்குடி To பாக்கம்-கோட்டூர். காலை 7.30, பகல் 12.30, மாலை 5.30, இரவு 10.30 என்று சேவை வழங்கியதாக நினைக்கிறேன். மக்கள் கூட்டம் அதிகரிக்கவே மீண்டும் மாற்றம் செய்யப்பட்டது. திருவாரூர் To திருமருகல், கூடுதல் பஸ் சேவை கிடைத்தது.


பஸ் சேவையை சுற்று கிராம மக்கள் அறிந்ததால், மக்கள் கூட்டம் இன்னும் அதிகரித்தது. அதனால், மக்கள் பல,ஊர்களுக்கும் செல்ல வசதியாக, மீண்டும் மாற்றம் செய்து, இப்பொழுது திருவாரூர் To திட்டச்சேரி வரை சேவையை வழுங்குகிறது. மக்கள் முழு,பயன் அடைகிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், திருவாரூர் செல்லும் கோட்டூர் மக்கள் நின்று கொண்டு தான் போகவேண்டும். அதுபோல் திட்டச்சேரி செல்லும் மக்களும் நின்று கொண்டு தான் போக வேண்டும். நல்ல கூட்டம்; நல்ல, "கலெக்ஷன்". அந்த நேரத்திற்கு புறப்பட வேண்டிய பஸ் பழுது என்றால், உடனே "ஸ்பேர்" பஸ் ஏற்பாடு செய்து சேவை வழங்கப்படுகிறது. அந்த அளவுக்கு முக்கியமான "ரூட்" பாக்கம்-கோட்டூர் "ரூட்".
என் அன்பிற்கும், மதிப்பிற்கும் உரிய இனிய நெஞ்சங்களே! 

"அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்......).


நான் 1959 வரை கோட்டூரில் இருந்தேன். 1960 ஆரம்பத்தில் மலேஷியா வந்து விட்டேன். அதன் பிறகு ஊர் நடப்புகள் அதிகமாக தெரிவதில்லை. 1970 இறுதியில் திருமணம். எனக்கும் பெற்றோருக்கும் ஏற்பட்ட பிரச்சினைகள் கருத்து வேற்றுமைகள் காரணமாக, 1992 ல் நான் பூந்தோட்டத்திற்கு சென்று விட்டேன். ஊருக்கு வந்தால், கோட்டூருக்கு வந்து செல்வேன்.

என் தலைமுறையில் உள்ளவர்களையும் அதற்கு முன்பு உள்ளவர்களையும் நன்றாக நினைவு இருக்கிறது. நான் கோட்டூரில் இருந்த வரைக்கும் உள்ள நினைவுகளை பதிவு செய்கிறேன். இன்னும் நிறைய செய்திகள் இருக்கிறது. இன்ஷா அல்லாஹ்! தொடர்ந்து எழுதுகிறேன். துஆ செய்யுங்கள். இப்பொழுது உள்ள தலைமுறையினர், அன்றைய கோட்டூரைப்பற்றி தெரிந்து கொள்வது அவசியம். நீங்களும் தெரிந்து கொள்வதற்கு ஆவலாக இருக்கிறீர்கள். நானும் என் ஊரைப்பற்றி எழுத ஆவலாக இருக்கிறேன். எல்லாம் நீங்கள் கொடுத்த உற்சாகம்தான். 


பாக்கம்-கோட்டூர் இளமையின் இன்பநினைவுகள்

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் இருந்த கோட்டூருக்கும் இப்பொழுதுள்ள கோட்டூருக்கும் உள்ள மாற்றத்தை பாருங்கள். 


50-களில் மின்சாரம் இல்லை. மண்ணெண்ணெய் விளக்குகள் தான். பல வகை விளக்குகள். (1)முட்டை விளக்கு, (2) சின்ன குத்து விளக்கு (3)பெரிய குத்து விளக்கு (4)அரிக்கன் விளக்கு (5) பெரிய சிமிலி விளக்கு,(6)பெட்ரோமெக்ஸ் விளக்கு. முதல் 4 விளக்குகள் வீட்டின் உபயோகம். அரிக்கன் விளக்கு மாட்டு வண்டிக்கும் உபயோகிப்பார்கள். நம்பர் 5, சங்கம் முச்சந்தியில் ஒன்றும், பழைய பள்ளிவாசல் அருகில் ஒன்றும் வைப்பார்கள். இரவு நேரத்தில் பொது மக்கள் நன்மைக்காக. உயரமான கருங்கல் தூண் மேல் கண்ணாடி பெட்டிக்குள் விளக்கை ஏற்றி வைப்பார்கள். சங்கத்து முச்சந்தியில், ஹஜ்ரத் முஹம்மது யூசுப் சாஹிப் அவர்கள், விளக்கை ஏற்றி வைத்து விட்டு மக்ரிப் தொழுகைக்கு போவார்கள். பாங்கு சொல்வதற்கு முன், முஅத்தின் பள்ளிவாசல் அருகில் விளக்கு ஏற்றி வைத்து விடுவார். 


மக்ரிப் ஆனவுடன், எல்லோருடைய வீட்டு வாசலிலும் விளக்கு ஏற்றி வைத்து விடுவார்கள். தூங்கப் போகும் போது அணைத்து விடுவார்கள். இப்படியே காலம் சென்றது. 
ஊருக்கு மின்சாரம் வேண்டும் என்ற அவசியத்தை உணர்ந்து , அன்றுள்ள பெரியோர்கள் கலந்து பேசி, அதற்குண்டான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார்கள். பணம் கட்ட வேண்மே? அதற்கு என்ன வழி? ஊரில் வசதி உள்ளவர்கள் யாரும் இல்லை. என் அப்பா, முஹம்மது ஷரீப் அவர்கள் ஒரு யோசனை சொன்னார்கள். எல்லோரும், நல்ல யோசனை என்று ஏற்றுக் கொண்டார்கள். 

(இன்ஷா அல்லாஹ், மீண்டும் சந்திப்போம்). 
""ஹசன்""

பாக்கம்-கோட்டூர்:- "இளமையின் இன்பநினைவுகள்".
என் அன்பிற்கினிய, இனிய நெஞ்சங்களே!
நமதூருக்கு மின்சாரம் வருவதற்கு முன், எல்லா நிகழ்வுகளும் எப்படி நடை பெற்றது என்பதை கொஞ்சம் பின்னோக்கி பார்ப்போம். 
எல்லா நிகழ்ச்சிகளுக்கும், "பெட்ரோமெக்ஸ்" லைட் மிக முக்கிய தேவையாக இருந்தது. தோப்புக்கடை, நிஜாமுதீன் கடை, ஹனீபா டீ கடை, சங்கரன் பிள்ளை ஸ்வீட் கடை, வியாபாரத்திற்கு பெட்ரோமெக்ஸ் லைட் உபயோகித்தார்கள். இந்திய தயாரிப்புதான். மேலும் சுற்று வட்டாரத்தில் உள்ள கிராம வியாபாரிகளும் மின்சாரம் இல்லாதபோது பெட்ரோமெக்ஸ் லைட் தான்.


மதரஸாவில் 3 - 4 பெட்ரோமெக்ஸ் லைட் இருந்தது. ஊர் பொது நிகழ்வுக்கு இதை பயன் படுத்துவார்கள். தனி நபர் வீட்டுக்கு தேவை என்றால் வாடகை உண்டு. பழைய பள்ளிவாசலில் மவ்லிது ஓதும் போதும், மழை பைத்து ஓதும் போதும், ஊர் எல்லைகளில் "தீன்கொடி" ஏற்றும் போதும், ஊர் பொது கூட்டம், பொது நிகழ்ச்சி- களுக்கு லைட் பயன் படுத்துவார்கள். தனி நபர் வீட்டில் மவ்லிது, பாத்திஹா, விருந்து, சுன்னத் வைபவம், இவைகளுக்கு லைட் வாடகை உண்டு. மக்ரிபு தொழுகைக்குப் பிறகு "மையித்து" அடக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டிருக்கிறது.


அடுத்து சுவாரஸ்யமான, சந்தோஷமான நிகழ்வு, "திருமணம்". ஒரு திருமணம் நடைபெறுகிறது என்றால், ஒரே கலகலப்பும், குதூகலமும், சந்தோஷம் தான். உள்ளூர்காரர்கள், அம்மாகண்ணு வீட்டு லத்தீப் மாமா, கரீம், ஹமீது மச்சான், முத்து கிருஷ்ணன், சேவுப்பிள்ளை, சில ஹரிஜன்கள் சேர்ந்து நீண்ட பந்தல் போடுவார்கள். ஏனங்குடி, ஆலமரத்தடி ஜப்பார் சவுன்ட் சர்வீஸ் ஒரு நாளைக்கு முன்பே ரேடியோ செட் கட்டிவிடுவார்கள். பெரும்பாலான உள்ளூர், வெளியூர் தேவைகளுக்கு அவருடைய ரேடியோ செட் தான். சோறு ஆக்குவதற்கு ஏனங்குடி இஸ்மாயில் பண்டாரி. அப்போது அவர் தான் "பேமஸ்". பூ மாலைகளுக்கு திருவாரூரில் ஆர்டர் கொடுத்து விடுவார்கள். லைட்டுக்கு? குரவர்கள் கூட்டம் இருக்கும். எத்தனை லைட் வேண்டும் என்று சொல்லி ஆர்டர் கொடுக்க வேண்டும். 


திருமணத்திற்கான பிரத்தியேக லைட். உயரமான, "ஸ்டேன்டில்" லைட் பொருத்தி இருக்கும். ஆணும், பெண்ணும் தலையில் சுமப்பார்கள். ஊர்வலத்தில் வருபவர்களுக்கு சோடா, கலர் கொடுப்பதற்கு சில வீட்டில் ஆர்டர் கொடுப்பார்கள், அன்று, சன்னானல்லூரில் இருந்த " டைமன்ட்" சோடா கம்பெனியில். 


சன்னானல்லூர், டைமன்ட் சோடா பேக்ட்டரி பற்றி ஒரு சிறிய தகவல். 


அப்போது சுற்று வட்டார கிராமங்களுக்கெல்லாம் இந்த சோடா பேக்ட்டரி தான். பேக்ட்டரி என்றதும் ஏதோ பெரிய பேக்ட்டரி என்று"நினைத்து விடாதீர்கள். தன் வீட்டுக்குள்ளேயே குடிசை தொழில் போல், குடும்பத்தினர்கள் உதவியுடன் இயங்கி வந்தது. 

குடும்பத் தலைவர், தயார் செய்யப்பட்ட பலவித ருசி பானங்களை மரப்பெட்டியில் அடுக்கி தன் ஒற்றை மாட்டு வண்டியில் வியாபாரத்திற்கு புறப்படுவார். மாடு மெதுவாகத்தான் போகும். அவரும் அதட்டி விரட்ட மாட்டார். 


இவர் சரக்கு போடும் கடைக்கு முன்னால் மாடு நின்று விடும். இறங்கி வியாபாரத்தை முடித்து விட்டு வண்டியில் ஏறுவார். மாடு தன்னாலேயே அடுத்த கடையில் நிற்கும். இப்படிதான் அவருடைய வியாபாரம். கடைகள் அருகருகில் இருந்தால், அவர் நடந்து போவார். அவர் எந்த கடைக்கு போனாரோ, அந்த கடைக்கு முன்னால் மாடு நின்றுவிடும். சில சமயம் அவர் தூங்கி விடவார். மாடு ஒரு கடையின் முன் நின்ற பிறகு தான் விழித்து பார்ப்பார். 


கோட்டூருக்கு வந்தலும் அப்படிதான். வடகரையை தாண்டியதும் கொஞ்சம் கண் அயர்ந்து விடுவார். மாடு மெது, மெதுவா நடந்து வந்து தோப்புகடை முன் நின்று விடும். விழித்துப்பார்த்து சரக்கு போடுவார். அடுத்து, "ஆறு மாசம்" கடை, நிஜாமுதீன் கடை. இவர் நடந்து போவார். மாடு அவர் பின்னாலேயே போய் கடை முன்னால் நிற்கும். அந்த மாட்டுக்கு அவ்வளவு பழக்கம்.
திருமண காலங்களில் அவருக்கு நிறைய ஆர்டர் வரும். குறிப்பிட்டபடி தவறாமல் சரக்கை அனுப்பிவிடுவார். நல்ல குணமுள்ள மென்மையான மனிதர். அவரைப் போலவே, சரக்கும் தரமானதாக இருக்கும். பயனீட்டாளர்கள் கேட்கும் போதே, டைமன்ட் சோடா கொடுங்கள் என்று தான் கேட்பார்கள்.
பாக்கம்-கோட்டூர்:- "இளமையின் இன்பநினைவுகள்".


என் அன்பிற்கினிய இனியநெஞ்சங்களே!

இப்போது, நாம் நமதூரில் நடைபெற இருக்கும் ஒரு திருமண வீட்டிற்கு செல்கிறோம். அங்கு எப்படி எல்லாம் ஏற்பாடுகள் நடைபெறுகிறது என்பதை பார்க்கப் போகிறோம்.
கீற்றுப் பந்தல் போட்டு முடிந்து விட்டது. வடகரை வண்ணான் கண்ணையன் பந்தலுக்கு வெள்ளை துணி கட்டுவார். பல வீடுகளிலிருந்து பெஞ்சுகளை எடுத்து வந்து, வருகிறவர்கள் உட்காருவதற்காக, பந்தலுக்குள் போடுவார்கள். ரேடியோ செட் காரர் அதற்குண்டான வேலைகளை செய்வார். ஊர் பெரிவர்கள், N.K.ஷேக்தாவுது, கொரடப்பா, நூர் முஹம்மது வாவா, முஹம்மது இபுராஹிம் அப்பா, வாஹிது மாமா உடைய அத்தா, செட்டியார் வீட்டு ஒலி முஹம்மது, இஸ்மாயில் ராவுத்தர் வீட்டு ஒலி முஹம்மது, ஹாஜி முஹம்மது, மஜீது அத்தா, புடவை கடார வீட்டு ரெஜாக் நானா, நாட்டகாரப்பா, பயணத்திலிருந்து யாராவது வந்திருந்தால், அவர்களும் வந்து விடுவார்கள்.

ஒவ்வொருவரும் ஒரு பொறுப்பை எடுத்துக் கொள்வார்கள். சமையல் வேலை இடத்தில் ஒருவர் மேற்பார்வை, சமையலுக்கு தேவையான பாத்திரங்களை கொண்டு வருவதற்கு ஒருவர், வருகின்றவர்களை வரவேற்பதற்கு 2-3 பேர், வேலையாட்களை கவனிப்தற்கு 2-3 பேர், சாப்பாட்டு பந்தியை கவனிக்க 2-3 பேர், இப்படி பொறுப்பேற்றுக் கொள்வார்கள்.
10 நாளைக்கு முன்பே பண்டாரியை அழைத்து லிஸ்ட் போடுவார்கள். அப்பொழுதெல்லாம் 5 கறி சாப்படுதான். அதாவது நெய் சோறு, தால்ஷா, இறைச்சி கறி, இறைச்சி குருமா, கத்தரிகாய்(புளிப்பு) பச்சடி, சீனிதுவை. சீனிதுவைக்கு துணை, இனிப்பு பச்சடி, வாழைப்பழம், எலுமிச்சை பழம். சுமார் எத்தனை பேருக்கு சாப்பாடு என்று கேட்டு அதற்குறிய லிஸ்டை போட்டு கொடுத்து விடுவார். மளிகை சாமான் முதலில் வாங்கி அதை சுத்தப்படுத்தி, மில்லில் அறைக்க வேண்டியதை, அறைத்து வைத்துக் கொள்வார்கள். காய்கறி ஔ மட்டும் 2 நாளுக்கு முன்பு வாங்குவார்கள். வாரம் ஒரு முறை சன்னானல்லூரில் கூடும் சந்தையில் வாங்குவார்கள்.

(கிழமை நினைவில்லை). காய்கறிகளை சாக்கில் கட்டி சைகிளிலேயே கொண்டு வந்து விடுவார்கள். அல்லது திருவாரூர் சென்று வாங்குவார்கள். இதற்கு நம் இளைஞர்கள் மிகவும் உதவி புரிவார்கள். சைகிளை ஆண்டிப்பந்தல் ராம கிருஷ்ணன் கடையில் போட்டு விட்டு, திருவாரூர் சென்று காய்கறிகளை வாங்கி சாக்கில் கட்டி பஸ்ஸில் ஏற்றி ஆண்டிபந்தலில் இறக்கி, அங்கிருந்து சைகிளில் ஏற்றி பத்திரமாக வீடு வந்து சேர்ப்பார்கள்.
அப்பொழுது பெரும்பாலும் இரவு பின்னேரம் கல்யாணம்தான். அதாவது பஜ்ர் நேரத்தில் தான் நிக்காஹ் நடக்கும்.
Top of Form

பாக்கம்-கோட்டூர்:- "இளமையின் இன்பநினைவுகள்".


அன்றைய நாட்களில் பஜ்ருடைய நேரத்தில் தான் நிக்காஹ் மஜ்லிஸ் நடைபெறும். நிக்காஹ் முடிந்தவுடன் ஆண்கள் பஜ்ர் தொழுகையை நிறைவேற்ற சென்று விடுவார்கள். தேவைக்காரர் குடும்பம் மட்டும் எல்லா காரியங்களையும் சமாளித்து விட முடியாது. அதனால் தான் ஊர் பெரியோர்கள், பெண்கள், இயைஞர்கள், அந்த தேவைக்கு தங்களின் பங்களிப்பை அளிப்பார்கள். இன பேதமில்லாமல், இந்து நண்பர்களும் உதவி செய்வார்கள். இது அன்றைய கிராமத்து பண்பாடு. 

முதல் நாளே சமையலுக்கும், பந்தி பரிமாறுவதற்கும் தேவையான சாமான்களை (செம்சட்டிகள், பாய்கள், பிரம்புக்கூடைகள், சுப்ராக்கள், இரும்பு அடுப்பு, கறி செட்டுக்குறிய கட்டராக்கள், தண்ணீர் கேத்தல், சஹான்கள்) எல்லாம் எண்ணிக்கையை குறித்துக் கொண்டு எடுத்து வருவார்கள். அதுபோலவே திரும்பவும் ஒப்படைக்க வேண்டும். குறைந்த சாமானுக்கு பணம் கட்ட வேண்டும். 4-5 ஹரிஜன்களை அழைத்து வந்து சாமான்களை எடுத்துச் செல்வார்கள். இது அல்லாமல் பல வீடுகளிலிருந்து அண்டா, குடம், வாளி, செம்பு பானை போன்றவற்றையும் சேகரிப்பார்கள். இவைகள் தேவைப்படும். எல்லா பாத்திரங்களையும் சுத்தமாக கழுவ வேண்டும். கடின வேலைகளை ஹரிஜன் ஆண்களும், லேசான வேலைகளை ஹரிஜன் பெண்களும் செய்வார்கள். 

அன்றைய காலகட்டத்தில் கிணற்று தண்ணீரைத்தவிர வேறு தண்ணீர் வசதி இல்லை. பெரும்பாலான வீட்டுக் கொல்லைகளில் கிணறு இருக்கும்.எல்லா உபயோகத்திற்கும் கிணற்று தண்ணீர் தான். கயிற்றில் வாளியை கட்டி தண்ணீரை மொண்டு எடுக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் பெரிய மண் சாலில் கிணற்று தண்ணீரை ஊற்றி குடிநீராக உபயோகிப்பார்கள். அவ்வளவு ருசியாக இருக்கும். 

பாக்கம்-கோட்டூர் இளமையின் இன்பநினைவுகள்". 

அன்புக்குரிய இனிய நெஞ்சங்களே!



அன்றைய நாளில், நமதூர் தப்ஸ் குழுவைப் பற்றி ஒரு சிறு கண்ணோட்டம் விடுவோம்.  இருந்த பெயர், "முஹப்பத்துல் முஸ்லிம் சங்கம்". அப்போது இருந்த ஓட்டு கட்டிடத்தை இடித்து விட்டு, இப்போது கல்யாண மண்டபமாக மாற்றி இருக்கிறார்கள். 50-ல் என் தலை முறையினர், "ஜுனியர்". ஜுனியருக்கு முன்பு உள்ளவர்கள், "சீனியர்". சீனியருக்கு முன்பு உள்ளவர்கள், "கவுரவ உறுப்பினர்கள்". ஜுனியர்கள்:- நான், வாத்தியார் பஷீர், (ஹமீது மச்சான் தம்பிகள்) அஜீஸ், முத்தலிப், (வணங்காமுடி ஆரிபு தம்பி) அஜீஸ்,( திருச்சியில் இருக்கும்) செய்யிது முபாரக், புடவைக்கார வீட்டு தமீம், இக்பால், (ஹனீபா மாமா தம்பி) செய்யிது முஹம்மது நாட்டக்காரவீட்டு செய்யிது,முபாரக், உபைதுல்லா, சேக்கப்பாவீட்டு தாஜ், O.பஷீர் அஹ்மது, காதர் மாமா, இன்னும் சில பேர் இருக்கலாம். 
சீனியர்கள்:- ஹமீது மச்சான், கீழத்தெரு சலாம், அண்ணன் முஹம்மது இஸ்ஹாக்,தாஹிர்,வாத்தியார்,காதர், KS ஜலாலுதீன், குத்புதீன், பசை,அப்துல் ரஹ்மான், வணங்காமுடி ஆரிபு, ஜின்னு ஆரிபு, யூனுஸ், ஹனீபா மாமா, செய்யிது பாரக் இன்னும் பல பேர் இருக்கலாம். கவுரவ உறுப்பினர்கள்:- (என் மாமா) அப்துல் பத்தாஹ், மஷ்ஹுர்தீன் அண்ணன், KM கமாலதீன், பசைவீட்டு லத்தீப், சுலைமான், இபுராஹீம், SKD கனி, குத்புதீன் மச்சான், ME உஸ்மான் இன்னும் சில பேர். பெரும்பாலானவர்கள். வபாத்தாகி விட்டார்கள். இன்றைய,நாளில் சங்கம் எப்படி இயங்கு-கிறது என்பது தெரியாது.

அடுத்து, நமதூர் மாப்பிள்ளைக்கு திருமணம் என்றால் சுமார் 10 நாட்களுக்கு முன்பாக மனு கொடுப்பார்கள். அந்த மனுவில், ஊர்வலத்தில் பைத்து ஓதி, தப்ஸ் அடித்து, பந்தி பரிமாரி முடித்துத்தர வேண்டும் என்று எழுதியிருப்பார்கள். மனுவை விசாரனை"செய்ய ஒரு தேதி குறிப்பிட்டு, அங்கத்தினர்கள் அனைவரும் வர வேண்டும் என்று செயலாளர் நோட்புக்கில் கை எழுத்து வாங்குவார். அந்த தேதியில் சங்கத்திற்கு எல்லோரும் வருவார்கள். மனுவை பரிசீலுத்து, எல்லோரும் ஏக மனதாக ஏற்றுக் கொண்ட பின், மனு தொகையை பெற்றுக்கொண்டு, மினிட் எழுதி வந்தவர்களிடத்தில் கையெழுத்து வாங்கப்படும். மறுநாள் இரவிலிருந்து 9 - 10 மணி வரை தினமும் பைத்து, தப்ஸ் பயிற்சி நடைபெறும். கலீபாக்கள், ஹமீது மச்சான், கீழத்தெரு சலாம், தாஹிர். 

பாக்கம்-கோட்டூர்:- *இளமையின் இன்பநினைவுகள்*.
நான் சிறு பிள்ளையாக இருந்தபோது, காசிம் பாய் என்பவர் ஊர் பக்கிரிசா வேலை பார்த்தார். கொஞ்சம் வயதானவர். தெற்கு தெருவில் நரி ஷேக் அலாவுதீன் பழைய வீட்டிற்கு எதிரில் குடிசை வீட்டில் வாழ்ந்தார். இவருக்குப் பிறகு முஸ்தபா பாய். நமதூரில் நீண்ட காலம் வாழ்ந்தவர். நமதூர் பிள்ளைகளுக்கு இவரை நன்றாக தெரியும் என்று நினைக்கிறேன். நமதூர் எல்லா நிகழ்விலும் கலந்து கொள்வார்.

நல்ல குணமும், பண்பும் உடையவர். எல்லோரிடமும் (சிறு பிள்ளைகள் முதல்) சரளமாக பழகுவார். தமாஷாக பேசுவார். கோபம் அடைந்து பார்த்ததில்லை. அவர் கொட்டு அடிப்பது காதுக்கு இனிமையாக இருக்கும். அன்றைய நாளில் நமது ஜமாத்தில் ஒரு சட்டம் இருந்தது. அதாவது, வெள்ளிக்கிழமை, ஜும்ஆ தொழுகைக்கு வராதவர்கள் அபராதம் செலுத்த வேண்டும். அதனால் முஸ்தபா பாய், வெள்ளிக்கிழமை பேனா, நோட் புக் எடுத்துக் கொண்டு பள்ளிவாசலுக்கு முன்கூட்டியே வந்து விடுவார். வராதவர்களின் பெயர்களை எழுதுவார். வழக்கமாக யார், யார் வரமாட்டார்கள் என்பது அவருக்குத் தெரியும். மேலும் வழக்கமாக வருபவர்கள் வெளியூர் செல்ல வேண்டியிருந்தால், முஸ்தபா பாயிடம் சொல்லி விடுவார்கள். அவர் பெயரை எழுதமாட்டார். நமதூர் ஆண்களும், பெண்களும் அவரிடம் ரொம்பவும் மரியாதையாகவும், அன்புடனும் நடந்து கொள்வார்கள்.


ஒவ்வொரு ஆண்டும், அவருடைய வீட்டு வாசலில் கொடியேற்றுவார். ரொம்பவும் விமரிசையாக நடை-பெறும். அவருடைய நெருங்கிய உறவினர்களும், சுற்றுப்புற ஊர்களிலிருந்து நண்பர்களும் (பக்கிரி-சாக்கள்) வந்து விடுவார்கள்.
பக்கிரிசாக்களுக்கு ஒரு தலைவர் (குரு) இருப்பார். எல்லோருக்கும் செய்தி அனுப்பி, வந்து விடுவார்கள். நமதூர் மக்களும் முடிந்த அளவு உதவி செய்வார்கள். முராதி, திக்ரு, பைத்துகள் கொட்டடித்துக் கொண்டு நடைபெறும். சீரனி சோறு ஆக்கி எல்லா வீட்டுக்கும் கொடுப்பார். கொடியை ஊர்வலம் சுற்றி, பஜ்ர் நேரத்தில் ஏற்றுவார். மிகவும் சிறப்பாக இருக்கும்.


அவருக்குப் பிறகு தான், படத்தில் இருக்கும், நத்தர் அலி வந்திருப்பார் என்று நினைக்கிறேன். இவருக்கு முன் வேறு யாரும் வந்தார்களா? என்று தெரியவில்லை. 
Top of Form
பாக்கம்-கோட்டூர்:- "இளமையின் இன்பநினைவுகள்". 


இன்றைய நவீன காலத்தில் நமக்கு எல்லா வசதிகளும் இருக்கின்றன. அன்றைய காலத்தில் எல்லா வசதிகளுமே குறைவு. இன்று எல்லா விழாக்களுக்கும் பத்திரிகை அடிக்கிறார்கள். உதாரணமாக, திருமண விழா, பெயர் சூட்டு விழா, புது வீடு புகு விழா, பெண் பிள்ளை சடங்கான விழா, சுன்னத்து விழா, ஹஜ் யாத்திரை புறப்படுதல், அர்வாஹ் 40-ம் நாள் பாத்திஹா, இன்னும் சில விழா இருக்கலாம். கம்யூட்டர் மூலம் உடனே நமக்குத் தேவையான பத்திரிகைகளை அடித்துக் கொடுத்து விடுவார்கள். இதற்கான தொழிற்கூடங்கள் நிறைய இருக்கின்றன. வித, விதமான ரகங்களில், பல அளவுகளில், பல கலர்களில், கூடுதலான விலையில் தான் நம்மவர்கள் பத்திரிகை அடிக்கிறார்கள். 

அன்றைய நாளில் அச்சககூடம் மிக குறைவு. எனக்குத் தெரிந்த ஒரே ஒரு அச்சககூடம் அப்பொழுது, திருவாரூர், "கருணாநிதி அச்சகம்". அச்சு கோர்த்து தான் எதையும் அடிக்க வேண்டும். ஒரு பத்திரிகையை அச்சு கோர்த்து, பிரேமில் வைத்து, ஒரு நகல் எடுத்து, அதில் உள்ள அச்சுப்பிழையை சரி செய்த பிறகு தான், பத்திரிகையை முழுமையாக அடிப்பார்கள். மிக மலிவான விலையில், எளிமையான முறையில், சாதாரண இரண்டு கலரில் மட்டும் அடிப்பார்கள். 

திருவாரூர் கருணாநிதி அச்சகத்தின் உரிமையாளர், கூத்தாநல்லூர் கருணை ஜமால் அவர்கள். என் சிறிய தந்தை, அபிவிர்த்தீஸ்வரம், கவிநேசன் T.M.M.தாஜுத்தன் அவர்களுக்கும், கூத்தாநல்லூர், அத்திக்கடை, பொதக்குடி மக்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அவர்கள் தான் திருவாரூர் கருணாநிதி அச்சகம் பற்றி சொன்னார்கள். 

பாக்கம்-கோட்டூர்:-"இளமையின் இன்பநினைவுகள்".


நமதூர் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது. பல வசதிகளை கொண்டிருக்கிறது. மக்கள் தொகையும் அதிகம். எங்கு திரும்பினாலும் மாடி வீடுகள். வீட்டு மனை கிடைக்காமல், ஏனங்குடி ரோட்டில் இரு மருங்கிலும் உள்ள வயலில் பிளாட் போட்டு விற்பனை. வயலிலும் சில மாடி வீடுகள். ஓட்டு வீட்டையோ, கூரை வீட்டையோ காண்பது அரிதாக உள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!

அன்றைய நாளில் மக்கள் தொகை குறைவு. மாடி வீடுகள் இல்லை. எல்லாமே ஓட்டு வீடுகளும், கூரை வீடுகளையும் தான் பார்க்க முடியும். நமதூர் ஒரு உட் கிராமம். போக்கு வரத்து வசதி கிடையாது. அதனாலேயே சம்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள தயங்கினார்கள். அதனால் வெளியூர் தொடர்பும் குறைவு. நமதூரில் ஒரு திருமணம் என்றால், தூரத்தில் உள்ள சில உறவுகளுக்கு தபால் மூலம் பத்திரிகை அனுப்புவார்கள். கொஞ்ச தூரத்தில் உள்ள சில உறவுகளுக்கு பஸ்ஸில் போய் சொல்வார்கள். சுற்றுப்புர ஊர்களுக்கு வண்டியில் போய் ஊர் அழைப்பார்கள். உதாரணமாக, திட்டச்சேரி, வவ்வாலடி, ஏனங்குடி, பூந்தோட்டம், இரவாஞ்சேரி, அச்சுத- மங்கலம், நன்னிலம், மாப்பிள்ளைகுப்பம், வடகரை என்று முடியும். இன்றைய நாளில் கல்யாணத்திற்கு ஊர் அழைக்க காரிலேயே சென்று, இரண்டு, மூன்று நாளில் எல்லா ஊர்களையும் அழைத்து முடித்து விடுகிறார்கள். நமதூர் எல்லா தேவைகளுக்கும், ஆண்டிபந்தல் ராமகிருஷ்ணணுக்கும் பத்திரிகை கொடுப்பார்கள். வாடகை சைகிள் கம்பெனி வைத்திருந்தார். கொஞ்ச தூரத்தில் அவர் வீடு.
கோட்டூர், வடகரை மக்களை அவர் நன்கு அறிவார். இரவு, பகல் என்று பாராமல் எந்த நேரத்திலும் உதவி செய்வார். 

அன்றைய நாளில் பின்னேரத்து கல்யாணம் என்பதால் இரவில், இஷாவுக்குப் பிறகு விருந்து நடக்கும். ஐந்து கறி சாப்பாடு. சங்கத்துப் பிள்ளைகள் தான் பந்தி பரிமாருவார்கள். அப்பொழுதெல்லாம் "சஹான்" சாப்பாடு. பெரியவர்கள் 4 பேரும், சிறியவர்கள் 5 பேரும் சேர்ந்து சாப்பிடுவார்கள். மறு சோறு, மறு தால்ச்சா கொடுக்கப்படும். முதல் பந்தி முடிந்தவுடன், இடத்தை சுத்தம் செய்து அடுத்த பந்திக்கு தயாராகும். முதல் பந்தியில் சாப்பிட்ட பெரியவர்களுக்கு மட்டும் "சுருல்" கொடுப்பார்கள். இரண்டு வெற்றிலை, கொஞ்சம் சுண்ணாம்பு, ஒரு அசோகா பாக்கு வைத்து முக்கோணமாக மடித்து நடுவில் கிராம்பு குத்தியிருப்பார்கள். 

வீட்டுத்திண்ணையில், சிறு கூடையில் சுருலை வைத்துக்கொண்டு, யாராவது ஒரு ஊர் பெரியவர், (கொரடப்பா, நாகப்பட்டினத்தார் யூசுப் மாமா, நிரவி அபுபக்கர், NKS ஷேக் தாவுது, புடவைகார ரெஜாக் நைனா) சாப்பிட்டுவிட்டு வரும் பெரியவர்களுக்கு மட்டும் கொடுப்பார்கள். சிறு பிள்ளைகள், பெரியவர்களைப் பார்த்ததுமே பேசாமல் போய் விடுவார்கள். இன்றைய காலத்தில் விருந்து சாப்பிட்டவர்களுக்கு ஒரு நிஜாம் பாக்கு மட்டும் கொடுக்கிறார்கள். 

பாக்கம்-கோட்டூர்:- "இளமையின் இன்பநினைவுகள்".

இரவு சாப்பாடு முடிந்த பிறகு சிறிது ஓய்விற்கு பின் ஊர்வலத்திற்கான ஏற்பாடுகள் நடைபெறும். மாப்பிள்ளைக்கு "பணி" எடுக்கும் நிகழ்வு நடைபெறும். அருகில் தேங்காய் பால் கிண்ணம் இருக்கும். பெண்கள் கூட்டமாக வந்து, காசை மாப்பிள்ளையின் தலையை சுற்றி அந்த கிண்ணத்தில் போடுவார்கள். பணி எடுத்த பிறகு குளித்து விட்டு ரூமுக்கு வந்துவிடுவார். அம்மா கண்ணு வீட்டு லத்தீப் மாமாதான் மாப்பிள்ளையை ஊர்வல உடை உடுத்தி அழகு படுத்துவார்கள். அதாவது ராஜஉடை. இடுப்பில் சிறு கத்தி. தலை கிரீடம். 

இதற்கிடையில் கல்யாணவீடு கலைகட்ட ஆரம்பித்து விடும். ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் கூடிவிடுவார்கள். சிறு பெண் குழந்தைகள், மணப்பெண்ணைப்போல், மருதானி இட்டு, பூ வைத்து, பட்டாடை உடுத்தி அலங்காரம் செய்திருப்பார்கள். ஆண் குழந்தைகளும், மருதாணி இட்டு, புது சட்டை, புது கைலி உடுத்தி, தொப்பி அணிந்து அழகாக இருப்பார்கள். முக்கியமான பெண்களும் மிகவும் அலங்காரமாக இருப்பார்கள். ஆண்கள் எல்லோரும் நல்ல உடை அணிந்து தலையில் தொப்பியுடன் காட்சி அளிப்பார்கள். பெரும் கூட்டமாக இருக்கும். அன்றைய நாளில் அவரவர் வீட்டில் தான் நிக்காஹ் மஜ்லிஸ் நடை- பெறும். காலையிலிந்தே, ஆதலையூர் ஜோதி சவுன்ட் சர்விஸ், இஸ்லாமிய பாடல்கள், சினிமா பாடல்களைப் போட்டு விடுவார்கள். 

ஊர்வலத்துக்கான கார் அலங்கரிக்கப்-பட்டு தயார் நிலையில் இருக்கும். மாலைகளும் தயாராக இருக்கும். அதுபோல், பெட்ரோமெக்ஸ் லைட்டுகளும் தயாராக இருக்கும். சங்கத்துப் பிள்ளைகளும் தயாராக இருப்பார்கள். ஊர் பெரியோர்களும் கூடிவிடுவார்கள்.அலங்கரிக்கப்பட்ட மாப்பிள்ளையை அழைத்து வந்து, வீட்டு கூடத்தில், துப்பட்டியினால் மூடிய நாற்காலியில் உட்கார வைப்பார்கள். பிறகு பாத்திஹா ஓதி, மாலை அணிவிப்பார்கள். பிறகு, பெற்றோர்களும், உற்றார் உறவினர்களும் மாப்பிள்ளையை கட்டி அணைத்து, கன்னங்கள், நெற்றியில் அன்பு முத்தங்கள் கொடுத்து, தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அந்த மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீரும் வந்து விடும். 

 கோட்டூர்:- "இளமையின் இன்ப நினைவுகள்".

ஊர்வலத்திற்கு முன்பு, பாத்திஹா ஓதி, மாப்பிள்ளைக்கு மாலையிட்ட பிறகு, வீட்டிற்குள்ளேயே தப்ஸ் அடித்து முதல் பைத்தை ஓதுவார்கள். அதாவது, "நான்(கு) மறை புகழ் குரு நாயகர் முஹம்மது நபி சுன்னத்து நிக்காஹ் நயமோங்க, தீன் வளர் மஜ்லிஸில் திரு பாத்திஹாவும் ஓதி.......என்ற பைத்து. எல்லா திருமணங்களிலும் இந்த பைத் தான் முதலில் ஓதப்படும். மாப்பிள்ளையை மெதுவாக அழைத்து வந்து ஊர்வலக்காரில் உட்காரவைப்பார்- கள். இருபக்கத்திலும் சிறு ஆண், பெண் பிள்ளைகளை உட்கார வைப்பார்கள். தோழன் ஒருவர் மாப்பிள்ளைக்கு விசிரி விட்டுக் கொண்டு வருவார். இருபக்கத்தி-லும் சங்கத்துப் பிள்ளைகள். நடுவில் ஊர்வலக்கார். சங்கத்துச் செயளாலர் விசில் வைத்திருப்பார். தொடங்குவதற்கும், நிறுத்துவதற்கும் விசில் அடிப்பார். அதன்படி ஊர்வலம் நடைபெறும். பள்ளிவாசல் அருகில் பாத்திஹா ஓதுவார்கள். (அப்போது தர்ஹா இல்லை). அன்றைய நாளில் ஓட்டு வீடுகள், கூரை வீடுகள் என்பதால், அவசியம் திண்ணைகள் இருக்கும். பல வீடுகளில், மாப்பிள்ளைக்கு பாலும் பழமும் மூடி வைத்து அருகில் குத்து விளக்கேற்றி வைத்திருப்பார்கள். சில வீடுகளில், பாலும், பழத்தோடு, அருகில் ஒரு பெண்ணையும் அலங்கரித்து நாற்காலியில் உட்கார வைத்திருப்பார்-கள். (உண்மையான பெண் என்று நினைத்து விடாதீர்கள். தலையணையால் உருவாக்கப்பட்ட பெண். சேலை உடுத்தி முக்காடு போட்டு, வெட்கத்தோடு தலை குனிந்து இருக்கும்). சிலர், ஊர்வலத்தில் வருபவர்களுக்கு , டைமண்ட் சோடா, கலர், ஜிஞ்ஞர் பீர் கொடுப்பார்கள்.சிலர் டீ, காபி கொடுப்பார்கள். தப்ஸ் சத்தம் கேட்டதுமே எல்லாமே தயாராக இருக்கும். ஊர்வலம், அதிக ஜனங்கள் பின் தொடர சிறப்பாக இருக்கும். நானும் சில நேரம் ஆக்ட்டிங் கலீபாவாக இருந்திருக்கிறேன். டீ, காபி, சோடா, கலர் கொடுப்பவர்கள் வீடு வந்ததும், செயளாலர் விசில் அடிப்பார். இப்படியாக, ஊர்வலம் எல்லா தெருவையும் சுற்றி வீடு வந்து சேர்வதற்கு பஜ்ர் உடைய வக்து நெருங்கி விடும். 


பாக்கம்-கோட்டூர்:- "இளமையின் இன்ப நினைவுகள்". 

ஊரை சுற்றி முடித்து, ஊர்வலம் வீட்டு வாசலில் வந்து நின்ற பிறகு, கடைசியாக ஒரு பைத்து படிப்பார்கள். நிக்காஹ் நடைபெரும் வீட்டில் இரு வீட்டாரின் நாட்டாமை, பஞ்சாயத்தார்கள், ஹஜ்ரத்கள் முன்கூட்டியே வந்து விடுவார்கள். மாப்பிள்ளையை இறக்கி மெதுவாக அழைத்து வருவார்கள். சிகப்பு கம்பலத்திற்கு பதிலாக, பொண்ணு உடைய புதிய புடவையை விரிப்பார்கள். அதன் மேல் மாப்பிள்ளை நடந்து வருவார். பிறகு கூடத்தில் பட்டு விரிப்பில் உட்காருவார். நிக்காஹ் உடன் படிக்கை பூர்த்தி செய்யப் பட்டிருக்கும் சில இடங்களைத் தவிர. பிறகு நிக்காஹ் உடன்படிக்கை சபையில் வாசிக்கப்படும்.
நிக்காஹ் செய்து வைப்பதற்கு, மண மக்களின் தந்தைகள் அனுமதி கொடுத்த பிறகு, முதலில் பெண்ணிடம் சென்று, "இந்த மாப்பிள்ளையை நிக்காஹ் செய்து கொள்ள சம்மதமா?" என்று கேட்டு, சம்மதம் என்று மூன்று முறை சொன்ன பிறகு உடன்படிக்கையில் கையெழுத்து வாங்குவார்கள். உடன் ஒரு சாட்சியும் செல்வார். (அந்த நேரத்தில், சம்மதம் இல்லை என்று சொல்லிவிட்டால், நிக்காஹ் செய்யக்கூடாது. ரசூலுல்லாஹ் சல்லல்லாஹு அலைஹிவ சல்லம் அவர்கள், தன் அன்பு மகளார் பாத்திமா நாயகி ரலியல்லாஹு அன்ஹுமா அவர்கள் மூலமாக பெண்களுக்குக் கொடுத்த தனி உரிமை சட்டம், பெண்ணின் சம்மதம் பெறாமல் நிக்காஹ் செய்யக் கூடாது என்பதாகும்). பிறகு மாப்பிள்ளையிடம் சம்மத கையெழுத்து, தந்தைகளின் கையெழுத்து, சாட்சிகளின் கையெழுத்து வாங்கியபின், ஹஜ்ரத் அவர்கள் மாப்பிள்ளையின் கையை பிடித்து, நான் வக்கிலாக இருந்து அந்தப் பெண்ணை தங்களுக்கு நிக்காஹ் செய்து வைக்கிறேன். ஒப்புக் கொண்டீர்களா? என்று மூன்று முறை கேட்பார். ஒப்புக் கொண்டேன் என்று சொன்ன பிறகு, துஆ ஓதுவார்கள். 

நமதூர் இமாம், ஹஜ்ரத் பாவா கனி பாய் நிக்காஹ் செய்து வைப்பார்கள். வேறு ஒரு ஹஜ்ரத் துஆ ஓதுவார்கள். அந்த துஆவில், அலி ரலியல்லாஹு அன்ஹு-பாத்திமா ரலியல்லாஹு அன்ஹுமா என்று ஓதும் போது பெண்ணுக்கு தாலி கட்டுவார்கள், சேக்கப்பாவீட்டு பாய்மா. பாலும் பழமும் இருக்கும். மாப்பிள்ளைக்கு பாதி கொடுத்து விட்டு மீதியை பொண்ணுக்கு கொடுப்பார்கள். பிறகு மாப்பிள்ளை எழுந்து எல்லோருக்கும் சலாம் கொடுப்பார். 


பாக்கம்-கோட்டூர்:- "இளமையின் இன்ப நினைவுகள்".
நிக்காஹ் மஜ்லிஸ் முடிந்ததும், பஜ்ர் தொழுகையை நிறைவேற்ற, ஆண்கள் பள்ளிக்குச் சென்று விடுவார்கள். அதன் பிறகு மற்ற காரியங்களை பெண்கள் பார்த்துக் கொள்வார்கள். காலப் போக்கில் பின்நேரத்துக் கல்யாணம், மக்களின் வசதிக்காக, முன்நேரத்துக் கல்யாணமாக மாறியது. பிறகு பகல் கல்யாணமாக மாறியது. பகலிலும் சில காலம் ஊர்வலம் நடந்தது. பிறகு அதுவும் நின்று விட்டது என்று நினைக்கிறேன். இப்போது ஊர்வலம் இருக்கிறதா? இல்லையா? என்று தெரியவில்லை. 

பெரும்பாலான என் வாழ்நாள் மலேஷியாவில் கழிந்ததால் , ஊர் நடப்பு-கள் தெரியவில்லை. முதலில் காரில் ஊர் வலம் வைத்தார்கள். பிறகு குதிரை. என் திருமணம் 1970-இறுதியில் நடந்தது. முன்நேரத்துக் கல்யாணம். குதிரையில் ஊர்வலம். என் உஸ்தாத், ஹஜ்ரத் ஜனாப் முஹம்மது யூசுப் சாஹிப் அவர்கள் தான் எனக்கு நிக்காஹ் செய்து வைத்தார்கள். இமாம் பாவா கனி சாஹிப் அவர்களின் வபாத்திற்குப் பிறகு ஜனாப் முஹம்மது யூசுப் சாஹிப் அவர்கள் தான் நிக்காஹ் செய்து வைப்பார்கள். அன்றைய நாளில் சேக்கப்பா வீட்டு பாய்மா தான் எல்லார் வீட்டு திருமணங்களிலும் பொண்ணுக்கு தாலியை கட்டுவார்கள். அவர்களின் வபாத்திற்கு பிறகு, என் தாயார் கட்டுவார்கள். என் திருமணத்தில் பாய்மா தான் தாலியை கட்டினார்கள். அன்றைய இரவு நேர திருமணங்கள் மறக்க முடியாத பொன்னான காலம் என்று தான் சொல்ல வேண்டும். இன்றைய திருமணங்கள் 2 வகையாக நடப்பதாக அறிகிறேன். ஒன்று பழைய முறை, மற்றொன்று நஜாத் என்ற புதிய முறை. இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று தெரியவில்லை.


அன்றைய நாளில், மணமக்களின் மச்சான், மச்சிமார்கள், வாழ்த்துப்பாடல், வாழ்த்து மடல் அச்சடித்து எல்லோருக்கும் கொடுப்பார்கள். நமதூர் எல்லா மாப்பிள்ளைகளுக்கும் தப்ஸ் சங்கம் சார்பி வாழ்த்து மடல் அடித்து எல்லோருக்கும் கொடுப்பார்கள். அதோடு ஒரு வாழ்த்து மடலை பிரேம் போட்டு மாப்பிள்ளையின் கையில் கொடுப்பார்கள். என் திருமணத்திலும் ஒரு வாழ்த்துப்பாடலை பிரேம் போட்டு கொடுத்தார்கள். ஹிந்தி பாட்டு மெட்டு, mere sapnom ki aye gitu. இதை தமிழில், "நீல வானம் தன்னில் ஓடி வரும் வெண்ணிலா போல்.....". என்று M.E.அப்துல் ஜப்பாரும், அவர் நண்பர் மர்ஹும் M.விலாயத்துல்லாவும் இயற்றினார்கள். 


அன்றைய நாளில் கருப்பு வெள்ளை போட்டோ தான் என் திருமணத்தில் எடுத்தார்கள். கலர் போட்டோ கிடையாது. என் சிறிய தந்தை , கவிநேசன் அபிவை T.M.M.தாஜுத்தீன் அவர்கள், குடவாசல், நாதன் ஸ்டூடியோ போட்டோகிராபரை அழைத்து வந்து போட்டோ எடுத்தார்கள். இருவரும் நெருங்கிய நண்பர்கள். இன்றைய நவீன காலத்தில் கலர் வீடியோ எடுக்கிறார்கள். 

(அடுத்து, நமதூருக்கு மின்சாரம் வந்த கதையைப் பார்ப்போம்).

பாக்கம்-கோட்டூர்:- "இளமையின் இன்ப நினைவுகள்".


நமதூருக்கு மின்சாரம் வந்த விபரத்தைக் காண்போம். அன்று கட்டாந்தரையாக, திடலாக இருந்த இடத்தில்தான் இன்று பள்ளிக்கூடமும், டிரான்ஸ்பாரமும் இருக்கிறது. அந்த திடலுக்குப் பெயர் "படார் கோயில்" என்று சொல்வோம். இந்த திடலில் தான் நாங்கள் (ஜுனியர்-சீனியர்) எல்லோரும் சீசன் விளையாட்டு விளையாடுவோம். அதாவது, புள்ளையார் பந்து, பம்பரம், கோலி, கிட்டுப்புலி என்று விளையாடுவோம். நமதூர் பெரியோர்களைப் பார்த்து விட்டால் மாயமாய் மறைந்து விடுவோம். அப்படி எக்குதுக்கா மாட்டிக்கிட்டா அவ்வளவுதான். பின்னி விடுவார்கள்.

 
நாங்கள் அதிகமாக பயப்படுவது, கொரடா அப்பா, (என்) அப்பா முஹம்மது ஷரீப், (உஸ்தாத்) ஹஜ்ரத் முஹம்மது யூசுப் சாஹிப், (நாகப்பட்டினத்தார்) முஹம்மது யூசுப் மாமா, (என்) மாமா அப்துல் பத்தாஹ். கொரடப்பா, இவரிடம் மாட்டிக்-கிட்டா அடிக்க மாட்டார். இரண்டு விரலை கொரடு மாதிரி மடக்கி அடிதொடையை நெரடுவார். வலி தாங்காமல் காலை தூக்குவோம். அழுத பிறகு தான் கையை எடுப்பார். அந்த இடம் அப்படியே சிவந்து விடும். அதனால் தான் கொரடப்பா என்று பெயர். மற்றவர்கள், கம்பாலும், கையாலும் அடிப்பார்கள். சில பெரியோர்களுக்கு மரியாதை கொடுத்து நல்லபிள்ளைப் போல் ஒதுங்கி நிற்போம். எந்த பெற்றோர்களும் யாரிடமும் சண்டைக்குப் போக மாட்டார்கள்


இரவில் "சிட்டாக்" என்ற விளையாட்டு. மக்ரிபு, இஷா தொழுதுவிட்டு வரும்போது உஸ்தாத் கவனித்து விடுவார்கள். மின்சாரம் இல்லாத காலமாதலால், அவர்கள் வருவது தெளிவாக தெரியாது. மறுநாள் காலையில் பள்ளிப்பாடம் முடிந்த பிறகு, மஞ்சல் பற்று போடும் அளவுக்கு ஒரு இன்ஜி பிரம்பால் அடி தான். தன் பிள்ளைகளை அடித்ததனால் எந்த பெற்றோர்களும் சண்டைக்குப் போனதில்லை. அவ்வளவு கட்டுப்பாடு, கட்டுக்கோப்பு. 


பாக்கம்-கோட்டூர்:- " இளமையின் இன்ப நினைவுகள்".

மின்சார அவசியத்தை உணர்ந்த நமதூர் பெரியோர்கள், அதற்கான முயற்சியை பற்றி கலந்து ஆலோசனை செய்தார்கள். குறிப்பிட்ட பணம் செலுத்தினால் தான், மின்சார வாரியம் வேலையை தொடங்கும். (எவ்வளவு தொகை என்று தெரியவில்லை). அன்றைய நாளில் பணக்காரர் என்று சொல்லும் அளவுக்கு யாரும் இல்லை. பலர், சிங்கப்பூர், மலேஷியா "சபர்" செய்பவர்களாக இருந்தார்கள். இருந்தாலும் அவ்வளவு வசதி படைத்தவர்கள் என்று சொல்ல முடியாது. 


ஊர் பெரியோர்கள் ஒன்று கூடி ஒரு முடிவு செய்தார்கள். ரபியுல் அவ்வல், ரபியுல் ஆகிர் மாத்தில் மவ்லிது முறை செய்பவர்கள், சீரணி சோறு ஆக்குவது பழக்கம். .ஆனால் மின்சாரத்திற்கு முன் பணம் செலுத்த வேண்டி இருப்பதால், சோறு ஆக்குவதற்கு பதிலாக பணத்தை வசூல் செய்தார்கள். மவ்லிது மஜ்லிசிற்கு வந்தவர்களுக்கு பூந்தி கொடுத்தார்கள். மவ்லிது முறை இல்லாவர்களிடம் ஒரு குறிப்பிட்ட தொகையும், வெளிநாடு சபர் செய்தவர்களிடம் ஒரு குறிப்பிட்ட தொகையும் வசூல் செய்தார்கள். சுமார் மூன்று ஆண்டுகளில் தேவையான பணம் சேர்ந்து விட்டது. மின்சார வாரியத்தில் பணம் செலுத்தி விட்டார்கள். அடுத்து, அவர்களும் வேலைகளை ஆரம்பித்து விட்டார்கள்.
முதலில், டிரான்ஸ்பார்மர் வைப்பதற்கு படார் கோவிலில் போஸ்ட் மரம் ஊன்றினார்கள். அடுத்து ஏனங்குடியிலிருந்து நமதூருக்கு போஸ்ட் மரம் ஊன்றினார்கள். பிறகு தெருக்களில் மரம் ஊன்றினார்கள். 


படார் கோவிலுக்கு கேபில் வந்த பிறகு, ஏனங்குடி, முதலி வாய்க்காலுக்கு அருகில் இருக்கும் போஸ்ட்டுக்கு மூன்று லைன் இழுக்க வேண்டும். எல்லாம் நாங்க தான் (ஜுனியர்-சீனியர்) கூட்டமாக, குஷியாக சேர்ந்து கேபிலை இழுத்தோம். வயலில் அறுவடை எல்லாம் முடிந்த நேரம். 


பாக்கம்-கோட்டூர்:- " இளமையின் இன்ப நினைவுகள் ".
நமதூருக்கு மின்சாரம் கிடைத்து விட்டதை அறிந்த வடகரை மக்கள், அவர்களுக்கும் மின்சாரம் வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது. நேரடியாக ஏனங்குடியிலிந்து மின்சாரம் கிடைப்ப-தற்கு செலவு அதிகம். ஆகையினால் அவ்வூர் குழு ஒன்று நமதூர் குழுவை சந்தித்து, நமதூரிலிருந்து (சுலபமாக, குறைந்த செலவில்) மின்சாரம் எடுத்துக் கொள்வதாக சொன்னார்கள். நமது குழு மறுத்து விட்டது. சாலை போடுவதற்கும், பஸ் ஏற்பாடு செய்வதற்கும் அவர்கள் ஒத்துழைக்கவில்லை. காரணம், அவர்கள் ஊர் வழியாகத்தான் சாலை போட வேண்டும்; பஸ் வர வேண்டும். ஒத்துழைக்க மறுத்து விட்டார்கள். இதனால் தான் மின்சாரத்திற்கு நம் குழு மறுத்து விட்டது.


அன்று, சிங்கப்பூர், மலேஷியா பயணம் செய்தவர்கள் பெரும்பாலனவர்கள் வபாத்தாகி விட்டார்கள். கப்பல் போக்கு வரத்துதான். இரண்டு கப்பல்கள், ரஜுலா, ஸ்டேட் ஆப் மெட்ராஸ். கப்பலிலேயே கேன்டீன் இருக்கும். மூன்று வேலையும் சாப்பாடு கொடுப்பார்கள். பங்க், டெக் என்று பிரிவு இருக்கும். பங்க் பிரிவு, ஒரு ரூம் × 4 bed. bathroom attached. டெக், open space. சிங்கப்பூரில், புறப்பட்டு, கிள்ளான், பினாங்கு வழியாக நாகப்பட்டிணம் வந்து சேரும். ஆனால், போதிய ஆழம் இல்லாததால், கப்பல் துறைமுகத்தில் அனைய முடியாது. ஆகையினால் நாகப்பட்டிணத்திலிருந்து 5 கடல் மைல் அப்பால் நங்கூரம் இட்டு விடுவார்கள். கப்பல் வரும் நாளன்று அதிக பாய்மரக்கப்பல் துறைமுகத்தில் நிற்கும். அவைகள் தான் கப்பல் அருகில் சென்று பயணிகளையும், மற்ற சரக்குகளையும் ஏற்றி வர வேண்டும். 


பாய்மரக்கப்பல் கப்பலோடு இணைந்து நிற்கும். கப்பலில் உள்ள ஏணிப்படியை இறக்கிவிடுவார்கள். சுமார் இரண்டு மாடி உயரத்திலிருந்து, ஏணிப்படியில் இறங்கி பாய்மரக்கப்பலில் உட்காரலாம்; நிற்கலாம். 

(
பாக்கம்-கோட்டூர்:-"இளமையின் இன்ப நினைவுகள்".
கப்பல் பயணம்-மறக்க முடியாத பயணம்.
ஒவ்வொரு பயணியிடமும் 4/5 லக்கேஜ் இருக்கும். அவைகளை நாம் ஹார்பர் கொண்டு சேர்ப்பது சிரமமான காரியம். ஆகையினால், அப்போது டிரான்ஸ்போர்ட் சர்விஸ் செய்து வந்த ஒரு மலாய் நபரிடம், பயண தேதி, வீட்டு அட்ரஸ் சொல்லி விட்டால், காலையிலேயே வந்து லக்கேஜை எடுத்து போய் ஹார்பரில் சேர்த்து விடுவார். பிறகு நாம் கப்பல் ஏறப்போகும் போது, சாமான்களை சரி பார்த்து பணம் கொடுத்த பிறகு, அவரே லக்கேஜை கப்பலில் நம் இடத்திற்கே கொண்டு வந்து விடுவார். மாலை சுமார் 7 மணிக்குள் எல்லா பயணிகளும் கப்பலில் ஏறி விடுவார்கள். டிக்கெட் ஏஜெண்ட் & போர்ட் ஆபீஸரும் பயணிகள் லிஸ்டை சரி பார்த்து கொள்வார்கள். இரவு சுமார் 10 மணிக்கு கப்பல் புறப்படும். 

பாக்கம் கோட்டூர் :-"இளமையின் இன்ப நினைவுகள் ".


கப்பல் பயணம் மறக்க முடியாத பயணம் "


அன்றைய நாளில் எல்லா சாமான்களுக்கும் டூட்டி உண்டு. நகைகள் கேமராக்கள் கைக்கடிகாரங்கள் உள்பட. டூட்டி கட்ட முடியவில்லை என்றால் சாமான்கள் விபரம் பாஸ்போட்டில் எழுதி டூட்டி தொகையும் குறித்து விடுவார்கள். திரும்பி வரும் போது பாஸ்போட்டில் எழுதிய சாமான்களை காட்டவேண்டும், இல்லை என்றால் டூட்டி கட்டவேண்டும்.

சரி, எல்லா வேலையும் முடிந்து வெளியே வந்தாச்சு. ஊருக்கு போகவேண்டும். எப்படி போவது? நமதூர், பக்கத்து ஊர்காரர்கள் 3/4 பேர் சேர்ந்து பெரிய லாரியை வாடகை பேசி, எல்லா சாமான்களை ஏற்றிக்கொண்டு, அவர்களும் ஏறிக்கொண்டு வீட்டுக்கு வருவார்கள். வாடகையை பகிர்ந்து கொள்வார்கள். (பெரிய பிஸ்கட் டின் 3/4, பீங்கான் வக்கூல், கொட்டை பாக்கு சாமான்களில் அடங்கும்). ஊர் மக்கள் பயணம் வந்தவர்களை பார்க்க வருவார்கள். மிட்டாய், பிஸ்கட்களை கலந்து சிறு தட்டையில் வைத்து தாய்ப் பிள்ளைகளுக்கு கொடுப்பார்கள். 


அன்றைய மக்கள் படிப்பறிவு குறைவாக இருந்த காரணத்தால், கஸ்டம்ஸில் ஏமாற்றப்பட்டார்கள், தொல்லைக்கு ஆளானார்கள். கப்பல் வரும்போதும், போகும்போதும், நாகப்பட்டினம் கலை கட்டும்.


ஒவ்வொரு தடவையும், கப்பலில் 100/150 சைகிள்கள் வந்து இறங்கும். அன்று அது மிக முக்கியமாக இருந்தது.

(இன்ஷா அல்லாஹ், தொடரும்). 
"ஹஸன்".

பாக்கம் கோட்டூர் :- "இளமையின் இன்ப நினைவுகள் ".

கப்பல் பயணம் மறக்க முடியாத யணம்.
பினாங்கை விட்டு இரண்டு நாள் ஆன பிறகு, கடல் தண்ணீர் நிறம் மாறி வரும். கரு நீலம், நீலம், கரும் பச்சை, பச்சை என்று. கோலா மீன்கள் கூட்டம் கூட்டமாக பறக்கும். சில சமயம் தூரத்தில் சுறா மீன் போவது தெரியும். சூரியன் உதிப்பதும், மறைவதும் பார்க்கும் போது மிக அழகாக இருக்கும். சில சமயம் மழை பெய்யும். கரையை நெருங்கும் போது, ஒரு வகை பறவை கூட்டமாக பறந்து வந்து, தண்ணீரில் உட்கார்ந்து விடும். அலைகள் அசையும் போது பறவைகளும் அலைகள் போல் அசையும். மிக அழகாக இருக்கும்.


SS
ரஜூலா, ஸ்டேட் ஆப் மெட்ராஸ் வயது முடிந்து விட்டதால் நிறுத்தி விட்டார்கள். பிறகு "சிதம்பரம் " என்ற கப்பல் வந்தது. சில மாதங்கள் கழித்து, அதுவும் ஏரிந்து விட்டது. அதன் பிறகு கப்பல் இல்லை. ஆகையினால், மலேஷியாவிலிருந்து மாஸ், சிங்கப்பூரில் இருந்து சியா விமானங்கள் தன் இறக்கைகளை இந்தியாவுக்கு விரித்து விட்டது. இப்போது, இந்தியாவுக்கு, பல நாட்டு விமான சேவைகள் அதிகரித்து விட்டது.

(இன்ஷா அல்லாஹ், தொடரும்) .
"ஹசன் ".

பாக்கம் கோட்டூர் :-,, "இளமையின் இன்ப நினைவுகள் ". 
கப்பல் பயணம் - மறக்க முடியாத பயணம். கப்பல் பயணம், இன்னும் கொஞ்ச தூரம் இருக்கிறது. நாகப்பட்டினம் வேலைகள் முடிந்த பிறகு, இரவு சென்னை புறப்படும். அங்கு எல்லா பயணிகளும் இறங்குவார்கள். மறு நாள் ஏற்றுமதி சரக்குகளையும், பயணிகளையும் ஏற்றுக்கொண்டு புறப்படும். அடுத்து நாகப்பட்டினம், சரக்குகள்,பயணிகள ஏற்றிக் கொண்டு புறப்படும். ஐந்து நாள் பயணத்திற்கு பிறகு, பினாங்கு சேரும். அங்கு பயணிகளயும், சரக்குகளையும் இறக்கி விட்டு, சிங்கப்பூர் புறப்படும். கிள்ளானில் நிற்காது.சிங்கப்பூர் சேர்ந்து சரக்குகளையும், பயணிகளையும் இரண்டு நாள் கழித்து புறப்பாடும். சென்னையிலிருந்து சிங்கப்பூர் சென்று திரும்பிவர சுமார் 20/21நாள் ஆகும். இப்படித்தான் அன்றைய கப்பல் பயணங்கள். நமதூர் மக்கள் மூன்று, நான்கு பேர் சேர்ந்தும் வருவார்கள். அல்லது பழக்கமான மற்ற ஊர் மக்களுடன் சேர்ந்து வருவார்கள். படித்து பார்த்த உங்களுக்கு, பயண விளக்கம் எப்படி இருந்தது??? உங்கள் கருத்துக்களை அறிய விரும்புகிறேன்.கப்பல் பயணத்தில் என்னால் ஒரு குழப்பம். கப்பல் கேப்ட்டனே என்னை தேடி வந்து விட்டார். அடுத்து எழுதுகிறேன்.

பாக்கம் கோட்டூர் :-"இளமையின் இன்ப நினைவுகள் ".
கப்பல் பயணம் மறக்க முடியாத பயணம்.
கப்பலில் பயணம் செய்பவர்கள், கண்டிப் -பாக காலரா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். போட்டுக் கொண்டதற்கு, சர்டிபிகேட் கொடுப்பார்கள். நாகப்பட்டினத்தில், ஊசி போட்டுக் கொள்ளாமல், பணம் கொடுத்து சர்டிபி -கேட் வாங்கிடலாம். ஆனால் மலேஷியா, சிங்கப்பூரில் முடியாது. இமிகிரேஷனில் இந்த சர்ட்டிபிகேட்டை கண்டிப்பாக கேட்பார்கள். ஊரிலிருந்து வருபவர்கள் ரொம்ப சாமான்கள் கொண்டு வர மாட்டார்கள். ஒரு துணி கை பை, அட்டை பெட்டி ஒன்று. அட்டை பெட்டியில் பனியா -ரங்கள் தான் இருக்கும்.


சிங்கப்பூருக்குள் நுழைவதற்கு முன் பொறை மலை தீவில் இரண்டு நாள் தங்க வைப்பார்கள். யாருக்காவது நோய் கண்டிருக்கிறதா? என்பதை அறிய. அங்கேயே குவார்ட்டர்ஸ் இருக்கும். கூட்டாஞ்சோறு சாப்பாடுதான். அங்கே இருக்கும் கடையில், மளிகை சாமான்கள், காய்,கறி சாமான்கள் கிடைக்கும். சட்டி, பானைகள் கொடுப்பார்கள். சமைத்து சாப்பிட்டு, குவார்ட்டர்ஸில் படுக்கை. சில குடும்பங்கள் அங்கேயே வசிக்கிறார்கள். தேவையான உதவிகளைச் செய்வார்கள். ஊர் மாதிரி கோழிகள் மேயும். மறுநாள் சிங்கப்பூருக்கு வந்து விடுவோம். டிக்கட்சாப்பாடு இரண்டுக்கும் சேர்த்து பணம் கட்டவேண்டும். சாப்பாட்டுக்கு கூப்பன் கொடுப்பார்கள். காலையில் உப்பு மா. பகல், இரவு (சைவ, அசைவ) சாப்பாடு. ஒரு நாளைக்கு ஒரு கறி (மீன் - கோழி - இறைச்சி) . ரசம், மோர், அப்பளம், ஊறு காய் இருக்கும். தேவையானதை எடுத்துக் கொள்ளலாம். கடைசி நாளில் பிரியாணி கொடுப்பார்கள்.(இன்ஷா அல்லாஹ், தொடரும்) ."ஹசன் ".

பாக்கம் கோட்டூர் :- "இளமையின் இன்ப நினைவுகள் ".
அன்றைய நாளில், இந்தியாவுக்கு விமான சேவை கிடையாது. கப்பலில் தான் செல்ல வேண்டும். மலேஷியா, சிங்கப்பூரில் "விசா " சட்டம் இருந்தது. பிரஜை அல்லாதவர்கள், இந்தியா சென்று வர அவசியம் விசா வாங்க வேண்டும். விசாவின் காலம், ஆறு மாதம். அப்பொழுது விசா என்பது, விபரமாக புரியவில்லை.

நான் முதன் முதலாக மலேஷியா வந்து, சுமார் ஐந்தரை வருடம் கழித்து கப்பலில் ஊருக்கு செல்கிறேன். விசா வாங்க வேண்டும். இமிகிரேஷன் சென்றேன். என்னைப் போல் நிறை பேர் விசா வாங்க வந்திருந்தார்கள். எல்லோரையும் போல, நானும், என்னிடம் இருந்த "எமெர்ஜென்சி சர்டிபிகேட்டை " கவுன்டரில் கொடுத்தேன். சிறிது நேரம் கழித்து அவரவர் பெயரை கூப்பிட்டு, திரும்ப கொடுத்தார்கள். நானும் வாங்கிக் கொண்டேன். அதாவது, விசா வாங்கும் போது டிக்கட்டையும் காட்ட வேண்டும். அதிலும், இமிகிரேஷன் சீல் வைப்பார்கள். எல்லா வற்றையும் வாங்கி பையில் வைத்துக் கொண்டேன். விசா என்றால் ஏதோ தனியாக ஒன்று கொடுப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு, கவுன்டரில், எனக்கு விசா கொடுக்க வில்லை என்று சொன்னேன். என் முழு விபரத்தையும் எழுதிக்கொண்டு, நாளை வா என்று சொல்லி விட்டார்கள். கடைக்கு வந்தபின் நண்பரிடம் விபரத்தை சொன்னேன். உடனே அவர், என் எமர்ஜன்சி சர்டிபிகேட்டை பார்த்து விட்டு, இது தான் விசா என்று ஒரு முத்திரையை காட்டினார். அப்படியா! என்று மறு நாள் ஆபீசுக்குப் போகவில்லை. 

(இன்ஷா அல்லாஹ், தொடரும்) . 
"ஹசன் ".

பாக்கம் கோட்டூர் :- "இளமையின் இன்ப நினைவுகள் ".

கப்பல் பயணம் மறக்க முடியாத பயணம்.


கேன்டீனில், காலையில் தினமும் உப்புமா+டீ, பகலில் சாப்பாடு, மாலையில் டீ, இரவில் சாப்பாடு. கியூவில் நின்று தான் வாங்க வேண்டும். கூப்பன் அட்டையில், அந்தந்த வேளைக்கு டிக் மார்க் போடுவார்கள். Duty Free கடை இருக்கும். அதில், பீர் வகைகள், Soft Drink வகைகள், பிஸ்கட் வகைகள் இருக்கும். 4 to 5 tea time, 5 to 6 duty free shop sale. பீர் அதிகமாக விற்பனை ஆகும். அவரவர்கள் தேவையானதை வாங்குவார்கள். இந்திய ரூபாய் வாங்க மாட்டார்கள். சிங்கப்பூர், மலேஷியா, அமெரிக்க டாலர்கள் தான் வாங்குவார்கள். பயணிகளுக்குள் எந்த வித பிரச்சினையோ, சண்டையோ வந்ததில்லை. ஐயாயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்கம் கொண்டு போகக் கூடாது. இப்படியாக இருந்தது கப்பல் இருந்தது.


இந்தியாவிலிருந்து அதிகமாக பெல்லாரி வெங்காயம், ரோஸ் வெங்காயம், சர்க்கரை ஏற்றுமதியாகும். நாகப்பட்டினம் பீச் லேனில், இவைகளை காய வைத்துக் கொண்டிருப்பார்கள். கப்பலில் 2-வது, 3-வது தளத்தில் 10 × 10 என்ற அளவில் மூன்று இடத்தில் ஓட்டையும், அருகில் கிரேனும் இருக்கும். ஒன்றாவது தளம், வெங்காயம் குத்தல் என்று சொல்வோம். கொஞ்சம் மொத்தமான கயிற்றால் 10×10 அளவில் வலைபோல் பின்னப்பட்டு அதில் சரக்குகளை அடுக்கி, நான்கு மூலைகளையும் கிரேனில் மாட்டி, ஓட்டை வழியாக வெங்காய குத்தலுக்கு இறக்குவார்கள். பிறகு ஓட்டையை மூடி விடுவார்கள். இத்துடன் கப்பல் பயணம் முடிவடைகிறது. 

(இன்ஷா அல்லாஹ், தொடரும்) . 
"ஹசன் ".
Top of Form
Top of Form
பாக்கம் கோட்டூர் :- "இளமையின் இன்ப நினைவுகள் ".

நமதூரில் அடக்கமாகியிருக்கும் "மீம் மஸ்தான் " அவர்கள் ஹயாத்துடன் இருக்கும் போது நேரில் பார்த்து பேசியவர்கள் இன்றும் இருப்பார்கள். அவர்களில் நானும் ஒருவன். அவர்களின் பூர்வீக வரலாறு, எப்போது நம் ஊருக்கு வந்தார்கள் என்ற விபரம் தெரியாது. நான் சிறு பையனாக இருந்தேன். 
ஒல்லியான, உயரமான உடம்பு. நெஞ்சு எலும்புகள் தெரியும். நீண்ட தாடி, தலைமுடி. உடம்பிலும், இடுப்பிலும் வெள்ளை உடை. பழைய சங்க கட்டிடம், தென்பகுதி மூலைதான் தங்கும் இடம் எல்லோரிடமும் கலகலப்புடன் பேசுவார்கள், பழகுவார்கள். காலையில் டீ பசியாற ஹனீபா டீ கடை, சில சமயம் முத்தலிப் டீ கடை. எல்லாவற்றுக்கும் பணம் கொடுத்து விடுவார்கள்.
பாக்கம் கோட்டூர் :- "இளமையின் இன்ப நினைவுகள் ".
"மீம் மஸ்தான் "பாவா (தொடர்ச்சி) .
ஷவ்வால் மாதம் பிறை பத்தில், பாவா அவர்களுக்கு விழா எடுப்பார்கள் என்று நினைக்கிறேன். விழா பற்றிய செய்தியை, போஸ்டர் அடித்து, முடிந்த வரை தூரத்து ஊர் வரைக்கும் சென்று ஒட்டி விடுவார்கள். அன்றைய இரவு மேலத் தெரு மிக சிறப்பாக இருக்கும். வெளியூர் மக்கள் கூட்டம், அதோடு பல விதமான கடைகள், சேக்கப்பா வீடு வரை, இருமருங்கிலும் இருக்கும். ஜொஹரான் வீட்டு அருகில் கச்சேரி மேடை போடப் பட்டிருக்கும். சந்தனக்குடத்தை எடுத்து ஊர்வலமாக சுற்றிவர பல ஊரிலிருந்து பக்கிரிசாக்கள் வந்திருப்பார்கள். பாவா அவர்களுக்கு பூசப்படும் சந்தனத்தை, நிரவி அபூபக்கர் மனைவி பாத்திமுத்து ஜொஹரான் அரைத்து கொடுப்பார்கள். பொதுவில் சீரனி சோறு ஆக்குவதற்கு எல்லார் வீட்டிலும் அரிசி வசூல் செய்வார்கள். கச்சேரி வைப்பதற்கு, ஊர் பணத்தை கொடுக்க முடியாது என்று நாட்டாண்மை பஞ்சாயத்தார்கள் சொல்லி விடுவார்கள். அதனால் இளைஞர்கள், சிறுவர்கள் சேர்ந்து, முடிந்த அளவு உள்ளூரிலும் வெளியூரிலும் பணம் வசூல் செய்வார்கள். அப்போது ஒரு கச்சேரி வைப்பதற்கு பத்து, பதினைந்து ஆயிரம் ரூபாய் செலவு ஆகும். எல்லா நிகழ்ச்சிகளும் விமரிசையாக நடைபெறும்.


பஜ்ருடைய வக்தில் சந்தனம் பூசுவதற்கு வசதியாக, பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சந்தன குடத்தை ஒரு பக்கிரிசா தலையில் வைத்து , மற்றவர்கள் கொட்டு அடித்து பைத்து ஓதி ஊர்வலமாக ஊரை சுற்றி வருவார்கள். ஊர்வலம் பின்னால் உள்ளூர் வெளியூர் மக்களும் கூட்டமாக செல்வார்கள். பஜ்ர் நேரத்தில் சந்தனம் பூசிய பிறகு சீரனி வழங்குவார்கள். இரவு சுமார் பத்து மணிக்கு கச்சேரி ஆரம்பித்து ஏறக்குறைய நான்கு மணி நேரம் நடைபெறும். சந்தனம் பூசி முடிந்து சீரனி கொடுத்தவுடன், மக்கள் சிறுக, சிறுக கலைந்து செல்ல ஆரம்பித்து விடுவார்கள். (குறிப்பு :- எனக்கு தெரிந்த வரை எழுதி இருக்கிறேன். குறை, நிறைகளை உங்கள் கமென்ட்சில் தெரிவிக்கவும்.) 

(இன்ஷா அல்லாஹ், தொடரும்) .
"ஹசன் ".
பாக்கம் கோட்டூர் :- "இளமையின் இன்ப நினைவுகள் ".
"மீம் மஸ்தான் "பாவா. (தொடர்ச்சி) .
என் தாயாரும் மற்றவர்களும் நாகூரில் பஸ் ஏறி ஏனங்குடி சத்திரம் வந்து இறங்கி கோட்டூருக்கு நடந்து வருகிறார்கள். ஊரை நெருங்கிக் கொண்டிருந்த போது, இவர்களுக்கு முன் ஒரு உருவம், பாவாவைப் போல், போய்க் கொண்டிருந்ததாம். அவர்கள் எல்லோருக்கும் அதிர்ச்சி, ஆச்சரியம். நெருங்கி பார்த்தால் பாவாதானாம். என் தாயார் கேட்டார்களாம், "எப்படி பாவா வந்தீர்கள்"?என்று. அதற்கு, "அதுவாம்மா, இங்கிட்டு போய், அங்கிட்டு போய் சுத்தி வந்தேம்மா " என்று சொன்னார்களாம். இது, என் தாயார் சொல்லக் கேட்டது.


பாவா அவர்கள், பள்ளியில் அல்லது வேறு எங்கும் தொழுது பார்த்ததில்லை. வெளியில், எப்படி செல்கிறார்கள்? எப்படி வருகிறார்கள்? என்று யாருக்கும் தெரியாது. எதிர்ப்பாராமல், வெளியூரில் சந்தித்து கேட்டால், "ஒரு வேலையா வந்தேன்" என்று மட்டும் சொல்வார்கள். எல்லா ஊர்களில் தர்கா இருந்தது. நம் ஊரில் மட்டும் இல்லை. இதற்கு என்ன வழி? என்று அன்றைய இளைஞர்கள், சில பெரியோர்கள் ஆலோசனை செய்து, பாவா அவர்கள் "வபாத்து" ஆகிவிட்டால் அவர்களை அடக்கம் செய்து, தர்கா கட்டி விடவேண்டும் என்று முடிவு செய்தார்கள். அடுத்து வரும் செய்தியையும் என் தாயார் தான் சொன்னார்கள். "கொடிக்கால்பாளையத்தில் வபாத்து ஆகி விட்டார்கள். செய்தி கிடைத்ததும் ஊர் மக்கள் திரண்டு சென்று விட்டார்கள். எங்கள் ஊரிலேயே அடக்கி விடுகிறோம் என்று சொன்னார்களாம். முடியாது, எங்கள் ஊரில் வாழ்ந்தவர்கள். எங்கள் ஊரில் தான் அடக்கம் செய்வோம் என்று கோட்டூர் மக்கள் சொன்னார்களாம். அந்த ஊர் மக்களும் பிடிவாதமாக இருந்தார்கள். சீட்டு எழுதி போட்டு பார்க்க இரு ஊரும் ஒப்புக்கொண்டு, சீட்டு எழுதி போட்டு பார்த்ததில், கோட்டூர் என்றே 3 முறை இருந்ததாம்.


பாவா அவர்களின் ஜனாஸா வருகிறது என்பதை அறிந்து ஊர் மக்கள் கூட்டம் கூடிவிட்டது. கோட்டூர் எல்லைக்குள் வந்து கொண்டிருக்கும் போது, கம கம என்று மலர்களின் மணம் வீசியதாம். இன்ன மணம் என்று சொல்ல முடியவில்லையாம்.(இன்ஷா அல்லாஹ், தொடரும்) ."ஹசன் ".
Top of Form
நான் தர்கா வழிபாட்டை ஆதரிக்கவில்லை. ஆதரித்து எழுதவில்லை. ஊரில் நிகழ்ந்ததை எழுதுகிறேன். அவ்வளவு தான். இன்ஷா அல்லாஹ்! தர்கா, எப்படி? ஏன்? வந்தது என்பதை, நான் அறிந்த விபரங்களை எழுதுகிறேன். நிகாமத் அலி, உங்கள் கருத்துக்கு நன்றி,
By Hm najim


பாக்கம் கோட்டூர் :- "இளமையின் இன்ப நினைவுகள் ".

ஊர் மக்களின் முயற்சியில் பெண்கள் அரபி பாடசாலை நிறுவப்பட்டது குறித்து சந்தோஷம் அடைகிறேன். அன்று ஆண், பெண் இருபாலரும் ஒரே மத்ரஸாவில் ஓதினோம். பழைய மத்ரஸா கட்டிடம். ஒரு பக்கம் ஆண்கள், ஒரு பக்கம் பெண்கள். உஸ்தாத், ஹஜ்ரத் முஹம்மது யூசுப் சாஹிப் அவர்கள். மிகவும்‌ கண்டிப்பாணவர்கள். யாருக்கும் பயப்பட மாட்டார்கள். பூர்வீகம், தென்காசி என்று கேள்விப்பட்டேன். தனி ஒருவராகத்தான் கோட்டூரில் வாழ்ந்து வந்தார்கள். சங்க கட்டிடத்தின் வடபுறம் சிறிய குடிசை வீடு. சொந்த சமையல் தான். பசும் பால், பேயன் வாழைப்பழம் முக்கிய உணவு. நமதூர் பெரியவர்கள் யாராவது திருவாரூர் சென்றால் கண்டிப்பாக பேயன் வாழைப்பழம் வாங்கி, கொண்டு வந்து கொடுப்பார்கள். கைகுத்தல் அரிசி சோறு தான். நெல் அறுவடை காலத்தில், நெல் வசூல் செய்து, ஹஜ்ரத்துக்கு அனுப்பி விடுவார்கள். ஒரு ஆண்டுக்கு போதுமானதாக இருக்கும். ஒரு மூடை 
நெல்லை, மேலத்தெரு அச்சுமங்கலத்தாங்க வீட்டுக்கு அனுப்புவார்கள். அவர்கள், நெல்லை அவியல் போட்டு, காய வைத்து, உரலில் போட்டு இடித்து சுத்தமான அரிசியை ஹஜ்ரத்துக்கு அனுப்பி வைப்பார்கள். ( இன்ஷா அல்லாஹ், தொடரும்) . "ஹசன் ".


பாக்கம் கோட்டூர் :- "இளமையின் இன்ப நினைவுகள் ". '(மத்ரஸா தொடர்ச்சி) . உஸ்தாத் அவர்களை எல்லோரும் அன்பாக ஹஜ்ரத் என்று அழைப்பார்கள். அதுபோல் நாமும் அழைப்போம். ஆடம்பரம் இல்லாமல் எளிய வாழ்க்கை வாழ்ந்தார்கள். வெள்ளை கைலி, பட்டன் உள்ள eagle pagoda round neck பனியன், நைசான வெள்ளை மேல் துண்டு. முக்கிய தேவைக்கு செல்லும்போது அரை கை வெள்ளை சட்டை..வெளி நாடு பயணம் செய்பவர்கள் பணியன், மேல் துண்டு கொடுப்பார்கள். சிலர் கைலி கொடுப்பார்கள். ஓதிக் கொடுப்பதில் திறமையும் கண்டிப்பும் உள்ளவர்கள். முதன்முதலில் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கும் போது புது ஆடைகள் உடுத்தி, ஒரு தட்டில் இனிப்பு வகை, கின்னத்தில் சந்தனம், வெற்றலை பாக்கு. 
(இன்ஷா அல்லாஹ்,தொடரும் )) )) )
Top of Form

பாக்கம் கோட்டூர் :- "இளமையின் இன்ப நினைவுகள் ". (மத்ரஸாவின் தொடர்ச்சி) . புதிதாக பள்ளியில் தொடங்க வரும் பிள்ளைகள், ஹஜ்ரத்துக்கு அன்பளிப்பாக பணமும் கொடுப்பார்கள். பஜ்ரு தொழுகை முடிந்த பிறகு காலை ஏழு மணிக்கு பள்ளி ஆரம்பமாகும். மேற்கு பக்க வாசல் திறந்திருக்கும். பிள்ளைகள் வர ஆரம்பிப்பார்கள். தாமதமாக வரும் பிள்ளைகளுக்கு தண்டனை உண்டு . தான் உட்காரும் இடத்திற்கு முன்னால், ஒன்றிலிருந்து முப்பது வரை சீட்டு வைப்பார்கள். அதன் பிறகு வருபவர்கள் சீட்டு எடுக்க வேண்டும். பள்ளி முடியும் போத, சீட்டு நம்பரை கூப்பிட்டு, அந்த நம்பர் படி உள்ளங்கையில் பிரம்பால் அடிப்பார்கள். அவர்களுக்கு வலுவான உடம்பு, அடியும் வலுவாக இருக்கும். 

ஒரு முறை அச்சுதமங்கலம் யாசீன் அவர்களை மஞ்சள் பற்று போடும் அளவுக்கு பிரம்பால் அடித்து விட்டார்கள். வலியின் காரணமாக, மறு நாள் யாசீன் பள்ளிக்கு வரவில்லை. பள்ளி முடிந்ததும் யாசீன் வீட்டுக்குச் சென்று, பார்த்து கண் கலங்கி, ஆறுதல் சொல்லி வந்தார்கள். எந்த அளவுக்கு கோபமாக இருக்கிறார்களோ, அந்த அளவுக்கு அன்பாக இருப்பார்கள். என்னையும் ஒரு நாள் கோபமாக அடித்து விட்டார்கள். அடித்தால், உடம்பில் எந்த இடத்தில் அடி விழும் என்று சொல்ல முடியாது. மறு நாள் என்னை கூப்பிட்டு வரச்சொல்லி பால் பழம் சோறு கொடுத்தார்கள். 
அன்று ஓதிய ஆண்களும், பெண்களும் இன்று, அப்பா -பாட்டியாகிவிட்டார்கள். 
பிழை, தவறு இல்லாமல், ஒழுங்கு, முறை பேணி குர் ஓத கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே அவர்களின் தலையாய கடமையாக இருந்தது. 

(இன்ஷா அல்லாஹ், தொடரும்.)

"ஹசன்".

பாக்கம் -கோட்டூர் :- 'இளமையின் இன்ப நினைவுகள் ". (மத்ரஸாவின் தொடர்ச்சி) .
ஆரம்பத்தில் சேரும் பிள்ளைகளுக்கு, முதலில் அரபு எழுத்துக்களை சாதாரண நோட்புக்கில் எழுதி கொடுப்பார்கள். குர் ஆனில் இருக்கும் எல்லா எழுத்தையும் பிழை இல்லாமல் ஓதும் வரைக்கும் நோட் புக்கில் தான் எழுதி கொடுப்பார்கள். இதில் திறமை அடைந்த பிறகு தான், அல் ஹம்து ஜுஸ்வு சொல்லி கொடுப்பார்கள். அல் ஹம்து ஜுஸ்வுக்கு, தொடங்கும் நிகழ்ச்சி ஒன்று நடை பெரும். இந்த ஜுஸ்வில் ஆரம்பத்தில் சின்ன, சின்ன சூராக்கள், போக போக கொஞ்சம் பெரிய சூராக்கள் இருக்கும். தொழுகையில் ஓதுவதற்கு வசதியாக எல்லா சூராவையும் கண்டிப்பாக மனப்பாடம் செய்ய வேண்டும். இதை முடித்த பிறகு தான், குர் ஆன் ஓத தொடக்கி வைப்பார்கள். இதற்கும் ஒரு தொடங்கும் நிகழ்ச்சி நடைபெறும். குர் ஆன் ஓதும் போதே, தொழுகும் முறை விளக்கம் அடங்கிய சும்து சுபியான் கிதாபையும் சொல்லி கொடுப்பார்கள். இப்படியாக, தன்னிடம் பயிலும் மாணவ, மாணவிகளிடம் அக்கறை உள்ளவர்களாக இருந்தார்கள்.