அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.) பாக்கம் கோட்டூர் வலைத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது, இன்றைய நாகை மாவட்டச் செய்திகள்:நாகப்பட்டினம் மாவட்டத்தில் வக்ஃப் வாரியத்தில் பதிவு பெற்ற வக்ஃப் நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம்-30-07-21, தெரியுமா உங்களுக்கு? நாகை மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் பெயர் பெயர் திரு. லியாக்கத் அலி

வியாழன், 7 ஜனவரி, 2021




 அன்பிற்கினியீர்,

அஸ்ஸலாமு அலைக்கும், கடந்த சில வாரங்களுக்கு முன்பிலிருந்து நமது மண்ணில் வாழ்ந்த மற்றும் வாழும் மகத்தான மனிதர்களைப் பற்றி தற்போது வாழும் தலைமுறைக்கும் இனிவரும் தலைமுறைக்கும் ஆவணப் படுத்த வேண்டும் எனும் தீரா வேட்கையின் பொருட்டு அவர்களை அடையாளப் படுத்தும் விதமாக பாகை மன்னர்கள் எனும் தலைப்பில் தொடர் ஆவண கட்டுரைகள் எழுதும் முயற்சியில் இறங்கினேன்.

அதன் தொடர்ச்சியாக அந்த கட்டுரை எடுத்தியம்பும் முதற் நாயகராக கடந்த வாரம் மறைந்த மர்ஹூம். K.M. கமாலுதீன் அவர்களைப் பற்றி எழுதலாம் என தீர்மானித்து முதற் கட்டுரையை எழுதி முடித்து பிரசுரிக்க இருந்த நேரத்தில் அன்னாரது மறைவு செய்தி வந்தடைந்தது.

மறையும் கணத்தில் அவர் பற்றிய கட்டுரை அவரது விழிகளில் படாமல் போனதில் பெருத்த ஏமாற்றமானாலும் இனி காலம் தாழ்த்தாமல் பாகை மன்னர்களை இப்பாரு’க்கு விரைவாக அறிமுகம் செய்தல் வேண்டும் எனும் உளப்பாட்டோடு இந்த கட்டுரைகளை தங்கள்முன் ஆவணப் படுத்துகிறேன். எழுதுவதற்கு ஏராளம் இருப்பினும் இந்த கட்டுரைகள் ஓதுவது எம்மண்ணின் மகத்தான ஆளுமைகளின் பண்பு நலன்களை பாகை தலைமுறைகளுக்கு பரப்புரை செய்யும் வண்ணமே!...

இனி மர்ஹூம். K.M.கமாலுதீன் அவர்களைப் பற்றி பின்வரும் கட்டுரையில் நாம் காண்போம்.

பாகை மன்னர் 1 

மர்ஹூம். K.M.கமாலுதீன் 

தாம் வாழும் காலத்தில் ஒவ்வொரு மனிதருக்கும் தாம் தடம் பதிக்க ஆழமான ஓர் தளம் வேண்டும் என நினைப்பதுவும் ஓர் இயல்பே! அந்த வகையில் ஓர் சிலர் தம் சிறுபருவம் தொட்டு தலைமைப் பண்பு நலனோடு வார்க்கப்படுவர்.

சிலரை வாழும் காலமும், சார்ந்த சமூகமும் வார்த்தெடுக்கும் அப்படி இரண்டும் ஒருசேர அமையப் பெறுவது ஒரு சிலருக்கு இயல்பில் அமையும் அப்படி அமையப் பெற்ற ஒரு சிலரில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றிருக்கும் ஒருவரைத் தான் நாம் இப்போது படித்துக் கொண்டிருக்கிறோம்.


சுதந்திர இந்தியாவின் ஆரம்ப கால வரலாற்றில் மக்கள் மனதில் ஆழப் பதிந்த அமைப்பு ரீதியிலான இரு விஷயங்கள் காந்தியமும், காங்கிரஸ் கட்சியும்தான்

திராவிடம் தடம் பதிக்கும் முன் இவ்விரண்டில் அங்கம் வகிப்பது ஓர் உயரிய மதிப்பீட்டைக் கொண்டதாக கருதப்பட்டது. அடிப்படையில் ஓர் தொண்டனாகவேனும் இருப்பது சார்ந்திருக்கும் இந்தியத்துக்கே பணி செய்ய கிடைத்த கருதுகோளாக அப்போது பார்க்கப்பட்டது.

எந்த ஒரு கட்சியிலும் குறிப்பிட்ட நிலையை பெறுவது என்பது எளிதில் கிடைப்பதன்று. அதற்கு சார்ந்திருக்கும் சமூக பிரபல்யம் மிக இன்றியமையாதது. அந்த சமூக பிரபல்யத்தைப் பெற்றோரே பின்னாளில் அந்த அமைப்புகளிலோ அல்லது கட்சிகளிலோ குறிப்பிடத்தக்க செல்வாக்கை தக்க வைக்கின்றனர்.

அப்படி ஓர் குறிப்பிட்ட காலம்வரை அவ்வமைப்புகளில் தமது செல்வாக்கை தக்கவைத்து அதன் பயனீடாக கிடைத்த நற்பலன்களை எல்லாம் தாம் அங்கம் வகிக்கும் மண்ணுக்கும், மக்களுக்கும் பங்கிட்டுத் தந்த ஓர் உன்னத மனிதர்.

முன்னொரு காலத்தில் தாம் சார்ந்திருந்த காங்கிரஸ் கட்சியில் சார்ந்திருந்த எல்லைக்குள் குறிப்பிடத்தக்க செல்வாக்கைப் பெற்றிருந்தும் பின்னொரு காலத்திற்கும் அதைக் கடத்திச் செல்லாமல் காலம் தந்த வினையால் தம் கால்களில் பெரும் காயங்களைப் பெற்றதும் இனி துடிப்புடன் செயல்படுதலில் ஏற்படும் தொய்வை முன்கணித்து அதனிலிருந்து தாமாகவே விலகிக் கொண்டதில் தொடங்குகிறது அவரது அரசியல் அறம்.

தாம் அங்கம் கொண்டிருந்த ஆளும் கட்சியில் தமக்கு இருந்த செல்வாக்கைக் கொண்டு தமக்குத் தேவையானதை மட்டும் உற்பத்தி செய்து கொள்ளும் தன் இச்சையை தவிர்த்து அதை தாம் வாழும் தளத்திற்கும் அதைச் சார்ந்திருக்கும் சமூகத்திற்கும் தேவையானவற்றிற்கு உற்பத்தி செய்து கொடுத்தல் என்பது சான்றோர் செயல் அச்செயலுக்கு எடுத்துக்காட்டாய் விளங்கியவரும்கூட

தற்போது அரசியலாளர்களிடம் மிகுந்து காணப்படும் ஒப்பந்த அடிப்படையிலான பணிகள் அவர்கள் சுயலாபம் பார்ப்பதற்கான ஒரு அங்கமாகவே பலதளங்களிலும் வழிந்தோடுகிறது,

ஆனால் அவற்றை எல்லாம் மக்களுக்கு செய்யும் சேவையாக கருதி அதற்காக செலவிடப்படும் பொருளாதாரத்தையும் அரசுப் பொருளாதாரமாக கருதாமல் அந்த அரசில் அங்கம் வகிக்கும் குடிமகனாகிய தனது பொருளும்தான் எனக் கருதி அவற்றை தரமாகவும், சிக்கனமாகவும் பொறுப்பை உணர்ந்து முடித்து அதில் கிடைத்த எஞ்சிய தொகையையும் அரசிடமே திருப்பிக் கொடுத்த நிகழ்வையெல்லாம் செவியுறும்போது மிகப் பெரிய ஏக்கப் பெருமூச்சு மட்டுமே நம்மிடம் மிச்சம் இருக்கிறது.

ஆனால் அந்த செயற்கரிய செயலையும் செய்தவர் நம் மண்ணின் இம்மைந்தர் எனும்போது உள்ளுக்குள் உணர்ச்சிகள் பிரவாகம் எடுக்கின்றன.

இவ்வாறாக தாம் ஒப்பந்ததாரராக முன்னின்று செய்த காரியங்களில் இன்று நம் மண்ணில் கற்றோர் பலரை உற்பத்தி செய்யும் கூடமாக விளங்கும் நமதூர் பள்ளிக்கூடமும் ஒன்றாகும் இன்றும் அதன் தரம் அவரது பணியின் மேன்மையை பறை சாற்றிக் கொண்டுள்ளது.

இந்தப் பள்ளிக் கட்டிடத்தைத் தான் அப்போது கல்வி அமைச்சராக வீற்றிருந்த மறைந்த க. அன்பழகனை அழைத்து திறந்து வைக்கச் செய்து இருந்தார்கள் என்பதுவும் இங்கு குறிப்பிடத் தக்கது.

தாம் மற்றும் தம்மின் குடும்பம் எனும் ஓர் குறுகிய அடைப்புக்குள் தம்மை குறுக்கிக் கொள்ளாமல், தம் சுற்றுப் புறமும், தம் மண்ணும் மகிழ் கொள்ள வேண்டும் எனும் தன் முனைப்போடு கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் ஏதேனும் ஒன்றை மண்ணுக்குச் செய்யும் தொண்டாக கருதி செயல்படுத்திட முனைந்தவரும்கூட எனலாம்.

அவ்வகையில் நம்மண்ணுக்கு முதன்முதலாக கிடைக்கவிருந்த  மின்னிணைப்பு பணியில் தம்மை முழுமூச்சாக இருத்திக் கொண்டு அதற்காக அரசு இயந்திரம் சுட்டிக் காட்டிய அத்துணை வழிகளையும் திறக்க முழு செயல்திறனோடு செயற்பட்டமை அவர்தம் மக்கள் பணியில் ஒரு மைல்கல் எனலாம்.

உதாரணமாக நமது இல்லத்திற்கு மட்டுமே மின்னிணைப்பு பெறுதல் என்பது மீப்பெறு சவாலான ஓர் காரியமாக கருதப் படும் வேளையில் ஒரு ஊருக்கே மின்னினைப்பை பெற்றுத் தர முன்னிற்பதென்றால் அதில் எத்துனை கடினங்கள் நிறைந்திருக்கும். ஆனால் அச்சவால்களையும் துச்சமென முன்னின்று நடாத்தி இன்றைய நம் தொழிற் வளர்ச்சிக்கும் சமூக முன்னேற்றத்திற்கும் முக்கிய காரணியாக கருதப் படக்கூடிய மின்வசதியை பெற்றுத் தர பாடுபட்ட இன்னாரை நினைவு கூர்ந்து வரும் தலைமுறைக்கு எடுத்துக் கூறுவது அவசியமாகிறது.

ஒருமுறை அவர்களை நான் அவரது இல்லத்தில் சந்தித்தபோது தமக்குள் பொதிந்து கிடந்த இதுபோன்ற நம் பாகை மண்ணின் வரலாற்று எச்சங்கள் பலவற்றை உதட்டோரத்தில் சிறு புன்னகையோடு கொட்டினார்கள்.

அவர்களோடு களித்திட்ட அந்த வேளை முழுதும் ஓர் வரலாற்று வகுப்பில் சுமார் ஒன்றரை மணிநேரங்களை செலவிட்டதுபோல் அத்துணை உபயோகம்.

அவ்வேளைகளில் எனது செவிகள் செவியுற்ற பல முக்கியத்தரவுகளில் மிக ஆச்சரியமான ஒன்று என்னவென்றால்..

நான் இங்கு மேற்கோளிட்ட பல விஷயங்களை உதிர்க்கும்போதும் அச்செயலோடு தொடர்புடைய அதிகார மட்டத்திலான மற்றும் அதற்கு அடித்தளம் அமைத்திட்ட பலரது பெயர்களை இத்துனை காலத்திற்குப் பின்னும் நினைவில் இருத்தி இருந்ததுதான்.

அவர்தம் பேச்சுக்களில் தெறித்து விழுந்த அந்த சொற்றாளுமை, பேச்சின் உயர்தரம் ஆகியவை மெச்சத் தகுந்த கல்வித் தரத்தை பழம்பெரும் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி அவருக்கு வழங்கி இருப்பதை உணர முடிந்தது.

இத்திறன்களாலும் தமது ஆங்கிலப் புலமையினாலும் அக்காலங்களில் ஆங்கிலம் சம்பந்தப்பட்ட அரசு தஸ்தாவேஜுக்கள், தந்தி போன்றவற்றை விளங்கிட வேண்டி நாடிவரும் பாமரருக்கு விளங்கக் கூறி வழிகாட்டியுள்ளார்கள்.

தமது கற்றலின் பயனால் தமக்குக் கிட்டிய அரசு பணியான வருவாய்த் துறையின் பட்டா மனியராக சிலகாலம் பணியாற்றிய போதும் அவரது தொண்டுள்ளம் தொடுத்த அறவெளிப்பாட்டால் நிலவரி கட்டமுடியாத வரியோருக்காக இரங்கி தம் சொந்தப் பணத்தில் அவர்களுக்காக வரிகட்டிய நிகழ்வுகள் நெகிழ்ச்சிக்குரியவை.

தாம் வாழ்ந்த காலங்களில் ஆன்மீக களங்களில் தம்மை முற்படுத்திக் கொள்பவராகவே இருந்தார் ஜும்ஆ’வுடைய தினங்களில் பள்ளிக்குள் முற்படுத்தி செல்வதிலும் ரமளானுடைய நாட்களில் மூன்று குர்ஆன்’களை முடித்து விடுவதிலும் அவருடைய ஆன்மீக எண்ணங்களும் வளமிக்கதாகவே இருந்துள்ளது என்பதை இங்கு நினைவு கொள்ளத் தக்கது 

அவர்களுடனான சந்திப்பில் அவர்களது ஒவ்வொரு செயல்திறனையும் விளக்கியபோது அந்த கண்களில் தெரிந்த நம்பிக்கையொளி, நன்னயம் இப்படி ஒவ்வொன்றையும் அவரிடமிருந்து உள்வாங்கும்போது அவருக்குள் தெரிந்த தம் மண் மீதான காதலை எளிதாக மதிப்பிட முடிந்தது.

அவரிடம் தற்போது செயல்பாடுகளில் இருக்கும் அரசியலாளர்களுக்கும், சமூக செயற்பாட்டாளர்களுக்கும் சிறந்த பயிற்றுமுறை இருந்தது.

ஒரு அரசியலாளர் அல்லது மானுடப் பண்பாளர் தாம் உள்ளடங்கிய சமூகத்திற்கும் பயனுடையவராக ஆகும்போதுதான் வருங்கால தலைமுறையிடம் வரலாறாக வாழ்கின்றனர். அவ்வரலாறு பல தலைமுறைகளுக்கு தொன்றுதொட்டு எடுத்துச் செல்லப் பட்டுக் கொண்டே இருக்கிறது.

அவரிடம் இன்னும் பலமணி நேரங்களுக்குத் தேவையான பேச்சுக்கள் மிச்சமிருக்கையில் காலம் எனக்களித்த குறுகிய அந்த வாய்ப்பில் எந்த அளவீடுகளில் கடந்தகால தரவுகளை அவர்களிடமிருந்து பெறமுடியுமோ! அந்த குறைந்த அளவிலான விகிதாச்சாரத்தில் மட்டுமே பெற்றுக் கொண்டு விடை பெற்றேன்.

இவ்வாறு ஆற்றல் மிகு ஆளுமைகளையும் தன்னகத்தே கொண்டெழு ழுந்துள்ளது நம் பாகை மண் எனும்போது உள்ளுக்குள் சிலிர்க்கத்தான் செய்கிறது.

இன்னும் காலம் வாய்ப்பளித்திருந்தால் அந்த ஆளுமைக்குள் பொதிந்து கிடந்த இன்னும் பற்பல நம் மண்ணின் பரிமாணங்களை வரலாற்று படிமங்களாக மீட்டுக் கொணர முடியும் என நினைந்துக் கொண்டிருந்தேன்.

ஆனால் காலம் அதற்கு வாய்ப்பளிக்காமல் அந்த வரலாற்றுப் பேழையின் வாசிக்காத பக்கங்களை நம் இமைகள் இனி காணவே மாட்டாமல் மூடிக் கொண்டது.

சத்தமே இல்லாமல் சங்கதியை நிறுத்திக் கொண்டது அவரது சகாப்த வாழ்வு, இறுதி மூச்சுக் காற்றோடு முற்றுப் பெற்று விட்டது ஓர் ஆளுமையின் அடையாளக் குறியீடு.

 மீண்டும் மற்றுமொரு ஆளுமையிடமிருந்து தொடர்வோம்....

ஆக்கம்:

பாகை நிலத்துப் பாமரன் 

பாகை இறையடியான்.

  மண்ணும் மணக்கிற பூமி... இது உங்கள் மனசை அள்ளிச் செல்லும்.

செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

பருவ’ தாகம்


பருவ’ தாகம்

                    ( இது ஓர் சமூக சீர்திருத்த சிறுகதை )

வெள்ளிக்கிழமையின் மாலைப் பொழுது,

துபாய் தெய்ராவின் கடை வீதிகள் தோறும் திருவிழாக்கோலம் பூண்டு..
பல தேசத்து தலைகள் யாவும் மார்க்கெட்டை மொய்த்தன...
அதில் ...

பலமுகங்கள் பிரகாசத்தில் மின்னின..

ஆம்...

இரு வருடங்கள் உழைத்து களைத்த முகங்களில் மகிழ்ச்சி ரேகைகள்
படிந்து இருந்தது...

இவ்வளவு காலம் தாம் யாருக்காக உழைக்கிறோமோ?.. அந்த கண்ணுக்குள் நிற்கும் கண்ணானவர்களை காண கண்ணுக்குள் ஒளியோடு

தொலைபேசியில் அவர்கள் கக்கிய கப்பல் சாமான்களை வாங்க கடை கடையாக ஏறி இறங்கிக் கொண்டிருந்தனர்...

இவ்வாறான பல முகங்களில் ஒன்று கந்தல்குடி கபீர் பாயுடையது..
கந்தல்குடி கபீர்பாய் ...

துபாய் முனிசிபாலிடி யில் துப்புரவு பணியாளராக இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் கபீர்பாய் தற்போது இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு மாத விடுப்பில் சொந்த ஊருக்கு செல்கிறார்...

அப்படியானால் அவருக்கு எந்த அளவுக்கு உள்ளுக்குள் குதூகலம் கொப்பளிக்கும் ...

அந்த குதூகலத்துடன்...

மொலினா’வுக்கு சென்று தனது வயதான அம்மாவுக்கு பத்தை கைலியும், மல்லிகைபொட்டு தாவணியும்...

தனது மனைவிக்கு பூனம் புடவையும் ...

கல்யாணமான தனது மகளுக்கு ஜரிகை புடவையும் வாங்கிக் கொண்டு நடந்தார்..

அப்போதுதான் கல்லூரிக்குள் காலடி எடுத்து வைத்திருக்கும் தனது பதினெட்டு வயதான மகன் சகீர் தனக்கு எந்த துணியும் வேண்டாமென்று
கூறிவிட்டான்...

இந்த காலத்தில் இப்படியொரு நல்ல மகனா? என்று சந்தோசப் படாதீர்கள்...

ஆம்...

அதற்குப் பதிலாக விலையுயர்ந்த கைபேசியைக் கேட்டு இருந்தான்..
வாலிப பருவத்தை அடைந்துவிட்ட தனது மகனின் விருப்பத்தை தட்டிக் கழிக்க முடியவில்லை கபீர்’பாயால்..

இவ்வளவு காலமும் ஸ்மார்ட் போனின் விலையைக் கண்டு பயந்துகொண்டு அதை தாம் வாங்கினால் அம்மாதம் வீட்டு செலவுக்கு பணம் அனுப்ப முடியாதே! என பயந்து இன்னமும் பழைய நோக்கியா பட்டன் போனின் துணையோடுதான் வீட்டுக்கு பேசிக் கொண்டிருக்கிறார்..கபீர்பாய்...

ஆயிரங்களில் கிடைக்கும் ஸ்மார்ட் போனின் உதவியோடு ..ஆயிரம் மைல்களுக்கு அப்பால் வசிக்கும் குடும்பத்தினரிடம் முகம் பார்த்து பேசிக் கொள்ளும் நவநாகரிக மனிதர்களுக்கு இடையில்

வெறும் தமது ‘1200 திர்ஹம் சம்பளத்தில் அதுபோன்ற போனை கையால் தொடுவதே அரிதாக இருந்தது கபீர்’பாய்க்கு....

இருப்பினும் மனதைத் தேற்றிக் கொண்டு தனக்கு கிடைத்த விடுமுறைகால சம்பளத்தில் ஏறத்தாழ ஒருபகுதியை இந்த போனை வாங்க செலவழித்தார்...

ஸ்மார்ட் போனைப் பற்றி எதுவும் தமக்கு சரிவர தெரியாததால் தமது அறையில் தன்னோடு தங்கி இருக்கும் ‘உசேனை’யும் தம்மோடு அழைத்து சென்றார்.

“என்ன கபீர்’பாய்...இத்தனை காலமா பட்டன்ல உள்ள எழுத்தெல்லாம் தேய தேய ..பழைய நோக்கியா போனை வெச்சு இருந்தீங்க.. “

இப்போ ஊருக்கு போற நேரம் புதுசா?.அதுவும் ஸ்மார்ட் போனா?..
என நக்கலாய் கேட்டான் உசேன்..

கபீர்’பாய் லேசாய் சிரித்தபடி..

“என்ன பண்ண சொல்றே.. உசேனு...தலைக்கு ஒசந்த எம்பையன் கேட்டுட்டானே?..”

“வளந்த புள்ளயா போய்ட்டான்... கூட்டாளி பயலுவோ எல்லோரும் வெச்சு இருக்கானுங்கலாம்..அவனுக முன்னாடி எனக்கு மட்டும் இல்லன்னு..குறை பட்டுக்கிட்டான்..”

“அதான் வேற வழி இல்லப்பா.. என்ன இருந்தாலும் இந்த தகப்பன வெச்சு சோறு போடப்போறது அவன்தானே...”

“ இன்னக்கி காச பாத்துட்டு நான் வாங்கிக் கொடுக்கலனா...அவன் மனசு கஷ்டப்பட்டு.. இந்த அப்பன வெறுத்துடக் கூடாதுல..”

“அதாம்ப்பா...கஷ்டத்தோட கஷ்டமா ..இதையும் வாங்கி தொலைச்சுடுவோம்னு வாங்கப் போறேன்..”

அவர் சொல்வதையே கேட்டுக் கொண்டிருந்த உசேன்..
“சரிதான் கபீர்பாய்...”

“மவனுக்கு கஷ்டம் தெரியாமல் வளக்குறதுதான் எல்லா அத்தா மாருகளுக்கும் வேல”

“ஆனா அதுவே!..அவுங்களுக்கு சலுகையா மாறி கஷ்டம்னா என்னான்னே தெரியாம வளருதுங்க..”

“ இன்னக்கி பாருங்க பொடுசு பொட்டுல்லாம்... கையில ஒரு போனும் கையுமா அலையுதுங்க..ஒருகாலத்துல பேசுறதுக்காக மட்டும் இருந்த போனு..இப்ப பாக்கவும்னு ஆயிப்போச்சுல..”

“தொலைவுல இருக்கறவங்க பேசுறதுக்கும், தொழில் செய்யிரவங்களுக்கும்னு இருந்த போனு இப்ப தொந்தரவுக்கும்னுல ஆயிப்போச்சு..”

“போனு வாங்குறது பெருசு இல்ல கபீர்’பாயி...அந்த போனுல புள்ளைங்க என்ன பன்னுதுன்னும் கண்காணிக்கணும்..”

“இதுல சில நல்லது இருக்கலாம்..ஆனா பலது சீரழிவுக்கானது..பாத்து சூதானமா நடக்கனும்னு.. சொல்லிக்கோங்க..”

உசேன் சொல்வதைக் கேட்டு குழம்பிப் போய் நின்றார் கபீர்பாய்..
“என்னப்பா உசேனு.. திடீர்னு ஏதேதோ சொல்லி குழப்பி உட்டுட்டே”..
“என்ன இருந்தாலும் சரிப்பா”..

“நான் ஊட்டுக்கு போன் போடும்போதெல்லாம் இந்த போனு தான் வேணும்னு கேட்டு அடம்புடிக்கிரான்பா.. நானும் சரின்னுட்டு சொல்லிட்டேன்...”

“இப்போ வாங்காம போனா... ரொம்ப கஷ்டப் படுவான்பா...என்ன இருந்தாலும் நான் இந்த போனை வாங்கிக் கிடுறேன்..”
இருவரும் கடையை அடைந்தனர்..

பேசியபடியே 1200 திர்ஹமில் சாம்சுங் போனை வாங்கி உசேனிடம் அதை செட்டிங் செய்து வாங்கிக் கொண்டார்..

அத்தோடு சில விஷயங்களையும் கஷ்டப்பட்டு அவனிடமிருந்து போனை’பற்றி தெரிந்து கொண்டார்.....

மறுநாள் சாயங்காலம்....

தனது வீட்டு வாசலில் வந்து இறங்கினார் கபீர்பாய்..

ஷேரிங்’கில் வந்த வாகனம் ஆதலால் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொருவரை இறக்கி விட்டு இறுதியாக கபீர்பாய் ஊருக்கு வந்தது வாகனம்..

காலை நான்கு மணிக்கே வந்தவர் ..இப்போதுதான் தம் ஊருக்கே வருகிறார்..

கண் நிறைந்த ஆசையுடன் தன் கண்மணிகளை காண அவரது கண்கள் ஏங்கித் தவிக்கிறது...

வாங்க அத்தா...என வாஞ்சையுடன் வந்தான் அவரது மகன் சகீர்...
அவனை ஆரத் தழுவி வாஞ்சையுடன் அனைத்துக் கொண்டார் கபீர்பாய் ...
நல்லா இருக்கியாப்பா?...என்றார் பாசம் பொங்க..

இருக்கேன்த்தா...!!!

“ஆமா! நான் கேட்ட மொபைல் போனை வாங்கி வந்தீங்களா”?..
என அடுத்த வார்த்தை அவன் வாயிலிருந்து வந்து விழுந்தது..
அதைக் கேட்டதும்...

ரெண்டு வருஷம் கழிச்சு வந்த அப்பனை ஒரு வார்த்தை கேட்காமல் ..
தன் மகன் தன் போனை கரிசனமாய் கேட்பதை கண்டு ,,
கண்களில் ஏமாற்றத்தை உணர்ந்தார்...

இருப்பினும் ஏமாற்றத்தை வெளியில் காட்டாமல்..
“நீ கேட்டு எதை நான் மறுத்து இருக்கேன்....தோ பெட்டியில் இருக்குடா ராஜா..”//

என்றதும்தான் அவனது இதழ்கள் சிரித்தது...

சம்பிரதாய விசாரிப்புகள் எல்லாம் விடை பெற்றதும் ..

தமது சொந்தங்களை காணச் சென்ற கபீர்பாய் இரவு ஒன்பது மணிக்குமேல்..

வீடு திரும்பினார்..

வந்ததும் தன் மகன்..

“வாங்கத்தா.. சாப்பிட்டு பொட்டிய பிரிக்கணும் என்றதும் ...

“வாடா ராஜா ஜோரா செஞ்சுடலாம்..உனக்கு நான் வாங்கி வந்து இருக்கும் போன் மேலத்தான் கண்ணா இருக்குதுன்னு நான் வந்தப்பவே தெரிஞ்சுது..வா”

என்றார் அவனை செல்லமாய் குத்தியபடி...

ஒருவழியாக சாப்பாட்டு சமாச்சாரங்கள் முடிந்ததும் ..

சம்பிரதாயங்கள் கழிந்து பொட்டி தமது மகனின் மேற்பார்வை கீழ்பார்வையில் பிரிக்கப்பட்டது...

“சுற்றியிருந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொருளின் மீது ஆசைகள்..
ஆனால்..

கபீர்பாய் மகனோ! தனது மொத்த ஆசையையும் ஒரேயொரு போனுக்கே குத்தகைக்கு விட்டிருந்தான்...

இதோ...

அவன் ஆவலுடன் தேடிக்கொண்டிருந்த ஸ்மார்ட் போன் அகப்பட்டுக் கொண்டது....

ஒரே தாவலில் பொட்டிக்குள் விழுந்து ஆசையாய் கொத்திக் கொண்டு கையில் எடுத்து சரசரவென பிரிக்கலானான்...

பளிங்கு கற்களைப் போல் பளபளவென மேனி கொண்ட ஸ்மார்ட்போன் அவனது முகத்துக்கு நேரே சிரித்துக் கொண்டு நின்றது...

பிரித்த வேகத்தில் பரபரவென விரல்களை தேய்த்து கண்ணில் கண்ட பல அப்ளிகேஷன்களை தரதரவென தரவிறக்கம் செய்யலானான்...\

அங்கே!

அத்தா! கபீர்பாய் ஒவ்வொரு பொருளையும் அதனை நான் வாங்க சிரமப் பட்டதையும் விவரிக்க தொடங்கினார்..

மகனோ! மகுடிக்கு மயங்கிய பாம்பாக போனில் தலை கவிழ்த்து பலதை ரசிக்க தொடங்கினான்..

எல்லாம் முடிந்தது...

கபீர்பாய் மகனிடம் ..

“தம்பி மிச்சத்தை காலையில் பார்க்கலாம் போய் தூங்கு” என சொல்லிவிட்டு உறங்கச் சென்றார்...

பொழுதும் விடிந்தது...

காலை சிற்றுண்டிக்கு கபீர்பாயின் கண்கள் மகனை தேடியது..
மகனை காணாமல் மகளிடம் வினவினார்..

“அவன் எங்கத்தா... நைட்டு ஒரு மணிவரை நீங்க கொண்டுவந்த மொபைலை நோண்டிக்கிட்டு கிடந்தான். அப்றமா எப்போ படுத்தான்னு தெரியல விடிகாலைல எந்திரிச்சு பிரண்ட்ஸ்கிட்ட மொபைலை காட்டப் போறேன்னு போனான்த்தா..இன்னும் வரல..”

“என்னம்மா போனு கைல கெடைச்சதும்..பசியெல்லாம் மறந்து போயிடுமாம்மா உன் தம்பிக்கு”..

எனக் கேட்டுக் கொண்டே சாப்பிட ஆரம்பித்தார்..

ஒரு ஒன்னரை மணி நேரம் கழிந்தபிறகு வியர்க்க விறுவிறுக்க வந்தான் சகீர்...

“என்னப்பா!..தம்பி..இவ்வளவு நேரம் சாப்பிடாம கொள்ளாம எங்கத்தா போன”..

என செல்லமாய் கடிந்து கொண்டார் கபீர்பாய்..

“அது... வந்து ...இல்லத்தா.. பிரண்ட்ஸ்கிட்ட போனை காட்டப் போனேன் லேட்டாயிடுச்சுத்தா!...என்றான்..

“சரி சரி முதல்ல சாப்பிடுத்தா..பசியெடுக்கும்..”என்றார் கபீர்பாய்..
உடனே ஒரு கையில் போனை ஏந்தியவாறே! அவசர அவசரமாக சாப்பிடலானான். சகீர்....

இதைக் கண்டதும் கபீர்’பாய் சற்றே எரிச்சல் அடைந்தவராக ...
அவனிடமிருந்து போனைப் பிடுங்கி ...

“ இந்த போன் எங்கேயும் ஓடிப்போயிடாது கீழே வெச்சுட்டு முதல்ல சாப்பிட்டு முடி”..

என்று சற்றே அவனை அதட்டிவிட்டு போனை ஒரு ஓரமாக வைத்தார்.
இதனைக் கண்டு மகன் எரிச்சல் அடைவதையும் அவர் காணாமல் இல்லை...

ஒருவழியாக வேண்டும், வேண்டாமென்று சாப்பிட்டு முடித்துவிட்டு அத்தாவை ஓரக்கண்ணால் பார்த்தவனாக போனை எடுத்துகொண்டு நழுவினான் சகீர்,,,

அன்று மாலை நேரம்...

பக்கத்து ஊரில் உள்ள தமது உறவினரை காணலாம் என எண்ணிக் கொண்டிருந்த கபீர்பாய்...

தமது எதிர்த்த வீட்டு காசிமிடம் ..

“காசிமு..கொஞ்சம் உன்னோட வண்டிய எடுத்துக்கிட்டு வாயேன்..கொஞ்சம் கானக்குடி வரைக்கும் போயி என்னோட மாமாவை பாத்துட்டு வரலாம்..
என்றார்...

காசிம் தமது டிவிஎஸ் பைக்கை எடுத்து வந்ததும் இருவரும் ஒன்றாக கிளம்பி போயினர்...

ஒருவழியாக கானக்குடியில் உள்ள தமது சொந்தங்கள் அனைவரையும் ஒரே எட்டாக பார்த்துவர சற்றே இருட்டி விட்டது..

இரவு எட்டு மணி...

பகலவன் இருளைத் தழுவி சில மணி நேரமான வேளையில்
இருவரின் வண்டியும் கானக்குடியை விட்டு கிளம்பியது...

வண்டி..கந்தல்குடியை அடைய ஒரு அரை கிலோமீட்டர் இருக்கும்
ஒரு வளைவை கடக்கும்போது ...

அந்த இருளின் ஒளியில் பறக்கும் மின்மினிப்பூச்சியைப் போன்று..
ஒரு நான்கைந்து ஒளிகள் தோன்றியது..

அது என்ன என்று சுதாரிப்பதற்குள்...

வண்டி அருகே நெருங்கியது..

அப்போது அங்கே பாலகரில் இருந்து பதின்பருவராக இயற்கையால் பதவி உயர்வு பெற்ற ஐவர் அமர்ந்து....

சிலர் தமது காதுகளிலும்.. சிலர் தமது கரங்களிலும் ஒவ்வொரு மொபைல் போனைத் தழுவிக்கொண்டே...

தோலைக் கிழித்து மூச்சுவிட மூக்கின்கீழ் எட்டிப் பார்க்கும் ரோமங்களுக்கு கீழ் உள்ள உதடுகளுக்கு இடையில் ஒரு வெள்ளைச் சுருட்டு தம்மை பாதி எரித்து இருந்தது..


உலகை மறந்து தாம் தனியானதொரு மாய உலகில் மயங்கி நின்றனர்..
அவர்தம் எதிரே வருவோர் போவோர் எவரும் அவர்களுக்கு ஏதோ ஒரு அஹ்ரினை ஒன்று அருகே வந்து செல்வதைப் போல்...

 அவர்கள் அந்த சின்னத் திரைக்குள் தம் விழித்திரையை வாடகைக்கு விட்டு இருந்தனர்..

அந்தப் பதின்பருவ பாலகரில் ஒரு முகம் கண்டவுடன்..
காதர் பாயின் முகம் வெளிறிப் போனது...

கண்கள் ஒரு கணம் மங்கிப்போய் மீண்டது...

உதடுகள் பலமிழந்து உதிர்த்தன ஓர் வார்த்தை...

ச....கீ..ர்...

இவை வண்டி விடும் மூச்சுக்காற்றில் சத்தமற்றுப் போனது..
கபீர்னே.. எதாச்சும் சொன்னீங்களா?...

என வினவினான் காசிம்...

(வண்டி ஓட்டுவதின் கவனம் காசிமை அந்த இளையோரிடமிருந்து சற்று தள்ளிப்போனது..

ஒருவேளை சர்வ சாதாரணமாக இவை கடப்பதால்...

அதனை கண்டுகொள்ளாமலும் இருந்திருக்கலாம்..)

கபீர்பாய் சற்றே சுதாரித்துக் கொண்டு ...

“ஒண்ணுமில்ல காசிமு..ஊரு வந்துடிச்சு போலிருக்குன்னு சொல்ல வந்தேன்..அதான்..” என்றார்..

வீட்டு வாசலில் அவர் இறங்கிக் கொண்டதும் காசிம் வண்டியை எடுத்துக்கொண்டு போனார்...

வீட்டு வாசலில் காலடி எடுத்து வைத்தது முதல் கபீர்பாயின் கவனமும் கண்களும் சற்று முன்னர் தாம் கண்ட காட்சியை மறு ஒளிபரப்பு செய்து கொண்டே இருந்தது..

இடையில் எவர் பேசியதும் அவர் செவிகளை அடையாமல் செத்து விழுந்தது..

சோபாவில் சரிந்துகொண்டே...

என் மகன் சகீரா?..ஏன் இப்படி...?..

அவன்தானே என்னுலகம் என்று இருக்கேனே?...

தமது வாழ்வின் முடிவுரை ஏந்தப்போகும் தம் மகன் தனது முதுமையை தாங்கிச் செல்வானா?..

கவலையை சுமந்த சிறுதுளி கண்ணீர் அவரது கன்னத்தை நனைத்தது..
மணியோ பத்தை கடந்தது....

அப்போதுதான் “சகீர்” தமது சைக்கிளை மேலேற்றிக் கொண்டு வீட்டின் படியேறினான்..

அங்கே! தமது தந்தை சோபாவில் சாய்ந்து இருப்பதைக் கண்டும் ..
காணாமல்.. வாயில் எதையோ மென்று கொண்டே நகர்ந்தான்..
“ அம்மா!.. சோறு வையி..”

என்று அதட்டலாக தாயிடம் கூறியவாறே!.. அடுப்பங்கரையை அடைந்தான்..

“ஏண்டா!..களிச்சலானே..இந்த பாழாப்போன நிஜாம் பாக்க போடாதனு உன்ன எத்தன தடவ சொல்றது..காதுலயே வாங்க மாட்டியா?.”
என அதட்டினாள் தாய் ரமீசா..

அதை அவன் காதில் வாங்காமல் சோற்றை அவசரமாக தின்றான்..

“ஓ.. இவனுக்கு ரொம்ப நாளா இந்தப் பழக்கம் இருக்கா?..

(அவன் தாம் புகைப்பதை மறைக்கத்தான் இப்படி பாக்கு தின்கின்றான் என்பதை ரமீசா அறிந்திருக்கவில்லை..பாவம் பழையகால மங்கை அவள்..)
மனதுக்குள் இன்னும் பகீரென்றது கபீர்பாய்’க்கு...

இருப்பினும் அப்போது மகனிடம் எதுவும் காட்டிக் கொள்ளாமல் அமைதியாகி விட்டார்.

அப்போது அவர் எண்ண ஓட்டத்தில் தலைக்கு ஒசந்துவிட்ட மகனை வெளிப்படையாக கண்டிப்பதிலும், தண்டிப்பதிலும் தயக்கம் இருந்தது.
ஏதேனும் விபரீதமாக சிந்தித்து விடுவானோ! என்ற அச்சம் காரணமாகவும் இருக்கலாம்.

அதுவே! அவரிடம் பேரமைதியை ஏற்படுத்திவிட்டது....

உணவை உண்டு முடித்ததும் வழக்கம்போல் தமது கைபேசியை எடுத்து கொஞ்ச தொடங்கினான் சகீர்..

வழக்கத்துக்கு மாறாக அவன் செய்வதையே வெறுத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் கபீர்பாய் அவன் இவரை கவனிக்காதபடி...

பின் உறங்கச் செல்வதற்காக அறைக்குச் சென்றவருக்கு உறக்கம் வரவில்லை..

ஒவ்வொரு அரைமணிக்கு ஒருமுறையும் வெளியே எட்டிப் பார்த்தார்..
அப்போதும் மகன் கைபேசியின் திரைக்குள் மூழ்கி கிடந்தான்...

இன்று எப்படியும் அவன் கைபேசியை திறந்து பார்த்து விடுவது என்ற முடிவோடு இரவு ஒரு மணி அளவில் தமது அறையை விட்டு வெளியில் வந்து பார்த்தார்..

அப்போதுதான் கைபேசியை தமது நெஞ்சோடு அணைத்துப் பிடித்தபடியே!
அயர்ந்து உறங்கி போயிருந்தான்..சகீர்...

உறங்கி கொண்டிருக்கும் அவன் விழிகளை நோக்கியபடியே அவனது கரங்களிலிருந்து கைபேசியை விடுவித்து.. எடுத்துக் கொண்டார்..

நல்லவேளை இந்த கைபேசியை வாங்கிய அன்று அதனை எப்படி திறந்து பார்ப்பது என்று உசேன் அவருக்கு ஏற்கனவே கற்றுக் கொடுத்து இருந்தான்...

அதனைக் கொண்டு அதனை திறந்தார்..

நல்லவேளையாக அவன் பாஸ்வேர்ட் எதுவும் அதில் இட்டிருக்கவில்லை ..
அவ்வளவு நம்பிக்கை வீட்டில் யாருக்கும் அதை திறக்க தெரியாது என்பதில்...

ஏற்கனவே உசேன் கொடுத்திருந்த சில ஆலோசனைகள் இந்த நேரத்தில் கபீர்பாய்’க்கு கை கொடுத்தது...

ஆகவே! நேரே! வாட்ஸ் அப்’பை தேடினார்...

பிள்ளைகளின் நட்பு வட்டத்தினை அறிய இதுபோல் வாட்ஸ் அப்’பை திறந்து பார்க்கவேண்டுமென உசேன் கற்றுக் கொடுத்திருந்தான்...
அங்கு!...

அவர் கண்ட காட்சி.....

ஒன்றுமரியாதவன் சிறுபிள்ளை என தன் மகனைப் பற்றிய அவரின் மதிப்பீடுகள் அனைத்தையும் அவனது வாட்ஸ் அப் பக்கம் ஒன்றே அடித்து நொறுக்கியது...!!!!!

அவனது நட்பு வட்டத்தில் தோழனைக் காட்டிலும் தோழியரே! நிரம்பி வழிந்தனர்..

பாலினத்தை கடந்து நட்பு மட்டுமே பாராட்டுவதில் தவறில்லை எனும் குறைந்த பட்ச இங்கிதம் கபீர்பாய் கொண்டிருந்தார்...

அதனால் அதைக் கண்டதில் அவருக்கு பெரிதாய் எதுவும் படவில்லை...
ஆனால்....

அந்த உரையாடல்களில் தம் மகனின் தரத்தை நல்லவகையில் எடைபோட எந்த ஒரு வாக்கியமும் இல்லாததை கண்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தார்...

அதில் ஓர் வார்த்தை இப்படி இருந்தது......

“நீ ‘உம்’ என்று சொன்னால் உனக்காக என்னுயிரையும் தருவேன்!”.....???

இதனைக் கண்டதும் கபீர்’பாயின் நெஞ்சுக் கூட்டுக்குள் கிடந்த இதயம்
துடித்து துள்ளி விழுந்ததைப் போல் ஓர் பிரம்மை அவருக்குள்...


தனது இறுதி காலத்தில் தன்னின் முதுமையை புரிந்துகொண்டு..
தன்னை அவனது இருதயத்தில் ஏற்பான்!.. என்றிருந்த அவரது கனவு...

இப்படி பால்பருவ மாற்றத்தின் விளைவால்... பொங்கிபெருகும்..உணர்வுக்கு அடிமையாகி.. ஏதோ ஒரு பெண்ணின் இதயத்திற்காக இறக்க துணிவேன்
என்கிறானே!.. என்றதும் ...

அவரது இதயத்தை பிழிந்து கண்ணீர் ...

இமைகளில் வழிந்தோடியது...

அதற்கும் மேல் அந்த கைபேசியை அவர் தொடுவதற்கு நாணி.. ...
தரையில் கிடத்தினார்..

அப்போதே! அதனை உடைத்து குப்பையில் ...

கடையவேண்டும் போலிருந்தது.. அவருக்கு..

ஆனால்... அதேசமயம்...

தமது உணர்வுகளுக்கு அடிபணியாமல்...

தம் மகனின் இந்த பருவ மாற்ற சிற்றின்ப கேளிக்கைகளுக்கு அவன் வழிநின்று அவனுக்கு புரியவைக்க எண்ணினார்..

மறுநாள் காலை...

வழக்கம்போல் படுக்கையை விட்டெழுந்த சகீர்...

தமது கண்களை கசக்கிக்கொண்டு ... பக்கவாட்டில் தமது கைபேசியை தேடினான்..

அங்கு அது இல்லாததைக் கண்டு ,,,

திடுக்குற்று...தேடினான்..

படுக்கையை விட்டெழுந்தவன்..

ஒவ்வொரு இடமாக தேடுவதை அறைக்குள் இருந்து கவனித்துக் கொண்டே இருந்த கபீர்பாய்’..

மகனை அழைத்தார்...

“தம்பி சகீரு...அங்க என்னத்தப்பா தேடுரே!...என்றார்..

“என்னோட மொபைல கானுலத்தா”..

என்றான் எரிச்சலுடனே....சகீர்...

“கொஞ்சம் இங்க வாயேன்”..என்றார்.. கபீர்பாய்..

இவர் வேறு நேரங்காலம் தெரியாம கூப்பிடுறாரே! என 
முணுமுணுத்தபடியே அவரிடம் நகர்ந்தான்..சகீர்...

அங்கே! தனது அத்தா’வின் நாற்காலிக்கு எதிரேயுள்ள மேஜையில் தனது ஆசை மொபைல் போனை கண்டான்...

இவன் வருவதைக் கண்டதும் அந்த மொபைலை தனது கைகளில் எடுத்துக் கொண்டார்.. கபீர்பாய்’..

அருகே! வந்ததும் அவரிடம் அதனைக் கேட்டான் சகீர்...

“சரி.. தருகிறேன்..இப்படி கொஞ்சம் உக்காருப்பா”.. என்றார் கபீர்பாய் எதிரேயுள்ள நாற்காலியை காட்டி..

ஒன்றும் புரியாமல் அவர் எதிரேயுள்ள நாற்காலியில் அமர்ந்து தந்தையை பார்த்தான் சகீர்..

இவர் மொபைலை கையில் வைத்துக் கொண்டு தம்மை அழைக்கும்போதே! அதில் உள்ளவற்றை பார்த்திருப்பாரோ! என்ற ஐயமும் அவனுக்குள் இருந்தது..

அதனால் சிறிது தலையை குனிந்தான்...

எப்படி ஆரம்பிப்பது என்று யோசித்த கபீர்பாய்..

தொடர்ந்தார்...

“ நல்லா படிக்கிறியா தம்பி”;;

ம்ம்ம்..தா...மென்று முழுங்கியபடி வந்தது மகனிடமிருந்து வார்த்தைகள்..
“இங்க என்னைய கொஞ்சம் பாரு தம்பி”.. என்றார்..

சிறிது தலையை நிமிர்ந்து பார்த்தான் சகீர்..

“ இத பாரு தம்பி...எனக்கும் உங்க அம்மாவுக்கும் வயசாகிக் கொண்டே போகுது”...எங்களுக்கு என்று சொந்தங்கள் நீயும் உன்னோட அக்காவுமே!..அந்த அல்லாஹ்’வா பார்த்து உங்கள எங்களுக்கு புள்ளை’ன்னு கொடுத்து இருக்கான்..

“என்னோட இருவத்தஞ்சு வயசுல கப்பலுக்குபோனேன்..அப்போ உன்னோட அக்கா பொறந்த நேரம்..அதைத் தொடர்ந்து ரெண்டே வருஷத்துல நீயும் பொறந்துட்டே”!..

“கல்யாணம் பண்றதுக்காக கப்பலுக்கு போனவன் அப்புறம் புள்ளைங்க படிப்பு எதிர்காலம் உங்க கல்யாணம் அப்டின்னு தொடர்ந்து உங்களோட நலனுக்காக நானும் அந்த பாழாப்போன பாலைவன புழுதியில மாட்டிகிட வேண்டியதாயிற்று..”

இது எல்லாமே! உங்க அக்கா’ கல்யாணம் வரைக்கும்தான் அப்றமா! ஊருக்கு வந்திடலாமின்னு இருந்தேன்..ஆனா உங்க அம்மா எம்புள்ள நல்லா படிக்கிறான்’ன்னும் அவனுக்கு இன்னும் நல்லா மேப்படிப்பு படிக்கவைக்க வேனுமின்னும் கேட்டுக்கிட்டதால அப்புறம் உனக்காக திரும்பவும் அந்த பாலைவனத்துக்கு மனச தேத்திக்கிட்டு போனேன்..”

“அங்க இருக்கற ரெண்டு வருசமும் உங்கள பிரிஞ்சு இருக்கற வேதனை இருக்குதே! அது நரகத்துக்கு சமம்..”

எந்த கையாள உங்கள கொஞ்ச ஆசைப்பட்டேனோ!! அந்த கையாள இங்க பாரு என்ன நான் அங்க பண்ணிக்கிட்டு இருக்கேன்னு என்று ஒரு போட்டோவை காட்டினார்..

அதில் தமது இரு கைகளிலும் உறைகளை மாட்டிக்கொண்டு குப்பைத் தொட்டிக்குள் அவர் குப்பைகளை கிளறி எடுக்கும் புகைப்படம் இருந்தது...
அதனைக் கண்டதும் கபீரின் கண்கள் விரிந்தன..

அதுவரை தமது தந்தை வெளிநாட்டில் இருக்கிறார் என்று பெருமை பேசித்திரிந்த அவனது மதிப்பீடுகள் அங்கே! அவனை குத்தி கிழித்தது..
தனது தந்தையின் மீதுள்ள பார்வை இப்போது அவனிடம் மாறியது..
மேலும் தொடர்ந்தார்.. கபீர்பாய்’

“இதை எல்லாம் நான் ஏன் இன்னமும் சகிச்சுக்கிட்டு இருக்கேன்னு தெரியுமா?.”

“நிச்சயமா இப்போ நீதான் மவனே! எதிர்காலத்துல எம்மவனும் இதுபோன்ற கஷ்டங்களை அனுபவிக்கக் கூடாது என்ற வெறி! உன்னோட எதிர்காலமாவது நல்லா அமையனும் அப்டிங்கிற ஏக்கம்!..

“இதுவரைக்கும் என்னோட எந்த கஷ்டத்தையும் என்னோட புள்ளைங்க கிட்ட நான் காண்பிச்சது இல்ல”..

“ஏன்னா!.. எம்புள்ளைங்களும் எல்லா புள்ளைங்களும் போல மனசு ரீதியாக கூட கஷ்டப்படக்கூடாது அப்டிங்கரதால நீங்க கேக்குற ஒவ்வொன்னையும் என்னோட வாய் வயிர கட்டியாவது வாங்கிக் கொடுத்து இருக்கேன்”..

“அதுக்கு உங்க மேல உள்ள அதீத பாசம்தான் காரணம்”..

“ புள்ளைங்களுக்கு கஷ்டம் தெரியாம வளக்குறீங்களே அப்டின்னு எல்லாரும் கேட்டப்பகூட என்னோட காலத்துலதான் நான் ஆசைப்பட்டத என்னால வாங்க முடியல!..பாவம் எம்புள்ளைங்களாவது அதுங்க ஆசைப்பட்டத அனுபவிக்கட்டுமேன்னு’தான் நான் ஆசைப்பட்டதையும் சேர்த்து எம்புள்ளைங்களுக்கு வாங்கிக் கொடுக்குறேன்னு சொல்லுவேன்..”

“ இது எல்லாம் ஏன்னு தெரியுமா! தம்பி உனக்கு..”
என்றார் சகீரிடம்.. வாஞ்சையுடன்...

அங்கு..

கண்கள் பணித்து இருந்தது சகீரு’க்கு...

தம் அத்தாவின் கண்களை பார்க்க நாணப்பட்டு குனிந்துகொண்டான்..
“இங்க என்னை கொஞ்சம் பாரு தம்பி”..என்றதும்தான் கொஞ்சம் நிமிர்ந்தான்..

“எல்லாம் உங்க மேலவுள்ள நம்பிக்கைலதான்.. எம்புள்ளைங்களோட வாழ்க்கையில கொறைஞ்சபட்ச ஏமாற்றத்தகூட கொடுக்ககூடாதுன்னுதான்”..

“நான் படுற கஷ்டத்துல ஒரு சதவீதம்கூட எம்புள்ளைங்க படக்கூடாது அதுக்கு அவங்க படிக்கிறது ரொம்ப முக்கியமின்னு நான் ஆசைப்பட்டேன்..
அதுக்கு எம்புள்ள நீ நாளக்கி படிச்சிட்டு நல்ல உத்தியோகத்துல இருக்கணும் அத இந்த கட்ட கண்குளிர பாத்துட்டு கண்மூடனும் அப்டிங்கற ஒரு நப்பாசத்தான்”..

“ஆனா.. நேத்து கானகுடி ரோட்டுல நீ நின்ன விதத்தையும்..நான் வாங்கி கொடுத்த உன் மொபைல இருந்ததையும் பாக்கும்போது என்னோட மனச யாரோ கசக்கி புழிஞ்சா மாதிரி நொறுங்கிப் போயிடுச்சி தம்பி..”

“இப்பவும் உம்மேல எனக்கு கொஞ்சங்கூட கோவமில்ல.. இதுல்லாம் உன்னோட பருவ மாற்றத்துல ஏற்படுற சிறுசிறு குழப்பங்கள்தான்..
அதே! உன் வாழ்கைய இந்த பருவம்தான் தீர்மானிக்குது.. இந்த பருவத்துல நீ செய்ய வேண்டிய நல்ல விசயங்கள விட்டுட்டா! பின்ன ஒருபோதும் அத நீ செய்யமுடியாது பின்னாளில் ரொம்ப வருந்துவாய்”..
ஒவ்வொரு பருவத்துலயும் நடக்கவேண்டியது ஒவ்வொன்னும் உனக்கு நடக்கும் அதற்கு முன்னையே நாம அத அடைய நினைக்கிறது உன்னோட பருவத்துக்கு செய்யுற வன்முறைன்னு தான் சொல்லணும்”..

“உதாரணமா!..பால் குடிக்கிற சின்ன குழந்த இருக்குதுன்னு வையி அதுகிட்ட போயி நீ இறைச்சி துண்ட கொடுத்து சாப்பிட சொன்னா என்னா நடக்கும்..அதுதான் இப்போ! இந்த பருவ வயசுல நீ படிக்கணும் இப்ப போயி நீ காதல், கல்யாணமின்னு.. சிகரெட்டு, பீடி..என்று அலைந்தால் அது உனது வாழ்க்கைக்கே அஸ்தமனமாகிவிடும்...”

“அதெல்லாம் நீ நன்றாக படித்துவிட்டாலோ! நல்ல பண்புகளை வளர்த்து கொண்டாலோ! தானாக இன்னும் நீ! எதிர்பார்த்ததைவிட சிறந்த வாழ்க்கையை உனக்குத் தரும்”..

“மகனே! அதுமிட்டுமில்லாமல் உனக்காக இன்னக்கி கஷ்டப்படுமற இந்த அத்தாவுக்கு என்னோட கடைசி காலத்துல நீ செய்யப்போற கைம்மாறு உன்னோட கையுல தான் இருக்குங்கிறத நியாபகத்துல வைச்சுக்கோ!..
என்று ஒரு பெரிய அறிவுரையை கூறி முடித்து மகனைப் பார்த்தார்..
கபீர்பாய்...

அவரின் ஆழமான இந்த உரை உடைந்துகிடந்த மகன் சகீரின் இதயத்தை தைத்து இருக்கும் என்பதை அவனது கண்கள் காண்பித்தன..

கபீர்பாய் தைத்த அறிவுஊசியின் ரணங்கள் அவனது மனசுக்கு மருந்தாகி அவனது பருவமாற்ற மனநோய் பறந்துபோனதை அவனது கண்கள் வழியே உணர்த்தினான்...

அவனது கண்ணீர் மேசைமீது வைக்கப்பட்ட கைபேசியின் திரையில் விழுந்து அதனை கழுவிக் கொண்டிருந்தது..

இனி  அதன்வழியே அவன் புதியதொரு உலகை பார்ப்பதற்கு...
மறுநாள் அதிகாலை ...

மீண்டும் அவனது கைகளில் தமது கைபேசிய வைத்து எதையோ சீரியசாக பார்ப்பதைக் கண்ட கபீர்’பாய் பதற்றமடைந்தார்..
இவர் பதறுவதைப் பார்த்த்ததும்..

சகீர்,, நிதானமாக அவரிடம் தமது மொபைலை எடுத்துவந்து...
“அத்தா!.. இந்த வருஷத்து பொதுத் தேர்வுக்கு அரசாங்க கல்வித் துறை சார்பாக வீடியோல பாடம் கொடுக்குறாங்க அததான் இந்த மொபைல பார்த்துக்கிட்டு இருந்தேன்”..என்றான் சகீர் மிகுந்த பொறுப்புடனே!....

“அல்ஹம்துலில்லாஹ்” ..

என அழுத்தமாக உரைத்தார் கபீர்’பாய்...

ஆக்கமும், உணர்வும்....
#பாகை_நிலத்து_பாமரன்...

குறிப்பு: சகீர்களை, கபீர்கள் கவனிக்க வேண்டும் என்பதை சுளீர்’என்று சொல்லி இருக்கிறேன்.
























   









மண்ணும் மணக்கிற பூமி... இது உங்கள் மனசை அள்ளிச் செல்லும்.