அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.) பாக்கம் கோட்டூர் வலைத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது, இன்றைய நாகை மாவட்டச் செய்திகள்:நாகப்பட்டினம் மாவட்டத்தில் வக்ஃப் வாரியத்தில் பதிவு பெற்ற வக்ஃப் நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம்-30-07-21, தெரியுமா உங்களுக்கு? நாகை மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் பெயர் பெயர் திரு. லியாக்கத் அலி

சனி, 24 செப்டம்பர், 2016

உள்ளாட்சி உங்களாட்சி - நான் உள்ளாட்சித் தலைவரானால் ....

உள்ளாட்சி உங்களாட்சி - நான்  உள்ளாட்சித் தலைவரானால் ....
எழுத்தும்,எண்ணமும்
முகம்மது முபாரிஸ்.மு 
(கோட்டூர் முபாரிஸ்)


உள்ளாட்சி உங்களாட்சி என்ற வாய்ப்பின் மூலம் இந்த போட்டியில் பங்கேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.  இந்த அறிய வாய்ப்பை
ஏற்படுத்திய அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவிப்பதோடு மட்டுமில்லாமல், இதே போன்று வாய்ப்பை அடிக்கடி ஏற்படுத்தி மாணவர்களின் திறமையை உலகம் அறியச் செய்து உதவுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும் இதில் வெற்றி பெறுவதை விடவும் இதில் கலந்து கொள்வதிலேயே பெருமகிழ்ச்சியடைகிறேன். என்னுடைய சில யோசனைகள் சில உள்ளாட்சி அமைப்பில் வர எண்ணியே இந்த கட்டுரையே எழுதுகிறேன்..
                                       
இதில் நான் எடுத்து கொண்ட தலைப்பு "நான் உள்ளாட்சி அமைப்பின் தலைவரானால்" என்பதுதான்!  என்னுடைய சில கருத்துக்களை எட்டுத்து  வைக்குமுன் .... இது யார் மனதையும்  புண்படுத்தும் வகையிலோ,எந்த ஒரு அரசியல் கட்சியையோ குறிப்பிடுவன அல்ல - தற்பொழுது உள்ளாட்சி அமைப்பில் நடைபெற்று கொண்டிருக்கும் நிகழுவ்களை  மட்டும் கூறுபவையே.   உள்ளாட்சி அமைப்பில் உள்ள குறைகளையும்,அவற்றைத் தீர்க்க உதவும்  வகையில் சில யோசனைகளையும், மேலும் சில புதிய மாற்றங்கள் உள்ளாட்சி அமைப்பில் கொண்டு வரலாம் என்பதையும் என் கட்டுரையில் குறிப்பிடுகிறேன். அவற்றை  இங்கு காண்போம்.

முகவுரை:

உள்ளாட்சி உங்களாட்சி - வெறும் பெயர் அளவில் மட்டுமே சொல்லப்படும் நிதர்சன உண்மை.  உண்மையான நிலை என்னவென்றால் உள்ளாட்சி ஒரு சிலருக்கு மட்டுமே சாதகமான நிலையை உருவாக்கி கொண்டு இருக்கிறது. அதாவது, உள்ளாட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்பில் உள்ளவர்களுக்கும் மட்டுமே தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது. ஒரு நபருக்கு ஆயிரம் ரூபாய் பணம் மத்திய அரசிடமிருந்தோ, அல்லது மாநில அரசிடமிருந்தோ அளிக்கப்பட வேண்டுமானால் குறிப்பிட்ட அந்த நபருக்கு ஆயிரம் ரூபாயானது வெறும் நூறு ரூபாயாகவே கிடைக்கிறது.  இதிலும் சிலருக்கு அந்த நூறு ரூபாய் கூட கிடைப்பது அரிது. மீதமுள்ள அந்த பணம் எங்கே போகிறது? அந்த பணம் தான் பயணம் செய்யும் இடங்களில் கணிசமாக சுரண்டபடுகிறது. இது யாரையும் குறிப்பிட்டு சொல்லபடுபவை அல்ல. இந்த அவலம் இந்திய குடிமகன்கள் அனைவரும் அறிந்ததே..        

கிராமங்களே இந்தியாவின் முதுகெலும்பு என்று காந்தி சொன்னது உண்மைதான்.  பெரும்பாலும் அரசியல் கட்சிகளின் முதுகெலும்பும் கிராமம்தான், ஏன் என்றால் கட்சிக்கொடி கட்டுவது முதல் பிரச்சாரத்திற்கு தேவையான மக்கள், மேலும் சுவரொட்டி ஒட்ட ஆட்கள் எல்லாம் கிராம மக்களே.  இந்த கிராம மக்களை பயன்படுத்திக்கொண்டு அரியணை ஏறும் அரசு அடுத்த ஐந்து வருடங்கள் கிராம மக்களைக் கண்டுக்கொள்வதே இல்லை.  ஏன் எந்த நகர மக்களும் இந்த வேலையைச் செய்வது இல்லை. அவனுக்கு தெரியும் நிலை என்னவென்றுஎந்த நகர மக்களும் கட்சிக்கொடி ஒட்டவோ, சுவரொட்டி ஒட்டவோ வருவதில்லை.  எல்லாம் விவசாயிகளும் கூலிவேலை செய்வோரும் படிப்பறிவு அற்ற மக்களும்தான்இதுதான் நிதர்சன உண்மை! 

நான் ஒரு உள்ளாட்சித் தலைவரானால் என்னனென்ன மாற்றங்கள் செய்வேன் என்பதை சொல்வது எளிது! அதை நிறைவேற்றுவது அரிது!  இருப்பினும் மாற்றமே நிரந்தரம்! மாற்றேமே முன்னேற்றம்! மாற்றங்களினாலேதான்  மனித  வாழ்வில்  நாகரிகமும்  வாழ்க்கைமுறையில்  மேம்பாடுகளும்  வளர்ந்தது! ; மாற்றங்கள் நாம் அனைவருக்கும் இன்றியமையாத ஒன்று தான்!  காலசூழ்நிலைகள் மாற மாற பொருளாதரம், வணிகம் வேளாண்மை என அனைத்திலும் மாற்றங்கள் தேவைப்படுகின்றன என்பதை விட இன்றியமையாதது என்றுதான் சொல்ல வேண்டும்.

உள்ளாட்சி அமைப்பின் தலைவர்கள்
        
பெரும்பாலும் உள்ளாட்சி அமைப்பின் தலைவர்கள் போதுமான கல்வி  அறிவும்  பட்டறிவும் பெறாதவர்களாகவே உள்ளனர்.  இக்காலக்கட்டத்தில் தகுதியடைய யாரும் தேர்தலில் நிற்பது இல்லை.  மக்களும் வேட்பாளரைப் பொறுத்து வாக்களிப்பது இல்லைஅவரின் அறிவு, பண்பு, முந்தைய வாழ்க்கை, அவர் சமுதாய அக்கறை கொண்டவரா? மக்கள் நலனில் ஈடுபாடு கொண்டவரா என்பதை எல்லாம் பார்ப்பது இல்லை.  அவர் எந்த கட்சியின் சார்பாக போட்டியிடுகிறார் என்பதைப் பொறுத்துதான் வாக்களிக்கிறார்கள்.  அவர் நம் கட்சி - அவர் யாராக இருந்தாலும் சரி அவரை வெற்றிபெற செய்தே ஆக வேண்டும்.என்று வாக்களித்து விட்டுச்செல்கின்றனர்இந்த நிலை மாற வேண்டும்! மக்கள் கட்சியைப் பாராமல் வேட்பாளரைப் பொறுத்து வாக்களிக்க வேண்டும்!  அவர் நமக்கு சேவை ஆற்றக்கூடியவரா? மக்களின் நலனில் அக்கறை உள்ளவரா என்று பார்த்து வாக்களிக்க வேண்டும்!  சில கிராமங்களில் தலைவர்கள் தங்களின் நிலையையே பார்த்துக் கொள்ள முடியாமல் நோய்வாய் பட்டவர்களாகவும் உள்ளனர்.  மேலும் சிலர் பெயரளவில் மட்டுமே தலைவர்களாக உள்ளனர்.  அவர்களை ஆட்டி வைப்பது கட்சியின் உயர்பதவியில் உள்ளவரோ அல்லது ஒரு எம்.பியோ எம்.எல்.ஏவோதான்.  இந்நிலை மாற வேண்டும். தலைவர்கள் மக்களின் நிலை அறிந்து சேவை செய்யக்கூடியவராகவும், சுயமுடிவுகளை எடுப்பவராகவும்  இருத்தல் அவசியம்.  அப்போது தான் சிறப்பான உள்ளாட்சி அமையும். 

சிறப்பான உள்ளாட்சி அமைப்பு சிறப்பான உள்ளாட்சியை தலைவர்களால்தான் நடத்தமுடியும்.   அதை நடைமுறைப் படுத்தவும் முடியும். எனவே, மக்கள் தங்களின் வாக்குகளை சரியாகவும், நியாமாகவும் செலுத்தினால் மட்டுமே ஒரு சிறப்பான உள்ளாட்சி அமைப்பினை உருவாக்க முடியும்..

பெண் உள்ளாட்சி தலைவர்கள்

"பெண்கள் நம் நாட்டின் கண்கள்" என்று அனைவரும் மகளிர் தினத்திலோ, பொதுக் கூட்டங்களிலோ, மேடைகளிலோ மட்டுமே சொல்கின்றனர்.  ஆனால் அது ஒரு வாக்கியமாக மட்டும்தான் உள்ளது.  உள்ளாட்சியிலும் பெண் தலைவர்கள் உள்ளனர். அவர்கள் பெயரளவில் மட்டுமே தலைவர்களாக உள்ளனர்.  பெரும்பான்மையான பெண்தலைவர்கள் இந்த வகையை சார்ந்தவர்கள்தான.  பெண் தலைவர்களுக்குப் பதிலாக அவர்களின் கணவரோ அண்ணனோ தம்பியோ அல்லது உறவினரோதான் உள்ளாட்சியின் முடிவுகளை எடுக்கின்றனர். நீ இந்த இடத்தில் கையெழுத்துப்போடு இதில் போடாதே என்று சொல்வதும் அவர்கள்தான்இதற்காக நான் அனைத்துப் பெண் உள்ளாட்சித்தலைவிகளையும் குறை சொல்லவில்லை. சில நேர்மையான தலைவிகளும் உள்ளனர்அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். இந்த மாதிரியான அவலநிலை மாற வேண்டும். பெண்கள் தலைவர்களாக ஆனாலும் கூட தங்களின் குடும்ப வேலைகளிலும் ஈடுபடுகின்றனர்ஒரு குடும்பத்தை சரியாக பட்ஜெட் போட்டு நிர்வகிக்கும் பெண்ணால் ஒரு உள்ளாட்சி அமைப்பையும் சரியாக நிர்வகிக்க முடியும். அவர்கள் தானாக சுயமாக முடிவுகளை எடுக்க கூடியவர்களாக இருத்தல் வேண்டும். அப்போதுதான் சமுதாயத்தில் பெண்களின் புகழ் தலைத்தோங்கும். கணவரையோ மைத்துனர்களையோ தங்களின் பணியில் உள்ளே வரவிடாமல் தாமாக முடிவுகளை எடுக்க வேண்டும். சிறந்த உள்ளாட்சி அமைப்பை உருவாக்க வேண்டும். இவ்வாறாக உள்ளாட்சி அமைப்பின் தலைவர்கள் செயல் படவேண்டும். மேலும், உள்ளாட்சி அமைப்பில் அமல்படுத்த வேண்டிய மாற்றங்கள் என்னென்ன என்று இனி  பார்ப்போம்.

வாரந்திர கூட்டங்கள்:

தலைவர்கள் மக்கள் உடனான தங்களின் தொடர்பை - சந்திப்பை அதிகரித்துக் கொள்வதற்காகவே இந்த வாரந்திர கூட்டங்கள்இப்போதும் சில நடைமுறையில் உள்ளன.  அவை கிராம சபா போன்ற கூட்டங்கள்.   அவை சுதந்திர தினத்திலோ,குடியரசு தினத்திலோ ஏற்பாடு செய்யப்படும். இதுபோன்று கூட்டங்கள் நடைமுறையில் உள்ளன என்பது கூட பலருக்குத் தெரியாத நிலைதான். அவற்றில் கட்சியில் உள்ளவர்கள், தொண்டர்கள் மற்றும் உறுப்பினர்கள் மகளிர் சுயஉதவி குழுவில் உள்ளவர்கள் மட்டுமே பங்கேற்கின்றனர்.  இது வயல்வெளியில் வேலை செய்யும் சாதரண மக்களுக்குத் தெரிவதும் இல்லை; பங்கு கொள்வதும் இல்லை.  ஏனென்றால், இதைப் பற்றிய விழிப்புணர்வு அவர்களிடத்தில் இல்லை.  மேலும், இதில் கூறப்படும் வாக்குகள் நிறைவேற்றப்படுகின்றனவா என்பது கேள்விக்குறிதான்.  எனவே, இந்த புதிய அமைப்பு முறை வாராந்திரக் கூட்டங்கள் நடத்துவதன் மூலம் உள்ளாட்சித் தலைவர்களுக்கும் மக்களுக்கும் உண்டான தொடர்பு கூடுகிறது.  இது போன்று கூட்டங்கள் நடைபெறுகிறது என்பதை முதலில் மக்களிடம் பரப்ப வேண்டும். தண்டோரா மூலமாகவோ ஒலிபெருக்கி மூலமாகவோ மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், தலைவரே மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து அதை தீர்க்க வேண்டும்.  மேலும் 
அனைத்து மக்களுக்கும் பேசுவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும்.  குறைகள் அனைத்தும் தீரும் வண்ணம் அமைய வேண்டும். குறைகளை தீர்ப்பதாக தலைவர் உறுதி அளிக்க வேண்டும். அவற்றைச்  செயல்படுத்த முனைய வேண்டும். இது போன்று கூட்டங்கள் நான் உள்ளாட்சி அமைப்பின் தலைவரானால் ஏற்படுத்தப்படும்.

ஊராட்சிப் பணியாளர்கள்:

உள்ளாட்சி அமைப்பில் பணிபுரியும் தூய்மைக் காவலர்கள், துப்புரவுப் பணியாளர்கள், கணக்கர்கள், மேலும் வார்டு மெம்பர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் தங்களின் பணியை மக்களுகாக செய்கிறோம் என்ற,சேவை மனப்பான்மை கொண்டவர்களாக இருத்தல் அவசியம்.  அவர்கள் தங்களின் பணியை செவ்வன செய்ய வேண்டும்.  உள்ளாட்சி அமைப்பின் தலைவர்கள் பணியாளர்களை தங்களின் பார்வையின் கீழ் வைத்து கொள்ள வேண்டும்.  மேலும், அவர்கள் நேர்மை தவறாது மக்களுக்காக பணிபுரிபவர்களாக உள்ளவர்களா இருக்க வேண்டும். நான் எனது உள்ளாட்சியில் உள்ள அனைத்து பணியாளர்கள் உடனும் அடிக்கடி ஆலோசனை கூட்டம் போடுவது, மக்கள் தேவை என்ன என்பதை அறிந்து அதற்கேற்ப நடவடிக்கைகள் எடுக்கவும் வழி வகை செய்வேன்.  மேலும் பணியாளர்கள் தங்களின் பணியில் செய்யும்  தவறுகளை அவர்கள்  உணரும் வகையில் அறிவுறுத்தி மேலும்  தேவையானால்  அவர்களைக் கண்டிப்பதோடு மட்டுமில்லாமல் தகுந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். எனது பணியிலும் ஏதேனும் தவறுகள் நிகழ்ந்தால்  பொது மக்களோ, பணியாளர்களோ நேரடியாக என்னிடம் எடுத்துக் கூறலாம். அவற்றைக் களைய ஆவன செய்வேன்.

வேளாண்மை:

             விவசாயமே நாட்டின் முதுகெலும்பு.  விவசாயத்தை அனைவரும் பேணி போற்றிப் பாதுகாக்க வேண்டும்.  மேலும், அதில் சேவை ஆற்ற வேண்டும் என்பதே என் எண்ணம்உள்ளாட்சி அமைப்பு விவசாயத்திற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும். உழவர்களுக்கான பாதுகாப்புத் திட்டங்கள், கடன் வசதிகள், நவீன இயந்திரங்கள், தரமான விதைகள், பூச்சிக் கொல்லி மருந்துகள் போன்றவைகளை மானிய விலையில் வழங்க வழி வகை செய்ய வேண்டும்.

மேலும், மத்திய அரசு வழங்கும் கடன் திட்டங்கள், மற்றும் இதரத் திட்டங்கள் பற்றி மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது கிகவும் அவசியம். அதோடு மட்டுமில்லாமல் அந்தத் திட்டங்களின் மூலம் மக்கள் பயன்பெறச் செய்யவும் உள்ளாட்சி அமைப்பு வழிவகை செய்ய வேண்டும்.
    
மேலும், மழைக்காலங்களிலும், வறட்சிக்காலங்களிலும் விவசாயிகளுக்கு போதிய நிவாரணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். உள்ளாட்சி அமைப்பானது அதற்குத் தேவையான போதிய ஆவணங்களை மாநில அரசிடமோ, மத்திய அரசிடமோ உடனுக்குடன் அளித்து விவசாயிகளுக்கு போதிய நிவாரணம் அளிக்க வகை செய்ய வேண்டும்.  வெள்ளத்தின் மூலம் மகசூல் இழந்த விவசாயிகளுக்குப் போதிய நிவாரணம் கிடைக்கச் செய்ய வேண்டும்.  சம்பா,குறுவை போன்ற சாகுபடி முறைகள் கிராமங்களில் சரியாக நடை பெறுகின்றனவா என்பதையும் கவனித்துக் கொள்ள வேண்டும். நெல் மட்டுமில்லாமல் பருத்தி, எள், கம்பு, சோளம், கேழ்வரகுமற்றும் இதர தானியங்கள் பயிர் செய்தாலும் அதற்கும் போதிய காப்பீடு வழங்க வேண்டும்.  புதியரக பயிர்களை அறிமுகம் செய்து மகசூல் அதிகம் பெற வழி வகை செய்ய வேண்டும்.  மேலும், சிறந்த சம்பா மற்றும் குறுவையில் அதிக மகசூல் பெற்ற விவசாயிகளைக் கண்டு எடுத்து அவர்களுக்குப் பாராட்டு விழா மற்றும் பரிசளிப்பு போன்றவைகளை நடத்தி விவசாயிகளை ஊக்குவிக்கும் வண்ணம் உள்ளாட்சி அமைப்பு செயல்படுத்த  வேண்டும். இதன் மூலம்,விவசாயிகளுக்கு உண்டான அங்கீகாரம்
மக்களிடயே நிலைபெற வேண்டும். மேலும்,அவ்வப்போது மண் பரிசோதனை செய்யத் தேவையான ஏற்பாடுகளை உள்ளாட்சி அமைப்புச் செய்ய வேண்டும்..

நீர் மேலாண்மை:

''நீரின்றி அமையாது உலகு'' என்ற வள்ளுவனின் வாக்கிற்கு இணங்க, விவசாயத்திற்கு நீர் முக்கிய ஆதாரம்! எனவே, ஆறுகள், ஏரிகள், குளங்கள் முதலியவை தூர்வாரப்பட்டு போதிய நீரை சேமித்து வைக்க உள்ளாட்சி வழிவகை காண வேண்டும்.  நீரை சேமித்து வைப்பதன் மூலம் கோடைக்காலங்களிலும், வறட்சியான காலங்களிலும் பாசனத்திற்குத் தேவையான நீரை அதிலிருந்து பெரும் வண்ணம் அமைக்க வேண்டும். வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்பட்டு மேலும் பராமரிக்கப்பட்டு பாசனத்திற்கு தேவையான நீர் எவ்வகையிலும் தடை படாதவாறு இருக்க உள்ளாட்சி அமைப்பு வழிவகை செய்ய வேண்டும்.  வருடம் முழுவதும் விவசாயம் நடைபெறும் வண்ணம் தேவையான அளவு நீர் கிணறுகள், குளங்கள், ஏரிகள் போன்றவைகளிலிருந்து பெறும் வகையில்  வழிவகை செய்ய வேண்டும்.  மேலும், புதிய வகை நீர்ப்பாசன வசதிகள் அறிமுக படுத்தப்பட வேண்டும்.  சொட்டு நீர் பாசனம் போன்ற பாசன வசதிகளை மானிய விலையில் பெற உள்ளாட்சி அமைப்பு வழி வகை செய்ய வேண்டும். நீர் இருந்தாலே போதும் விவசாயம் வருடம் முழுவதும் நடைபெறும். போர், பம்பு செட்டு போன்ற நீர் பெறும் ஆதாரங்களை மானிய விலையில் பெற உள்ளாட்சி வகைசெய்ய வேண்டும். மேலும், விவசாயத்திற்கு இலவச மின்சாரம் கிடைக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும். மேலும், மழைக்காலங்களிலோ, வெள்ளத்தின்போதோ தேவையற்ற நீரை வெளியேற்ற போதிய வடிகால்களை ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் விவசாயத்தில் தன்னிறைவு அடைய வேண்டும். இதுவே என் எண்ணம்.

கால்நடைகள்:

கால்நடைகளும் தமிழக கலாச்சாரமும் பிரிக்க முடியாத ஒன்று.  கால்நடைகள் மிகவும் அத்தியாவசியமன ஒன்று.  தற்பொழுது நாட்டுவகைக் காளை மாடுகள் மற்றும் பசு மாடுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.  இது போன்ற மாடுகள் அழிக்கப்பட்டு அதற்கு பதிலாக அந்நிய நாட்டு இனமான ஜெர்சி போன்ற மாட்டு வகை இனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நாட்டு வகை மாடுகள் அழிக்கப்படுவதால் நமது கலாச்சாரமும் அழிக்கப்படுகிறது. தற்போது, பல கிராமங்களில் ஜல்லிக்கட்டு, ஏறுதழுவுதல் போன்ற வீர விளையாட்டுகளும் அழிக்கப்பட்டு வருகின்றன; இதற்கு நம் அரசே துணை நிற்கிறது.  இந்த,நிலை மாற வேண்டும். அரசானது இந்த பிரச்சனையில் தலையிட்டு இத்தடையை உடனே,நீக்க வழிவகை செய்ய வேண்டும்.  மேலும்,எந்த தகுந்த ஆதாரமும் இல்லாமல் 
ஜல்லிக்கட்டை தடை செய்ய முடியாது.  தற்போது, ஜல்லிக்கட்டின் மீது உள்ள போலியான குற்றச்சாட்டுகளையும் போக்க வேண்டும். ஒவ்வொரு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்போது அந்தந்த கிராமங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்பு தலையிட்டு காளைகளுக்கு உண்டான மருத்துவ பரிசோதனை மேலும், பங்கு கொள்ளும் வீரர்களுக்கும் மருத்துவப் பரிசோதனை போன்றவைகளை சரியான முறையி
ல் நடை பெறுகின்றனவா என்பதையும் பார்த்துக் கொள்ள வேண்டும்.  மேலும்போட்டியின் போது எந்தவொரு அசம்பாவிதமும் ஏற்படாமலிருக்க போதிய முன்னேற்பாடுகள், போலீஸ் பாதுகாப்பு, மருத்துவ முதலுதவி, ஆம்புலன்ஸ் வசதி
மருத்துவர்கள், மருத்துவப் பணியாட்கள் மேலும், மருந்துகள் போன்றவைகளையும் தயார் நிலையில் உள்ளனவா என்பதையும் உள்ளாட்சி அமைப்பு பார்த்து அனைத்து முன்னேற்பாடு வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும்      

தற்போது நாட்டுவகை கோழியினங்கள் அழிக்கப்பட்டு விட்டன என்றே சொல்லலாம். அதற்குப் பதிலாக பிராய்லர் எனப்படும் அந்நிய கோழியினங்கள் சக்கை போடு போடுகின்றன. இது மனிதர்களில், வெப்பத்தை அதிக மாக்குவதுடன் உடலுக்குக் கேடு விளைவிக்கிறது. இந்நிலை மாற வேண்டும். உள்ளாட்சி அமைப்பு கால்நடை மருத்துவமனைகளை ஏற்படுத்த வேண்டும். தரமான கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு கால்நடைகளுக்கு வரும் நோயை முன்னரே அறிந்து அதைத் தடுக்க வழிவகை செய்ய வேண்டும்.  எந்தவொரு கால்நடையும் நோயினால் இறத்தல் கூடாது.  மேலும்,மருத்துவர்கள் கால்நடை இருக்கும் இடங்களுக்கே சென்று மருத்துவம் பார்க்க வேண்டும்..

சுற்றுப்புறச்சுழல்:

மனிதன் நோய் நொடி இல்லாமல் நெடுநாள் வாழ சுற்றுப்புறச்சூழலே முக்கிய கரணம். மாசற்ற மற்றும் பொளிவுற்ற வளிமண்டலம் கிடைக்க 
அதிகமான மரங்களை வளர்க்க வேண்டும். தரமான ஆக்சிஜன் கிடைத்தாலே போதும்... மனிதனுக்கு எந்த நோயும் வராது. தற்போது, கிராமங்களில் பல மரங்கள், தோப்புகள் அழிக்கப்பட்டு பிளாட்டுகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இந்நிலை மாற வேண்டும்.  கோயில் நிலங்களில், பொது இடங்களில், அரசுக்குச் சொந்தமான இடங்களில் தற்போது பல மரங்கள் மறைமுகமாகவும், போதிய முன்னறிவிப்பு இல்லாமலும் வெட்டப்பட்டு வருகின்றன. இதனை உள்ளாட்சி அமைப்பு கண்டிப்பதோடு மட்டும் அல்லாமல் போதிய அபராதமும் விதிக்க வேண்டும். இது மாதிரியான சூழ்நிலைகள் வராமல் தடுக்க வேண்டும்..

 வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்; மழை பெறுவோம்; என்பது அனைவரும் அறிந்ததே! இருந்தாலும், இந்த முழக்கம் செயல்படுத்தப்பட்டு இருந்தால் தமிழகமே பசுமைக் காடாக மாறி இருக்கும்.  வீட்டுக்கு ஒரு மரம் வளர்த்தாலும் இந்நிலை தற்போது உருவாகி இருக்கும். இது ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பின் மூலமாகவும் செயல்படுத்தப்பட வேண்டும். அனைத்து வீடுகளிலும் மரம் வளர்க்கச் சொல்லி போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், ஒவ்வொரு வீடுகளுக்கும் மரம் வளர்க்க தேவையான மரக்கன்றுகள், கூண்டுகள் போன்ற பொருட்களை கொடுக்க வேண்டும். மேலும்,சாலைகளின் இருபுறங்களிலும் மரக்கன்றுகள் நடுவதோடு அதை உள்ளாட்சி அமைப்பே பராமரிக்கவும் வேண்டும்.  மரக்கன்றுகள் நடபடுவதோடு மட்டுமில்லாமல் அதை முறையாகப் பராமரித்து ஒரு மரமாக உருவாக்க வேண்டும். மேலும், கிராமங்களில் சேரும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என இருவகையாகப் பிரித்து அதை அகற்ற வழிவகை செய்ய வேண்டும்.  மேலும், கடைகளில் பிளாஸ்டிக் பைகளின் புழக்கத்தைக் குறைக்கவும் வழி செய்ய வேண்டும்.  ஒவ்வொரு தெருவிலும் தேவையான குப்பைத் தொட்டிகளை அமைத்தும், அதில் சேரும் குப்பைகளைத் தூய்மைக் பணியாளர்கள் மூலம் அவ்வப்போது சுத்தம் செய்து குப்பைகளை அழித்து விட வேண்டும். மேலும், உள்ளாட்சி அமைப்பிற்குப் போதிய இடமிருப்பின் பூங்கா போன்ற பொழுதுபோக்கு இடங்கள் ஏற்படுத்தப் பட வேண்டும்.  இதில், மரங்கள், பூக்கள் மற்றும் பலவகையானத் தாவரங்களை வளர்த்து பசுமை நிறைந்த ஆக்ஸிஜன் நிறைந்த இடமாக உருவாக்க வேண்டும். இதனை மக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்க வேண்டும். மேலும், இது முறையாக பராமரிக்கப்பட்டும் வரவேண்டும். சமூக விரோதிகளினால் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில், காவலாளியை பூங்காவில் நியமிக்க வேண்டும்.  மேலும், கண்காணிப்புக் கேமராக்கள் போன்றவைகள் ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் பூங்கா பாதுகாப்பாக இருக்கும். இதுவே என் எண்ணம்.

         
கழிப்பிட சுகாதாரம்:

கழிப்பிடம் மக்களுக்கு தேவையான மற்றும் அத்தியாவசியமான ஒன்றுபல கிராமங்களில் இன்னும் கழிப்பறை இல்லாமல் திறந்த வெளியிலே மலஜலம் கழிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், சுற்றுப்புறச்சுழல் மாசுபடுவதொடு மட்டும் அல்லாமல் உயிரை போக்கும் பல நோய்களும் 
மக்களைத் தாக்குகிறது. காலரா, வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் ஒரு காலத்தில் மக்களை கொன்று குவித்தது.  இப்போது உள்ள நவீன மருத்துவங்களால் காலரா போன்ற நோய்கள் தற்போது முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டது. அரசு கழிப்பிடம் கட்ட போதிய மானியம் வழங்கப்படுகிறதுஆனாலும், அந்த பணத்தை செலவுக்கு வைத்துக்கொண்டும் சிலருக்கு லஞ்சம் கொடுத்தும் கட்டாத கழிப்பறையை கட்டியது போன்று காண்பிக்கின்றனர்.  இந்நிலை மாற வேண்டும்கொடுக்கும் பணத்தில் கழிப்பறை சரியாக கட்டப்பட்டதா என்பதைப் பார்ப்பதோடு மட்டுமில்லாமல், கழிப்பறை கட்டாதவர்கள் மீது போதிய நடவடிக்கைகளையும் உள்ளாட்சி அமைப்பு எடுக்க வேண்டும்.  மேலும்,இது தொடர்பான விழிப்புணர்வு - துண்டு பிரசுரம் மூலமாகவோ, பேரணி மூலமாகவோ ஏற்படுத்த வேண்டும்.

ஆரம்ப சுகாதார நிலையங்கள்:

"மக்களின் நலமே மாநில நலம்'' என்பதற்கேற்ப, மக்களின் நலனை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களை ஏற்படுத்தி மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும். தகுதிமிக்க மருத்துவர்கள், செவிலியர்கள் போன்றோர்களை நியமித்து
மக்களுக்கு நாள் முழுதும் சேவை ஆற்ற உள்ளாட்சி அமைப்பு வழிவகை செய்ய வேண்டும்மேலும், தீவிர சிகிச்சைப் பிரிவு போன்ற பிரிவுகள் முறையாக பராமரிக்கப்பட்டு தேவையான மருந்துகள் உள்ளனவா என்பதையும் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும், மருத்துவ மனைக்குத் தேவையான உள்கட்டமைப்பு போன்றவைகள் சரியாக உள்ளனவா என்பதையும் பார்த்துக்கொள்ள வேண்டும்.  மேலும், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் அனைத்தையும் சரி செய்து கொடுக்க வேண்டும். உயிரிழப்பு என்பதே கிராமங்களில் இருத்தல் கூடாது என்பதே என் எண்ணம். மேலும், உயர் சிகிச்சைக்கு பெரிய மருத்துவமனைக்கோ, மருதுவக்கல்லூரிக்கோ கொண்டு செல்லத் தேவையான ஆம்புலன்ஸ் வசதி போன்றவைகளை ஏற்படுத்த வேண்டும். மேலும், பாம்புக்கடி போன்ற விஷங்களை முறிக்க விஷ முறிவு மருந்துகள் போதுமான அளவு உள்ளனவா என்பதையும் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும், காலாவதியான மருந்துகள் முறையாக சோதனை செய்து அகற்றப் பட வேண்டும்.

சில இடங்களில் இது போன்ற மருந்துகள் பயன் படுத்தப்பட்டு மக்கள் உயிரிழக்கவும் நேரிட்டது. இந்நிலை மாற வழி வகை செய்ய வேண்டும்..

மழைநீர் சேகரிப்பு:

மழைநீர் சேகரிப்பு தொன்றுதொட்டே புழக்கத்தில் இருந்தாலும், இது முழுவதுமாக பயன்படுத்தப்பட்டு இருந்தால் தற்போது தண்ணீர் பஞ்சமே 
ஏற்பட்டிருக்காது; நன்னீரில் கடல் நீரும் கலந்திருக்காதுதற்போது பல்வேறு இடங்களில் மண் வளம் சுரண்டபடுவதனாலேயே நன்னீரின் அளவும் குறைந்து காணப் படுகிறது. மேலும், நாம் மழை நீர் சேகரிப்புத் திட்டங்களை மீண்டும் அமல்படுத்துவதன் மூலம் நன்னீரின் அளவு உயர்வதோடு மட்டுமில்லாமல் கடல் நீர் உட்புகுவதைதயும் தடுக்க முடியும். உள்ளாட்சி அமைப்பின் மூலம் மழை நீர் சேகரிப்பு திட்டம் அனைத்து வீடுகளிளும் கட்டாயம் ஏற்படுத்த வகை செய்வதோடு
மட்டுமில்லாமல், இத்திட்டம் ஏற்படுத்தாத வீடுகளின் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்இதுவே என் எண்ணம்.  மழைக்காலங்களில் மழை நீரை சேகரிப்பதன்  மூலம் கோடைக்காலங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்படாமல் காக்க  முடியும்.

பள்ளிக்கல்வி:

கிராமங்களில் தொடக்கப் பள்ளியோ, நடுநிலைப் பள்ளிகளோ செயல் பட்டு வந்தால், அவற்றின் கட்டமைப்பு வசதி, மற்றும் விளையாட்டு மைதானம் போன்றவைகளை உள்ளாட்சி அமைப்பு ஏற்படுத்தித் தர வேண்டும்மேலும், தகுதியான ஆசியர்கள் நியமிக்கப்படுவதுடன் மட்டுமில்லாமல் மாணவர்களுக்குச் சிறப்பான கல்வி அறிவு புகட்டவும் வழிவகை செய்ய வேண்டும். மேலும், சத்துணவு போன்ற திட்டங்களின் மூலம் மாணவர்கள் முழுமையாக பயனடைகின்றார்களா என்பதையும் உள்ளாட்சி அமைப்பு உறுதி செய்திட வேண்டும். சில பள்ளிகளில் சத்துணவு திட்டத்திற்கு உண்டான பொருட்கள் அரிசி, பருப்பு, முட்டை மற்றும் எண்ணெய் போன்றவைகள் மறைமுகமாக வெளிச்சந்தையில் விற்கப்படுகின்றனஇதை உள்ளாட்சி அமைப்பு கண்டிப்பதோடு மட்டுமில்லாமல் இதற்கு ஒத்துழைப்பவர்களின் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பள்ளிகளில் விளையாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்து, உடற்கல்வி ஆசிரியர்களை நியமிப்பதோடு மட்டுமில்லாமல் உடற்பயிற்சிக்குத் தேவையான அனைத்து உபகரணங்கள், விளையாட்டிற்குத் தேவையான விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் அளித்து உள்ளாட்சி அமைப்பு ஊக்கப்படுத்த வேண்டும். மேலும், வருடாவருடம், பள்ளிகளில் விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வெற்றிபெற்றவர்களுக்குப் பரிசுகளை அளித்து  அவர்களை ஊக்கப் படுத்த  வேண்டும்.  மேலும், கலை, அறிவியல் போன்ற பிரிவுகளிலும் பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டி போன்றவைகளை ஏற்படுத்திப் பரிசுகளை அளித்து மாணவர்களை ஊக்க படுத்த வேண்டும்..

அங்கன்வாடி மையங்கள்:

அனைத்து கிராமங்களிலும் அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அதனால், மக்கள் முழுவதுமாக பயனடைகிறார்களா என்றால் அது கேள்விக்குறிதான். மக்களுக்குத் தர வேண்டிய பொருட்களின் அளவு குறைக்கப்பட்டு ஏமாற்றப்படுகிறது. மேலும், பல பொருட்கள் ஓரிரு நாட்கள் மட்டும் கொடுக்கப்பட்டு மற்ற நாட்கள் சரியாகிவிட்டது என சொல்லி வெளிச்சந்தையில் விற்கப்படுகின்றனஅரிசி போன்றவைகள் கேரளா போன்ற மாநிலங்களுக்கு கடத்தப்படுகின்றன.  இந்நிலை மாற வேண்டும்மேலும், இது போன்ற செயல்களில் ஈடுபடுவோரின் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவே, நாம் உள்ளாட்சி அமைப்பில் கொண்டு வர வேண்டியவை..

சமூக வலைத்தளங்கள்:

உள்ளாட்சி அமைப்பிற்கு எனத் தனியாக வலை அமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளாட்சி அமைப்பின் செயல் திட்டங்கள், மேலும் செயல் படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் போன்றவைகள் இடம் பெற்றிருக்க வேண்டும்.   மேலும், பேஸ்புக் போன்றவைகளில் பக்கங்கள் உருவாக்கப்பட்டு உள்ளாட்சி அமைப்பு செய்ய வேண்டிய திட்டங்கள் அனைத்தும்,படங்கள் உடன் அவ்வப்போது பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். மக்கள் தங்களின் கருத்துகளை அதில் நேரடியாகவே தெரிவிக்கலாம். மேலும்,தலைவரின் வாட்ஸ் ஆப் எண் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டு இருக்க வேண்டும்., மக்கள் தேவையான உதவிகளையும், குறைகளையும், குற்றங்களையும் இதில் உடனடியாக தெரிவிக்கலாம்.  யார் எவரென்று பாராமல் நியாயமாக இருப்பின் உடனடியாக தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.  இதன் மூலம் இளைஞர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பிற்கும் இடையே தொடர்பு கூடுகிறது.


கிராம முன்னேற்றம்:

மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரத்தை உயர்த்துவதே இந்த அமைப்பின் நோக்கம். இந்த அமைப்பின் மூலம் செயல் படுத்தப்பட வேண்டியவைகள் எவையெனப் பார்ப்போம்.

  • பால்கொள் முதல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு பால் நியாயமான முறையில் விலையில் கொள்முதல் செய்யப்பட்டு அவை கிராமங்களிலேயே வாங்க-விற்க  பால் நிலையங்கள் போன்ற அமைப்பு ஏற்படுத்தப்படும்..

  • கிராமங்களில் விளையும் காய்கறிகள் அவற்றை உற்பத்தி செய்த விவசாயிகளே நேரடியாக விற்க கிராமச்சந்தை போன்றவைகள் ஏற்படுத்தப்படும்.

  • மேலும், அறுவடைக்காலங்களில் நெல் நியாயமான விலையில் கொள்முதல் செய்ய வழிவகை செய்யப்படும்.

  • பொங்கல் போன்ற நாட்களில்  கலை நிகழ்ச்சிகள் போன்றவைகளுக்கு ஏற்பாடு செய்யப்படும்.

  • மேலும், மதங்கள் பல இருப்பினும் அவையனைத்தையும் பின்பற்றும் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழக்கூடிய ஒரு உள்ளாட்சி அமைப்பை செயல் படுத்தவேண்டும் என்பதே என் எண்ணம்.

இதுவே நான் ஒரு உள்ளாட்சி அமைப்பின் தலைவரானால் செயல் படுத்தவேண்டிய மற்றும்,சேவை ஆற்ற வேண்டிய கடமைகள் ஆகும்.

                                                       நன்றி,
எழுத்தும்,எண்ணமும்                               
முகம்மதுமுபாரிஸ்.மு


      EMAIL:awsomemufa@gmail.com